துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் விசயத்தில் பின்வாங்கியது அதிமுக

ஏப்ரல் 2 ஆம் தேதியன்று அ.தி.மு.க சார்பில், தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியிடம், புகார் மனு அளிக்கப்பட்டது. அதில் திமுக மீது பல குற்றச்சாட்டுகளைக் கூறியிருந்தது.

அவற்றில்,முன்னாள் அமைச்சர் துரைமுருகன் வீடு, அலுவலகம், கல்லுாரி போன்ற இடங்களில், வருமான வரித் துறையினர் சோதனை நடத்தி உள்ளனர். இதில், பெருமளவு பணம் கைப்பற்றப்பட்டு உள்ளது. அவை அனைத்தும், புத்தம் புதிய ரூபாய் நோட்டுகளாக உள்ளன.பணத்தின், வரிசை எண் அடிப்படையில், எந்த வங்கியிலிருந்து, யார் கணக்கில் இருந்து எடுத்து செல்லப் பட்டது என்பதை, விசாரிக்க வேண்டும். இதில் சம்பந்தப்பட்ட, துரைமுருகன், அவரது மகன் கதிர் ஆனந்த் மீது தகுந்த குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

அதைத் தொடர்ந்து வேலூர் தொகுதிக்கான தேர்தல் இரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில், புதியநீதிக்கட்சி தலைவரும், வேலூர் நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. கூட்டணிக்கட்சி வேட்பாளருமான ஏ.சி.சண்முகம் நேற்று வேலூரில் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது……

நாடுமுழுவதும் நாடாளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வருகிறது. வேலூர் தொகுதியில் வருமானவரித்துறை நடவடிக்கையால் பிரசாரம் முடிந்த நிலையில் கடந்த 16 ஆம் தேதி திடீரென தேர்தல் இரத்து செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து 18 ஆம் தேதி தேர்தல் நடத்தவேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தோம். ஆனால் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

அதன்பிறகு மாநில தேர்தல் ஆணையத்திடமும், தமிழக கவர்னரிடமும் மனுகொடுத்தோம். கடந்த 4 நாட்களுக்கு முன்பு டெல்லிக்குச் சென்று தலைமை தேர்தல் ஆணையத்திடமும், வேலூரில் தேர்தல் நடத்தவேண்டிய நிலைமை குறித்து தெரிவித்தோம். அப்போது தேர்தல் நடத்த வேண்டுமென்றால் 2 அல்லது 3 மாதங்களாகும் என்றனர். உடனடியாகத் தேர்தல் நடத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளோம்.

நேற்றுமுன்தினம் ஜனாதிபதிக்கு மனு அனுப்பி உள்ளோம். வேலூர் தொகுதிக்கு உடனடியாகத் தேர்தல் அறிவிக்கவேண்டும். தி.மு.க.வேட்பாளரை தகுதிநீக்கம் செய்யவேண்டும் என்று நாங்கள் சொல்லவில்லை. அவர் தேர்தலில் போட்டியிட வேண்டும். அவரை நாங்கள் தோற்கடிப்போம்.

தபால் ஓட்டுகள் போடப்பட்டுள்ள நிலையில் தேர்தல் நிறுத்தப்பட்டுள்ளது, ஜனநாயக நாட்டில் பிரதமரை தேர்ந்தெடுக்கும் உரிமை வேலூர் தொகுதி மக்களுக்கு இல்லாமல் போய்விடும்.

இன்று (நேற்று) முதல் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடஇருக்கிறேன். முதல் கட்டமாக நிர்வாகிகளை சந்தித்துப் பேச இருக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது, அமைச்சர் கே.சி.வீரமணி, முன்னாள் அமைச்சர் வி.எஸ்.விஜய், முன்னாள் மத்திய அமைச்சர் என்.டி.சண்முகம், அ.தி.மு.க. மாவட்ட பொருளாளர் மூர்த்தி உட்பட பலர் உடனிருந்தனர்.

அதிமுக அமைச்சர்களை வைத்துக்கொண்டு கதிர் ஆனந்த்தை தகுதி நீக்கம் செய்யவேண்டாம் என்று ஏ.சி.சண்முகம் சொல்லியிருக்கிறார்.

இதிலிருந்து கதிர் ஆனந்த் விசயத்தில் அதிமுக பின்வாங்கியிருக்கிறது. இது ஏனென்று புரியவில்லை என்கிறார்கள்.

Leave a Response