6 சிக்சர் 6 பவுண்டரி அடித்து நொறுக்கிய ரோகித் சர்மா

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்காளதேச மட்டைப்பந்து அணி 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது.

இதில் டெல்லியில் நடந்த தொடக்க ஆட்டத்தில் வங்காளதேச அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

இந்த நிலையில் இந்தியா-வங்காளதேசம் அணிகள் இடையிலான 2 ஆவது 20 ஓவர் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நேற்று (அக்டோபர் 7) நடைபெற்றது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணித் தலைவர் ரோகித் சர்மா முதலில் பந்து வீச்சைத் தேர்வு செய்தார். இதன்படி, வங்காளதேச அணி பேட்டிங் செய்தது.

அந்த அணியின் துவக்க ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. முதல் விக்கெட்டுக்கு அந்த ஜோடி 60 ரன்களை சேர்த்தது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 153 ரன்களை வங்காளதேசம் குவித்தது. இந்திய அணி தரப்பில் சஹால் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதையடுத்து, 154 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி பேட்டிங் செய்தது 15 .4 ஓவர்களில் 154 ரன்கள் எடுத்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.

ரோகித் சர்மா, 6 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகள் என 43 பந்துகளில் 85 ரன்கள் சேர்த்து வெற்றிக்கு அவர் ஒருவரே காரணமாகினார். ஆட்டநாயகன் விருதும் பெற்றார்.

இந்த வெற்றி மூலம் 1 – 1 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை சமன் செய்தது.

Leave a Response