
2020 சனவரி 16 ஆம் தேதி பொங்கல் விடுமுறை தினத்தன்று, பிரதமர் மோடி உரை கேட்க 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. அனைத்து மாணவர்களும் தவறாமல் பள்ளிக்கு வருவதை மாவட்டத்தில் உள்ள அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் விடுமுறை என்பது சனவரி 14 ஆம் தேதி போகிப்பண்டிகை, சனவரி 15 ஆம் தேதி பொங்கல் பண்டிகை, சனவரி 16 ஆம் தேதி மாட்டுப் பொங்கல் மற்றும் உழவர் திருநாள், சனவரி 17 ஆம் தேதி திருவள்ளுவர் தினம் என நான்கு நாட்கள் தொடர் விடுமுறை விடப்படுவது வழக்கமான ஒன்று.
அதேபோல் வரும் 2020 ஆம் ஆண்டும் சனவரி 14 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை பொங்கல் விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் திடீரென சனவரி 16 ஆம் தேதி மாணவர்கள் அனைவரும் பள்ளிக்கு கண்டிப்பாக வரவேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. சனவரி 16 ஆம் தேதி பொங்கல் விடுமுறை தினத்தன்று, பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.
இந்த உரையைக் கேட்க 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் அனைவரும் பள்ளிக்கு வர வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. அனைத்து மாணவர்களும் தவறாமல் பள்ளிக்கு வருவதை மாவட்டத்தில் உள்ள அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். மேலும் பள்ளிகளில் தொலைக்காட்சிப் பெட்டிகள் மற்றும் இதர சாதனங்களை பழுது நீக்கம் செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேர்வு பற்றி பிரதமரின் கலந்துரையாடல் இருக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக பள்ளிகளில் உரிய ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கு பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. சென்னை போன்ற பெருநகரங்களில் வசிப்பவர்கள் சொந்த ஊர் செல்வார்கள். அதற்கு இடையூறு செய்யும் விதமாக இந்த அறிவிப்பு உள்ளது என்பதால் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.


