கொல்கத்தா அதிரடி அடங்கிய பஞ்சாப்

மார்ச்27 அன்று ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த ஐபிஎல் லீக் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின.

டாசில் வென்ற பஞ்சாப் அணி தலைவர் அஷ்வின் முதலில் பந்துவீச முடிவு செய்தார். கொல்கத்தா அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. பஞ்சாப் அணியில் மில்லர், வில்ஜோயன், வருண் சக்ரவர்த்தி இடம் பிடித்தனர்.

கொல்கத்தா தொடக்க வீரர்களாக கிறிஸ் லின், சுனில் நரைன் களமிறங்கினர். அறிமுக ஸ்பின்னர் வருண் சக்ரவர்த்தி வீசிய 2வது ஓவரில் சுனில் நரைன் 3 சிக்சர், ஒரு பவுண்டரி விளாசி மிரட்டினார். அந்த ஓவரில் மட்டுமே 25 ரன் கிடைத்தது. கிறிஸ் லின் 10 ரன் எடுத்து ஷமி வேகத்தில் மில்லர் வசம் பிடிபட்டார். நரைன் 24 ரன் (9 பந்து, 1 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி வில்ஜோயன் பந்துவீச்சில் ராகுல் வசம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். ராபின் உத்தப்பா – நிதிஷ் ராணா ஜோடி 3வது விக்கெட்டுக்கு அதிரடியாக 110 ரன் சேர்த்து அசத்தியது.

ராணா 63 ரன் (34 பந்து, 2 பவுண்டரி, 7 சிக்சர்) விளாசி வருண் சுழலில் அகர்வாலிடம் பிடிபட்டார். அடுத்து உத்தப்பாவுடன் இணைந்த ஆந்த்ரே ரஸ்ஸலும் சிக்சர்களாகத் தூக்க, கொல்கத்தா ஸ்கோர் 200 ரன்னை தாண்டியது.

ரஸ்ஸல் 48 ரன் (17 பந்து, 3 பவுண்டரி, 5 சிக்சர்) விளாசி ஆண்ட்ரூ டை பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 218 ரன் குவித்தது.

உத்தப்பா 67 ரன் (50 பந்து, 6 பவுண்டரி, 2 சிக்சர்), கேப்டன் தினேஷ் கார்த்திக் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இதனை தொடர்ந்து 219 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 190 ரன்கள் எடுத்து 28 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

Leave a Response