விஜயகாந்த் வீடு ஏலத்துக்கு வந்தது ஏன்? – விஜயகாந்த் மனைவி விளக்கம்

விஜயகாந்த்தின் மனைவியும் மைத்துனரும் நடத்தும் கல்லூரிக்காக வங்கியில் கடன் பெற்றிருந்தனர். அதை முறையாகத் திருப்பிச் செலுத்தாததால் வீடு மற்றும் கல்லூரி ஏலத்துக்கு வந்திருக்கிறது.

தே.மு.தி.க. கட்சிப் பணிகளை நிர்வாகம் செய்வதற்கு கடந்த சில ஆண்டுகளாக விஜயகாந்த்துக்குக் கூடுதல் பணம் தேவைப்பட்டது. இந்த நிலையில் அவரது உடல்நலமும் பாதிக்கப்பட்டது. இதற்காக அவர் வெளிநாட்டிற்கு சென்று சிகிச்சை பெற்று வந்தார். இத்தகைய செலவுகள் காரணமாக அவர் கடன் வாங்கும் சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் அண்ணாசாலை கிளையில் அவர் கடன் வாங்கினார். மதுராந்தகம் தாலுக்காவில் மாமண்டூரில் உள்ள ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரி நிலத்தை வங்கியில் அடகு வைத்து அவர் கடன் பெற்றார்.

வாங்கிய கடனைத் திரும்பிச் செலுத்தாததால் விஜயகாந்த்தின் கல்லூரி மற்றும் வீடுகள் ஏலம் விடப்படும் என இந்தியன் ஓவர்சீஸ் வங்கி நாளிதழில் வெளியிட்டது.

இந்நிலையில், பிரேமலதா விஜயகாந்த் இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்திலுள்ள நிறைய பொறியியல் கல்லூரிகள் கடனில்தான் உள்ளது. எங்கள் பொறியியல் கல்லூரியின் வளர்ச்சிக்காக வாங்கிய கடன் தான் அது, சட்டப்பூர்வமாக இந்த பிரச்னையை சந்தித்து மீண்டு வருவோம். விஜயகாந்த் சினிமாவில் நடிப்பது இல்லை, திருமண மண்டபமும் இடிக்கப்பட்டதால் போதிய அளவு வருவாய் இல்லை.

ஒவ்வொரு கால கட்டத்திலும் கடனைத் திருப்பிச் செலுத்தியே வந்தோம், விரைவில் கடனை அடைத்து கல்லூரியை மீட்போம். கல்லூரியை தொடர்ந்து நடத்துவோம், கடன் பிரச்னையை சட்டப்பூர்வமாக எதிர்கொள்வோம். நேர்மையானவர்களுக்கு சோதனைகள் வரும், ஆனால் கடவுள் கைவிடமாட்டார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Response