2 ஆம் கட்ட உள்ளாட்சித் தேர்தல் தொடங்கியது – 1.28 கோடி பேர் வாக்களிக்கின்றனர்

தமிழகத்தில் சென்னை உள்பட 10 மாவட்டங்களை தவிர்த்து ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள 91 ஆயிரத்து 975 பதவி இடங்களை நிரப்புவதற்கான தேர்தல் 2 கட்டங்களாக நடத்தப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது.

அதன்படி 156 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 260 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 2 ஆயிரத்து 546 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், 37 ஆயிரத்து 830 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 4 ஆயிரத்து 700 கிராம ஊராட்சி தலைவர்கள் என மொத்தம் 45 ஆயிரத்து 336 பதவி இடங்களுக்கான முதற்கட்ட தேர்தல் டிசம்பர் 27 ஆம் தேதி நடைபெற்றது. 24 ஆயிரத்து 680 வாக்குச்சாவடிகளில் நடந்த வாக்குப்பதிவில் 76.19 சதவீதம் வாக்குகள் பதிவானது.

இந்தநிலையில் 158 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 255 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 2 ஆயிரத்து 544 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், 38 ஆயிரத்து 916 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 4 ஆயிரத்து 924 கிராம ஊராட்சி தலைவர்கள் என மொத்தம் 46 ஆயிரத்து 639 பதவி இடங்களுக்கான 2 ஆம் கட்டத் தேர்தல் இன்று (திங்கட்கிழமை) நடக்கிறது.

காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த தேர்தலில் 1 கோடியே 28 லட்சம் வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு தகுதியானவர்களாக உள்ளனர். 4 பதவிகளுக்கும் ஒரே நேரத்தில் வாக்குப்பதிவு நடைபெறுவதால், ஒவ்வொரு வாக்காளர்களும் தலா 4 வாக்குகள் பதிவு செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் கட்டத் தேர்தலை விட 2 ஆம் கட்டத் தேர்தலில் பதவி இடங்கள் அதிகம் உள்ளது. எனவே வாக்குப்பெட்டிகள், வாக்குச்சாவடி மையங்கள், காவல்துறை பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி வாக்குப்பதிவுக்கு 93 ஆயிரம் வாக்குப்பெட்டிகள் பயன்படுத்தப்பட உள்ளது. 25 ஆயிரத்து 8 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர், முன்னாள் ராணுவ வீரர்கள் என 61 ஆயிரத்து 4 பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர்.

2 ஆம் கட்டத் தேர்தல் நடைபெறும் வாக்குச்சாவடி மையங்களில் 8 ஆயிரத்து 633 மையங்கள் பதற்றமானவை என்று கண்டறியப்பட்டுள்ளது. எனவே அங்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட உள்ளது. 1,551 வாக்குச்சாவடி மையங்கள் ‘வெப் கேமரா’ வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. 2 ஆயிரத்து 842 வாக்குச்சாவடி மையங்கள் ‘வீடியோ’ பதிவு செய்யப்படுகிறது.

முதற்கட்டத் தேர்தலைக் கண்காணித்தது போன்று சென்னை கோயம்பேட்டில் உள்ள மாநில தேர்தல் ஆணையம் அலுவலகத்தில் இருந்து மாநில தேர்தல் ஆணையர் இரா.பழனிசாமி 2 ஆம் கட்டத் தேர்தல் வாக்குப் பதிவையும் பார்வையிட உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் மாநில தேர்தல் ஆணையர் அலுவலகத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தேர்தல் முடிந்தவுடன் வாக்குப்பெட்டிகள் பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு எடுத்து செல்லப்பட உள்ளது. அங்கு வாக்குப்பெட்டிகள் வைக்கப்படும் அறை ‘சீல்’ வைக்கப்பட்டு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட உள்ளது.

2 கட்டத் தேர்தல்களிலும் பதிவான வாக்குகள் எண்ணிக்கை சனவரி 2 ஆம் தேதி(வியாழக்கிழமை) 310 மையங்களில் நடைபெற உள்ளது.

Leave a Response