உடுமலைப்பேட்டை கெளசல்யா மறுமணம் தொடர்பாக நிறைய சர்ச்சைகள்.
அவை தொடர்பாக தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் சார்பில் வே.பாரதி வெளியிட்டுள்ள தன்னாய்வு அறிக்கை!
1) சக்தி – கெளசல்யா காதலை ஒருகட்டத்திலிருந்து எதிர்த்து வந்திருக்கிறேன். திருமண முடிவைத் தொடக்கத்திலிருந்தே கடுமையாக எதிர்த்தேன். அண்மையில் திருமணம் என்று முடிவெடுத்துச் சொன்ன போதும் அதையும் தவிர்க்கச் சொல்லி அறிவுறுத்தினேன். இதையும் மீறி அவர்கள் உறுதியாக நின்ற போது தடுப்பதை நிறுத்திக் கொண்டேன். கெளசல்யா திருமணத்திற்கு நானும் சுதாகாந்தியும் சென்றதும் நின்று நடத்தியதும் நடந்துவிட்ட தவறுகளை நியாயப்படுத்துவதான தோற்றம் தரும் என்பதைத் தன்னாய்வு செய்ததன் அடிப்படையில் உணர்கிறேன். அதிலும் நான் செல்வது இயக்கம் குறித்தே அந்தப் பார்வையை அளிக்கும் எனும் வகையில் அது தவறு! திருமணத்திற்குப் பிறகு தோழர் தியாகு – தோழர் கொளத்தூர் மணி அமர்வுக்கு முன்முயற்சி எடுத்து அவர்களைப் பொறுப்புக்கூற நானே வழிவகை செய்திருக்கிறேன். யாராக இருந்தாலும் தவறுகளை எதிர்ப்பதில் உறுதியாக இருந்திருக்கிறேன். ஆனாலும் இயக்கப் பொதுச் செயலாளர் என்ற முறையில் திருமணத்திற்குச் செல்வதைத் தவிர்த்திருக்க வேண்டும். இந்த வகையில் தவறு செய்திருப்பதை ஏற்று வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். இவையாவும் ஒருபுறமிருக்க சக்தி – கெளசல்யா ஒற்றுமையாக தவறுகள் களைந்து மீண்டு வர வேண்டும் என்று இயக்கத்தின் சார்பில் விரும்புகிறோம் வாழ்த்துகிறோம்.
2) இயக்கத் தோழர் ஜெ.ஜீவானந்தம் இந்த விடயத்தில் பல்வேறு செய்திகளை அவரின் முகநூல் பக்கத்தில் பதிவிட்டார். நியாயம் வேண்டி நின்றதில் தவறில்லை என்றாலும் பொதுத்தளத்தில் இது குறித்து பதிவிடுவதன் மூலம் இந்தச் சிக்கலை அவர் அணுகியமுறை ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல. உறுதி செய்ய வழியற்ற செய்திகளை உறுதியாக்கிப் பதிவிட்டதும் ஊடகங்களிடம் பேசியதும் சூழலை இன்னும் கடுமையாக்கிவிட்டன. இந்தப் போக்கு கண்டனத்துக்குரியது. தோழர் ஜீவாவும் இவ்வகையில் தான் தவறு செய்திருப்பதைப் புரிந்து கொண்டார். தோழர் ஜீவாவின் இந்தச் செயலுக்கு இயக்கம் பொறுப்பேற்கிறது. அதனடிப்படையில் பொதுச் செயலாளர் என்கிற முறையில் நான் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். இனி இது போன்று நடக்காமல் பார்த்துக் கொள்வேன் என்றும் உறுதியளிக்கிறேன்.
3) தோழர் கொளத்தூர் மணி அவர்கள் நிருபர் ஒருவரிடம் ஜீவானந்தம் ஆர்.எஸ்.எஸ் காரரா எனக் கேட்டதாக வெளியானது. யாரென்றே தெரியாமல்தான் அவர் அப்படிச் சொல்லியிருப்பார், இதை அவரிடம் கேட்கக் கூட வேண்டாம் என்று தோழர் ஜீவானந்தமே சொல்லிவிட்டார். ஆனாலும் தோழர் கொளத்தூர் மணி அவராகவே இதற்குரிய விளக்கத்தைத் தந்தார். “குறிப்பிட்ட நிருபர் ஜெ.ஜீவானந்தம் பிராமண ஆதிக்கம் எனக் கூறியிருப்பதாகச் சுட்டிக்காட்டிய போது எங்கள் தோழர்கள் பார்ப்பன ஆதிக்கம் என்றே கூறுவார்கள், பிராமண ஆதிக்கம் எனச் சொல்கிறார் என்றால் அவர் ஆர்.எஸ்.எஸ் காரரா?” தோழர் கொளத்தூர் மணி அவர்களின் இந்த விளக்கத்தை எமதியக்கம் ஏற்றுக் கொள்கிறது. மேற்கூறிய சிக்கலுக்குத் தீர்வு காணும் முயற்சியில் தன் மதிப்பிடற்கரிய நேரத்தைச் செலவிட்டு ஒத்துழைத்த தோழர் கொளத்தூர் மணி அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
– வே.பாரதி
03.01.2019
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.