சிங்களத்தில் மட்டுமே தேசியகீதம் – சிங்கள அரசு முடிவால் சர்ச்சை

இலங்கையின் 72 ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் தேசிய கீதம் சிங்கள மொழியில் மட்டுமே இசைக்கப் படும் எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் பிப்ரவரி 4 ஆம் தேதி கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இலங்கையின் 72 ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டத்தை மிகப் பிரமாண்டமாக நடத்த கடந்த வாரம் அமைச்சரவை
ஒப்புதல் வழங்கியது.

சுதந்திரதின நிகழ்வு குறித்து முன்னேற்பாட்டுக் கூட்டம் டிசம்பர் 23 ஆம் தேதி திங்கட்கிழமை பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், உள்ளூராட்சி மற்றும் மாகாண சபை அமைச்சில் நடைபெற்றது.பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது.

இதன்போது சுதந்திர தின தேசிய நிகழ்வில் சிங்கள மொழியில் மட்டும் தேசிய கீதம் இசைக்கவிட முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

முதலாவது இலங்கையின் சுதந்திர தினத்தில் தமிழ் மற்றும் சிங்கள மொழியில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அதன்பின்னர் ஏற்பட்ட அரசியல் பிரச்சினைகளால் சிங்களத்தில் தேசிய கீதம் இசைக்கப்பட்டு வந்தது.

2015 ஆம் ஆண்டு ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் பின்னர் தமிழ் சிங்களம் ஆகிய இரண்டு மொழிகளிலும் தேசிய கீதம் இசைக்கப்பட்டு வந்தது.

இப்போது கோட்டாபய அதிபராகப் பொறுப்பேற்று இருக்கும் நிலையில் மீண்டும் தனிச் சிங்களத்தில் தேசிய கீதம் இசைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழர்களும் சிங்களர்களும் சேர்ந்து வாழமுடியாது என்கிற முடிவுக்கு வலுச்சேர்க்கும் விதமாகவே இம்முடிவு அமைந்துள்ளதாகப் பலரும் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

Leave a Response