ஈரோடு விசைத்தறித் துறைக்கு உதவ நிதியமைச்சரை வலியுறுத்திய சத்யபாமா எம்.பி

விசைத்தறி துறை சார்ந்தவர்களுக்கு எந்தவித சிரமமும் இன்றி முத்ரா திட்டக் கடன்கள் கிடைக்கத் தேவையான அறிவுறுத்தல்களை வங்கிகளுக்கு வழங்கக்கோரி மத்திய நிதிஅமைச்சர் அருண் ஜேய்ட்லியிடம் திருப்பூர் எம்.பி சத்தியபாமா 04.01.2019 அன்று நேரில் கோரிக்கை வைத்தார்.

அவரிடம் கொடுத்த மனுவில்…

தமிழ்நாட்டில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள 5000 க்கும் மேற்பட்ட விசைத்தறிக் கூடங்களில் 1 லட்சம் தொழிலாளர்கள் தினசரி அடிப்படையில் வேலை பெற்று வருகின்றனர்.

வேளாண்மைக்கு அடுத்து விசைத்தறித் துறை முக்கியமானதாகத் திகழ்கிறது. சுமார் 3 லட்சம் பேருக்கு மறைமுக வேலைவாய்ப்பையும் வழங்கி வருகிறது.

பிரதம மந்திரி முத்ரா திட்டம் மூலமாக ஒரு லட்சம் ரூபாய் மான்யத்துடன் விசைத்தறித் துறைக்கு வழங்கப்படும் கடன்களை இத்துறை பெற்று பயன்பெற்று வருகிறது. விசைத்தறித் துறைக்கும் இந்த மான்யத்துடன் கூடிய கடன் உதவித் திட்டம் தொடரப்படும் என்ற அறிவிப்பு நல்ல ஊக்கமாக அமைந்துள்ளது.

ஆனால் முத்ரா திட்டத்தின் கீழ், கடன் கோரி விண்ணப்பிக்கப்படும் மனுக்களை ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெரும்பான்மையான வங்கிகள் ஏற்க மறுக்கின்றன.

உதாரணத்திற்கு விசைத்தறி அமைப்பின் 65 உறுப்பினர்கள் முத்ரா திட்டக் கடன் கோரி ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்தனர். நீண்ட நடவடிக்கைகளுக்குப் பிறகு தொடர் முயற்சிகளின் பலனாக இருவர் மட்டுமே கடன் பெற முடிந்தது. சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் குழுவுடன் நடந்த சந்திப்பின் போதும் இது பற்றிய புகார்கள் கூறப்பட்டன. அவர்கள் இந்த பிரச்சனைக்கு தீர்வு காண உறுதி கூறியுள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தில் சுமார் 5 ஆயிரம் விசைத்தறி உரிமையாளர்கள் முத்ரா மூலமாக கடன் கோரி மனுக்களை அளித்தனர். ஆனால் இதுவரை வெறும் 12 பேர் மட்டுமே கடன் பெற்றுள்ளனர்.

இதைத் தொடர்ந்து, வங்கி மேலாளர்களும் மத்திய ஜவுளித்துறை அமைச்சகம் மற்றும் ஆணையத்திடமிருந்து, மானியத்துடன் முத்ரா கடன் வழங்க எவ்வித அறிக்கையும் வரவில்லை என மறுத்துள்ளனர்.

எனவே #விசைத்தறித் துறையினரின் இந்தக் கோரிக்கையை மனிதாபிமானத்துடன் பரிசீலனை செய்து விசைத்தறித் துறை சார்ந்தவர்களுக்கு எந்தவித சிரமமும் இன்றி முத்ரா திட்டக் கடன்கள் கிடைக்கத் தேவையான அறிவுறுத்தல்களை வங்கிகளுக்கு மாண்புமிகு அமைச்சர் அவர்கள் அளிக்கவேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Leave a Response