தொடருகிறது ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரிகள் ராஜினாமா – அச்சத்தில் மக்கள்

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்புரிமையை ஆகஸ்டு மாதம் மத்திய அரசு இரத்து செய்தது. இதைக் கண்டித்து டாட்ரா-நாகர் ஹாவேலியில் பணிபுரிந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி கண்ணன் கோபிநாதன் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

கடந்த ஜனவரி மாதம் காஷ்மீரைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரியான ஷா பைசல் தனது பதவியை ராஜினாமா செய்தார். இவர், காஷ்மீர் மக்களுக்கு எதிரான தொடர் கொலை மற்றும் இந்திய முஸ்லிம்கள் ஒதுக்கப்படுவதைக் கண்டித்தும் தனது பதவியில் இருந்து விலகினார்.

அதுபோல் பெங்களூரு தெற்கு மண்டல துணை போலீஸ் கமிஷனராக பணியாற்றிய தமிழகத்தைச் சேர்ந்த ஐ.பி.எஸ். அதிகாரி கே.அண்ணாமலை கடந்த மே மாதம் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இப்போது மேலும் ஒரு ஐஏஎஸ் அதிகாரி பதவி விலகியுள்ளார். கர்நாடக மாநிலம் தட்சிணகன்னடா மாவட்ட ஆட்சியராக இருந்தவர் சசிகாந்த் செந்தில். இவர் 2017 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 10 ஆம் தேதி தட்சிணகன்னடா ஆட்சியராகப் பொறுப்பு ஏற்றார். இவர் பதவி ஏற்ற நாளில் இருந்து பொதுமக்கள் பிரச்சினைகளை, குறைகளைத் தீர்ப்பதில் தீவிரமாகச் செயல்பட்டார் என்கிற பாராட்டைப் பெற்றவர்.

இந்தநிலையில் அவர் நேற்று திடீரென்று தனது பதவியை ராஜினாமா செய்தார். இதுதொடர்பாக அவர் அரசுக்கு ராஜினாமா கடிதம் அனுப்பியுள்ளார். அந்தக் கடிதத்தில் கூறியிருப்பதாவது….

ஐ.ஏ.எஸ். அதிகாரியாகிய நான் ராஜினாமா செய்கிறேன். இது முற்றிலுமாக எனது சொந்த முடிவு மட்டும் தான். நமது ஜனநாயகம் என்பது பன்முகத் தன்மை கொண்டது. ஆனால் அந்த கட்டமைப்பின், அடிப்படை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு சமரசங்கள் செய்யப்படும் இந்தக் காலச் சூழ்நிலையில், நான் பொதுப்பணியில் தொடர விரும்பவில்லை. மேலும் அவ்வாறு பணியில் தொடருவது தார்மீக ரீதியாக நியாயமற்றது.

எனவே ஐ.ஏ.எஸ். பணியில் இருந்து நான் விலகி இருப்பது நல்லது என்று கருதுகிறேன். இனிமேலும் இந்தப் பணி வழக்கமான பணியாக இருக்காது, என்பதை உணர்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ராஜினாமா செய்துள்ள சசிகாந்த் செந்தில் சென்னையைச் சேர்ந்தவர். இவர் 2009 ஆம் ஆண்டு ஐ.ஏ.எஸ். குழுவைச் சேர்ந்தவர்.

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட மண்டல என்ஜினீயரிங் கல்லூரியில் பி.இ. எலெக்ட்ரானிக்ஸ் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்.

பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களில் தொடர்ந்து ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரிகள் பதவி விலகுவது அச்சமூட்டுவதாக இருக்கிறது என்று பலர் கருத்து தெரிவித்துவருகின்றனர்.

Leave a Response