முஸ்லிம் உடை அணிந்ததால் அவமதிப்பு – புதுச்சேரி காவல்துறை அராஜகம்

புதுவை பல்கலைக்கழகத்தின் 27 ஆவது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக ஜவகர்லால் நேரு அரங்கத்தில் நேற்று (டிசம்பர் 23) நடந்தது. துணைவேந்தர் குர்மீத் சிங் வரவேற்று பேசினார். குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் கலந்துகொண்டு பட்டங்கள் வழங்கினார்.

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராகப் போராடிவரும் மாணவ, மாணவிகள் புதுவை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவினை புறக்கணிக்கப் போவதாக அறிவித்திருந்தனர்.

இந்த விழாவுக்கு கேரளாவைச் சேர்ந்த மாஸ் கம்யூனிகேசன் முதுகலை பட்டப் படிப்பில் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கத்தை வென்ற மாணவி ரபீக்கா அப்துரகீம் என்பவரும் வந்திருந்தார்.

அவர் முஸ்லிம் உடையான புர்கா அணிந்துவந்ததால் விழா நடந்த அரங்கத்தை விட்டு வெளியே அழைத்து வந்தனர். விழா முடியும்வரை மாணவி ரபீக்கா அப்துரகீமை அரங்கத்திற்குள் அனுமதிக்கவில்லை.குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் அரங்கை விட்டு வெளியே சென்ற பின்னர்தான் அரங்கத்திற்குள் அனுமதித்தனர்.

விழாவில் கல்வித்துறைச் செயலாளர் அன்பரசு, பல்கலைக்கழக இயக்குநர் ராஜீவ் ஜெயின் ஆகியோர் தொடர்ந்து மாணவ, மாணவிகளுக்கு தங்கப்பதக்கம் மற்றும் பட்டங்களை வழங்கினார்கள். அவர்களிடம் இருந்து தங்கப்பதக்கத்தைப் பெற ரபீக்கா அப்துரகீம் மறுத்துவிட்டார். சான்றிதழை மட்டும் பெற்றுக் கொண்டார்.

இதுதொடர்பாக மாணவி ரபீக்கா அப்துரகீம் கூறியதாவது:-

நான் மாஸ் கம்யூனிகேசன் முடித்து முதலிடம் பிடித்துள்ளேன். குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக எமாணவர்கள் போராடிவருகிறார்கள். அவர்கள் மீது காவல்துறையினர் அடக்குமுறையைக் கையாள்கிறார்கள்.

விழா அரங்கிற்குள் இருந்து என்னை எதற்காக அழைத்து வந்தார்கள்? என்று தெரியவில்லை. ஜனாதிபதி சென்ற பின்னர்தான் என்னை உள்ளே செல்ல அனுமதித்தார்கள். தங்கப்பதக்கம் பெற என்னை அழைத்தார்கள். ஆனால் நான் அவமதிக்கப்பட்டதால் தங்கப்பதக்கம் வேண்டாம் என்று கூறிவிட்டேன்.

மாணவர்கள் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக போராடிவருகிறார்கள். மாணவர்கள் தொடர்ந்து அநீதிக்கு எதிராக இருக்கவேண்டும்.

என்னை எதற்காக வெளியே அழைத்துச் சென்றார்கள் என்று இதுவரை எனக்கு தெரியவில்லை. அதற்கான காரணத்தையும் என்னிடம் யாரும் கூறவில்லை.

இவ்வாறு மாணவி ரபீக்கா அப்துரகீம் கூறினார்.

குடியரசுத்தலைவர் கலந்து கொண்ட பட்டமளிப்பு விழாவில் மாணவி வெளியேற்றப்பட்டதும், இதை அவமரியாதையாகக் கருதி தங்கப்பதக்கத்தை பெற மாணவி மறுத்ததும் புதுவை பல்கலைக்கழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனால் இந்தியா முழுவதும் மாணவி ரபிக்காவுக்கு ஆதரவாகவும் காவல்துறையினரின் செயலைக் கண்டித்தும் மக்கள் பேசிவருகிறார்கள்.

Leave a Response