உங்கள் ஆட்சியில் யாருக்கும் நல்லநாள் இல்லை – மோடியைச் சாடும் பஞ்சாப் பெண்மணி

பஞ்சாப் முன்னாள் அமைச்சரும் பாஜக பிரமுகருமான லக்‌ஷ்மி காந்த சாவ்லா டிசம்பர் 22 ஆம் தேதி சரயு – யமுனா தொடர்வண்டியில் பயணித்தார். ஏசி 3 ஆம் வகுப்பில் பயணித்த அவர் 10 மணி நேரம் தாமதத்தால் பாதிக்கப்பட்டார்.

அது தொடர்பாக அவர் தனது கைபேசியில் பதிவிட்ட காணொலி ஒன்றை பகிர, அது நாடெங்கும் மிக வேகமாகப் பரவிவிட்டது.

அதில் அவர் பேசியிருப்பதாவது….

இந்த அரசுக்கும் பிரதமர் மோடிக்கும் நான் முன்வைக்கும் ஒரே விண்ணப்பம் என்னைப் போன்ற சாமானிய மக்கள் மீது அக்கறை கொள்ளுங்கள் என்பதே.

கடந்த 24 மணி நேரத்தில் ரயில் பலமுறை பழுதாகி நின்றுவிட்டது. இப்போது வேறு திசையில் தாமதமாக ஓடிக்கொண்டிருக்கிறது. ஆனால், எந்தத் தகவலும் எங்களுக்குச் சொல்லப்படவில்லை. ரயிலில் கூடுதலாக 10 மணி நேரம் செலவழித்த எங்களுக்கு உணவு ஏற்பாடு ஏதும் செய்யப்படவில்லை.

மணிக்கு 120, 200 கி.மீ. வேகத்தில் ஓடும் புல்லட் ரயில் எல்லாம் மறந்துவிடுங்கள். மக்கள் தங்குமிடமில்லாமல் நடைபாதையில் கடுங்குளிரில் தங்கியிருக்கின்றனர். இதை கவனத்தில் கொள்ளுங்கள் பியூஷ் ஜி மற்றும் மோடி ஜி.

சதாப்தி, ராஜ்தானி ரயில்கள் எல்லாம் பணக்காரர்களால் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் ஏழை மக்கள், தொழிலாளர்கள், ராணுவ வீரர்கள் பயன்படுத்தப்படும் சாதாரண ரயில்களின் நிலையைக் கவனியுங்கள்.

எனக்கு ஏற்பட்ட அசவுகரியம் குறித்து ரயில்வே டோல் ஃப்ரீ எண்களில் புகார் அளித்தேன்.ரயில்வே அமைச்சருக்கு மெயில்கூட அனுப்பினேன். ஆனால் பலனில்லை. இதுபோன்ற ரயில்களில் ரயில்வே அமைச்சர் பயணம் செய்து பார்க்க வேண்டும்.

மோடி அவர்களே மக்கள் அதிருப்தியில் இருக்கிறார்கள். நல்ல நாளை யார்தான் அனுபவிக்கிறார்கள் என்பது எனக்கு புலப்படவில்லை. ஆனால், நிச்சயமாக சாமானியன் இல்லை எனக் கூறியிருக்கிறார்.

மோடி அரசின் நிர்வாகத் தோல்விக்கான சான்று இது என்றும் இதை அந்தக்கட்சியைச் சேர்ந்த ஒருவரே வெளிப்படுத்தியிருப்பதன் மூலம் மோடிக்குப் பெரும் பின்னடைவு என்றும் அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள்.

Leave a Response