சனவரி 28,2019 அன்று நடைபெறவிருக்கும் திருவாரூர் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துக் களம்காண்கிறது.
இதில் அக்கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் ‘தமிழ் முழக்கம்’ சாகுல் அமீது, நாம் தமிழர் கட்சி சார்பாகப் போட்டியிடுகிறார் என்று சீமான் 02-01-2019 அன்று அறிவித்தார்.
‘தமிழ் முழக்கம்’ சாகுல் அமீது பற்றிய சிறுகுறிப்பு ஒன்றை நாம் தமிழர் கட்சி வெளியிட்டுள்ளது. அதில்….
திருவாரூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாகக் களமிறக்கப்பட்டிருப்பவர் மாநில ஒருங்கிணைப்பாளர் ‘தமிழ் முழக்கம்’ சாகுல் அமீது (வயது 59). இவரது பிறந்த ஊர், ஒருங்கிணைந்த நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருந்த அந்தனப்பேட்டை எனும் சிற்றூராகும். 1974 – 82 காலகட்டத்தில் திருவாரூரில் வணிக நிறுவனம் நடத்தி அங்கேயே வளர்ந்தவர் என்பதால் இவருக்கு, திருவாரூர் சட்டமன்றத் தொகுதி நன்கு அறிமுகம்.
திராவிடம், கம்யூனிசம், இந்தியம் என்று பல்வேறு கொள்கை பரப்பும் ஆயிரக்கணக்கான நாளிதழ்களும், மாத இதழ்களும் வெளிவருகின்ற தமிழகத்தில் அன்றுதொட்டு இன்றுவரை தமிழினம் சார்ந்து வெளிவந்த மிகசொற்ப இதழ்களில் ஒன்றான ‘தமிழ் முழக்கம் வெல்லும்’ இதழை நடத்தியவர் சாகுல் அமீது.
2002 ஆம் ஆண்டு, தமிழ்த்தேசியத் தலைவர் பிரபாகரன் உலகச் செய்தியாளர்களுக்கு நேர்காணல் அளித்தார். ஈழத்தின் மீதும் தலைவர் மீதும் அளவு கடந்த பற்றுக்கொண்ட சாகுல் அமீது, தலைவரின் அந்த நேர்காணலைத் திறனாய்வு செய்வதற்காக, சென்னை ஆனந்தா திரையரங்கில் ஒரு திறனாய்வுக் கூட்டத்தை ஏற்பாடு செய்ததற்காக, ‘பொடா’ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு ஏறத்தாழ 17 மாதங்கள் சிறைக்கொட்டடியில் வதைபட்டார்.
அதே ஆண்டின் தொடக்கத்தில் பழ.நெடுமாறன் எழுதிய, ‘தமிழீழம் சிவக்கிறது’ எனும் நூலை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்காகத் தனது வணிகக் கிடங்கில் வைத்திருந்ததால், தேசத்துரோக வழக்குத் தொடுக்கப்பட்டுச் சிறைப்படுத்தப்பட்டார். இதுமட்டுமின்றி, பல்வேறு தமிழ்த்தேசியப் போராட்டங்களிலும், தமிழர் பாதுகாப்பு அமைப்பு நடத்திய ஏராளமான போராட்டங்களிலும் பங்கேற்றுச் சிறை சென்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தன்னையொரு தமிழ்த்தேசியவாதியாக அடையாளப்படுத்திக்கொண்டு உறுதியாகக் களத்தில் நின்றதனால் இவரது தொழில்கள் முடக்கப்பட்டு, பெரும் பொருளாதார இழப்பைச் சந்தித்தார்.
பெரும் செல்வந்தராகி, கோடிகளில் புரளும் வாய்ப்பு கிடைத்தபோதும் அது எதிலும் நாட்டங்கொள்ளாது சிறைக்கொட்டடிகளைக் கண்டு கிஞ்சித்தும் அஞ்சாது தமிழ்த்தேசியத்திற்காக அயராது போராடியவர் சாகுல் அமீது. இனத்தின் மீதும் மொழியின் மீதும் இருந்த தணியாத பற்றினால் பாரிய இழப்புகளைச் சந்தித்தபோதும் அதனைத் துளியும் பொருட்படுத்தாது தமிழ்த்தேசியக் களத்தில் தனது பணியினைத் தொடர்ந்தார்.
தமிழ்தேசியத்திற்கென்று ஒரு வலிமையான தேர்தல் அரசியல் கட்சி உருவாகும் முன்னே எவ்வித பொருள், பதவி பற்றற்று 30 ஆண்டுகளுக்கு மேலாகத் தமிழ்த்தேசியக் களத்தில் பணியாற்றிய பேராளுமை. இன்றைக்குத் தமிழகத்தில் இருக்கிற அனைத்துக் கட்சி மற்றும் இயக்கத் தலைவர்களுக்கும் நன்கு அறிமுகமானவர்.
கால் நூற்றாண்டுக்கு மேலாக நேரடி அரசியலில் ஈடுபட்டு அதன் விளைவாகவே பெரும் நெருக்கடிகளையும், இடையூறுகளையும், பொருளாதார இழப்புகளையும், அதனால் குடும்பத்தினர் வருத்தத்திற்குள்ளான போதும் தன் தனிப்பட்ட இழப்புகளால் சோர்வடைந்துவிடாமலும், இன்னல்களுக்கு அடிபணிந்து விடாமலும் தனது வாழ்நாள் முழுவதும் தமிழ் இனத்திற்கான தனது பணியினைத் செவ்வனே தொடர்ந்து வருகிறார்.
அண்மையில் கஜா புயலில் சிக்குண்டு பெரிதும் பாதிக்கப்பட்ட தஞ்சாவூர், திருவாரூர், நாகை உள்ளிட்ட மாவட்ட மக்களுக்கு ஆளும் கட்சிகள் ஆண்ட கட்சிகள் அவற்றிற்குத் துணை போன கட்சிகள் என்று எந்த அரசியல் கட்சியும் செய்யாத அளவுக்கு, தம் ஆற்றலையும் மிஞ்சிய அளவில் விரைந்து செயற்பட்ட நாம் தமிழர் கட்சியின் கஜா புயல் துயர் துடைப்புப் பணிகளில் முன்னின்ற களப்பணியாளர்களில் சாகுல் அமீதும் ஒருவர்.
தமிழ்த்தேசிய அரசியல் மீதும், மண்ணுக்கும் மக்களுக்குமான நாம் தமிழர் கட்சியின் கொள்கை மீதும் அளவற்ற ஈடுபாடும், தெளிவான பார்வையும் கொண்டவர் சாகுல் அமீது.
அந்த வகையில் திருவாரூர் இடைத்தேர்தல் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ‘தமிழ் முழக்கம்’ சாகுல் அமீது அவர்கள் தமிழ்த்தேசிய அரசியல் களத்திற்கான மிகச்சரியான பொருத்தமான தேர்வு.
இவ்வாறு அந்தக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.