அ.தி.மு.க.வைச் சேர்ந்த கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அ.பிரபு, விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினர் வி.டி.கலைச்செல்வன், அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் இரத்தின சபாபதி ஆகிய 3 பேரும் டி.டி.வி. தினகரனுக்கு ஆதரவாகச் செயல்பட்டு வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
எனவே அ.தி.மு.க.வைப் பாதிக்கும் வகையில் கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு அரசு தலைமை கொறடா எஸ்.ராஜேந்திரன் ஏப்ரல் 26 ஆம் தேதி சட்டப்பேரவைத் தலைவர் ப.தனபாலிடம் புகார் மனு அளித்தார்.
அரசு தலைமை கொறடா எஸ்.ராஜேந்திரன் அளித்த புகாரின் அடிப்படையில் மேற்படி மூன்று எம்.எல்.ஏ.க்களிடமும் விளக்கம் கேட்க சட்டப்பேரவைத்தலைவர் ப.தனபால் முடிவு செய்தார். அதன்படி நேற்று மாலையில் 3 சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அவர் பதிவு அஞ்சல் மூலம் நோட்டீஸ் அனுப்பினார்.
அதில், சட்டசபை விதி 7(3) அடிப்படையில் சட்டமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து உங்களை ஏன் நீக்கக்கூடாது? என்பதற்கு நீங்கள் 7 நாட்களுக்குள் நேரில் ஆஜராகி பதிலளிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஒரு கட்சி சார்பாகப் போட்டியிட்டு வெற்றி பெற்ற பிறகு அந்த நபர் வேறு கட்சிக்கு மாறினாலோ அல்லது ஆதரவாக செயல்பட்டாலோ, அவரை தகுதி நீக்கம் செய்வதற்கான காரணமாக அதை எடுத்துக்கொள்ளலாம் என்று இந்திய அரசியல் சாசனத்தில் கூறப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில், சட்டமன்ற உறுப்பினர்கள் 3 பேரிடமும் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.
சட்டப்பேரவைத் தலைவர் நோட்டீசை அனுப்பிய பின்பு தி.மு.க.வின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி,சட்டமன்ற உறுப்பினர் கு.க.செல்வம் ஆகியோர் தலைமைச்செயலகத்துக்கு வந்தனர். அங்கு சட்டசபையின் செயலாளர் சீனிவாசனைச் சந்தித்தனர்.
அப்போது தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதம் ஒன்றை செயலாளர் சீனிவாசனிடம் சமர்ப்பித்தனர். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
கடந்த 24.8.2017 அன்று அ.தி.மு.க.வின் கொறடா கொடுத்த கடிதத்தின் அடிப்படையில் 18.9.2017 அன்று அவசர கதியில் 18 எம்.எல்.ஏ.க் களை சபாநாயகர் பதவி நீக்கம் செய்தார். இந்த நடவடிக்கை, சபாநாயகரின் நடுநிலை குறித்து பல விமர்சனங்களையும் கேள்விகளையும் எழுப்பியது.
இந்தநிலையில், கடந்த 2017-ம் ஆண்டு மார்ச் 20-ந் தேதியன்று 11 எம்.எல்.ஏ.க்கள் மீது பதவி நீக்கம் நடவடிக்கை எடுக்க சில உறுப்பினர்கள் மனு அளித்த போதும்கூட, இந்நாள் வரை எந்த நடவடிக்கையையும் சபாநாயகர் எடுக்கவில்லை.
இதுகுறித்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் இருப்பதை நீங்கள் அறிவீர்கள். இந்த நடவடிக்கையின்மை, சபாநாயகரின் நடுநிலை குறித்து பல விமர்சனங்களையும் கேள்விகளையும் எழுப்பியது.
தற்போது கடந்த ஏப்ரல் 26-ந்தேதியன்று அ.தி.மு.க. கொறடா கொடுத்த கடிதத்தின் அடிப்படையில், 3 எம்.எல்.ஏ.க்களை பதவி நீக்கம் செய்ய 30-ந்தேதியன்று சபாநாயகர் விளக்கம் கேட்டு அறிவிப்பு அனுப்பியுள்ளார்.
22 சட்டசபை தொகுதிகளின் இடைத்தேர்தல் முடிவுகள் மே 23-ந்தேதியன்று வரவுள்ள நிலையில் சட்டமன்றத்தின் பெரும்பான்மையை மாற்றியமைக்கும் விதத்தில் இந்த முடிவுகளை சபாநாயகர் எடுப்பது, சட்டமன்ற மாண்புக்கு கேடாய் விளைந்திடும் என்றும் மக்களாட்சியில் ஒரு சபாநாயகர் இப்படி நடந்தால் அது அவர் நடுநிலையோடு செயல்படவில்லை என்று உணர்த்துகிறது. எனவே சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை முன்மொழிகிறேன். இந்தத் தீர்மானத்தின் வடிவு, “சபாநாயகர் மீது இந்த அவைக்கு நம்பிக்கையில்லை” என்று அமைய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சபாநாயகருக்கு எதிராக தி.மு.க. நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்து இருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இதுகுறித்து சட்ட நிபுணர்கள் கூறுவதாவது….
கடந்த 2016 ஆம் ஆண்டு ஜூலையில் இதுபோன்ற நிகழ்வு ஒன்றில், நீதிபதி கே.எஸ்.கேகர் தலைமையிலான சுப்ரீம் கோர்ட்டின் அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு ஒன்றை அளித்தது. சபாநாயகர் நேபம் ரெபியாவை பதவி நீக்க செய்ய வேண்டும் என்ற தீர்மானம் நிலுவையில் இருக்கும்போது, அவர் 14 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்த விவகாரத்தில் பிறப்பிக்கப்பட்ட தீர்ப்பு அதுவாகும்.
அந்தத் தீர்ப்பில், “சபாநாயகர் ஒருவர், தன்னை பதவி நீக்கம் செய்வதற்கான நடவடிக்கைகளை எதிர்கொண்டுள்ள சூழ்நிலையில், எம்.எல். ஏ.க்களை பதவி நீக்கம் செய்யும் நடவடிக்கையில் இருந்து அவர் விலகி இருக்க வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதனால் அரசு கொறடாவின் புகாரை ஏற்று சட்டப்பேரவைத் தலைவர் நடவடிக்கை எடுக்க இயலாது என்பது தெரிகிறது.
இதனால் அதிமுக தரப்பு அதிர்ச்சி அடைந்திருக்கிறது.