ப.சிதம்பரம் திகார் சிறையில் அடைப்பு – பாஜகவின் பழிவாங்கும் நடவடிக்கை வெற்றி

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு தொடர்பாக முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டோர் மீது சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் தனித்தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.

இந்த வழக்கில் ப.சிதம்பரத்தின் முன்பிணை மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததைத் தொடர்ந்து கடந்த 21-ந்தேதி அவரை சி.பி.ஐ. கைது செய்து, தங்கள் காவலில் வைத்து விசாரித்து வந்தது. 5-வது முறையாக ப.சிதம்பரத்துக்கு சி.பி.ஐ. காவலை 5-ந்தேதி (நேற்று) வரை நீட்டித்து கடந்த 3-ந்தேதி தனி நீதிமன்றம் உத்தரவிட்டது.

ப.சிதம்பரத்தின் சி.பி.ஐ. காவல் முடிவடைந்ததைத் தொடர்ந்து சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று அவரை தனிநீதிமன்ற நீதிபதி அஜய்குமார் குஹர் முன்பு நேர் நிறுத்தினார்கள்.

விசாரணை தொடங்கியதும் சி.பி.ஐ. தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ப.சிதம்பரத்தை நீதிமன்றக் காவலில் வைக்கக் கோரும் மனுவை தாக்கல் செய்து இருப்பதாகக் கூறினார்.

இதைத்தொடர்ந்து, ப.சிதம்பரம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர்கள் கபில் சிபல், அபிஷேக் மனு சிங்வி ஆகியோர், அவரை நீதிமன்றக் காவலில் வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாதாடினார்கள்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி அஜய் குமார் குஹர், சி.பி.ஐ. மனு மீதான உத்தரவை சிறிது நேரத்துக்கு ஒத்திவைப்பதாகத் தெரிவித்துவிட்டு தனது அறைக்குள் சென்றார்.

சுமார் 1 மணி நேரம் கழித்து மீண்டும் வந்து தனது இருக்கையில் அமர்ந்த நீதிபதி, ப.சிதம்பரத்தை வருகிற 19-ந்தேதி வரை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார்.

ப.சிதம்பரத்தை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதைத் தொடர்ந்து, சி.பி.ஐ. அதிகாரிகள் அவரை வாகனத்தில் ஏற்றி டெல்லியில் உள்ள திகார் சிறைக்கு அழைத்துச் சென்றனர். அங்குள்ள சிறை எண் 7-ல் தனி அறையில் அவர் அடைக்கப்பட்டார். சிறை எண் 7 பொருளாதாரக் குற்றவாளிகள் அடைக்கப்படும் சிறை ஆகும்.

இதன்மூலம் ப.சிதம்பரத்தை ஏதாவதொரு காரணத்தில் திகார் சிறைக்கு அனுப்பியே ஆக வேண்டும் என்கிற பாஜக அரசின் பழிவாங்கும் நடவடிக்கை வெற்றியடைந்ததாக விமர்சனங்கள் வருகின்றன.

Leave a Response