ஈரோடு திருப்பூரில் கேந்திரிய வித்யாலயா பள்ளி – திருப்பூர் எம்.பி நேரில் கோரிக்கை

கேந்திரிய வித்யாலயா என்பது இந்திய நடுவணரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தால் நிர்வகிக்கப்படும் பள்ளிக் கல்வி அமைப்பு. இது இந்தியாவில் மட்டுமின்றி காத்மாண்டு, மாஸ்கோ, டெஹ்ரான் ஆகிய இடங்களிலும் செயல்படுகிறது.

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் நடுவண் இடைநிலைக் கல்வி வாரியத்தின் பாடமுறையும் பயிற்றுவித்தல் திட்டமும் பின்பற்றப்படுவதால் நடுவணரசு ஊழியர்கள் இடமாற்றம் பெறும் போது குழந்தைகளின் கல்வியில் சிக்கல் நேர்வதில்லை.

திருப்பூர் பாராளுமன்றத் தொகுதிக்குட்பட்ட நகரங்களில் இப்பள்ளி இல்லை.

இதைக்கருத்தில் கொண்டு, திருப்பூர் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் சத்தியபாமா, மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகரைச் சந்தித்துக் கடிதம் கொடுத்துள்ளார். அதில்….

தமிழ்நாட்டில் திருப்பூர் மற்றும் ஈரோட்டில் கேந்திரிய வித்யாலயாக்களை நிறுவுவது தொடர்பான கோரிக்கை வைக்க விரும்புகிறேன்.

திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, கோபிச்செட்டிப்பாளையம், அந்தியூர், பவானி, பெருந்துறை, என ஆறு சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. ஆனால் கோயம்புத்தூர் மற்றும் சூலூரில் கேந்திரிய வித்யாலயாக்கள் அமைந்துள்ளன. திருப்பூர் மாவட்டத்தில் ஒன்றும் ஈரோட்டில் ஒன்றும் கேந்திரிய வித்யாலயாக்கள் அமைவது அவசியமானதாகும்.

சென்னைக்கு அண்மையில் பயணம் மேற்கொண்ட மாண்புமிகு மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் அவர்கள் தமிழ்நாட்டில் கேந்திரிய வித்யாலயாக்கள் இன்னும் அதிக எண்ணிக்கையில் அமைக்கப்படும் என்று உறுதியளித்தார்.

2012-2017 க்கு உட்பட்ட பன்னிரெண்டாவது திட்ட காலத்தில் மேலும் 500 புதிய கேந்திரிய வித்யாலயாக்களைத் திறக்க அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. எனினும் திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களை உள்ளடக்கிய திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி முழுமையிலும் ஒரு கேந்திரிய வித்யாலயா கூட அமைக்கப்படவில்லை.

இந்தப் பிரச்சனையின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு திருப்பூர் மற்றும் ஈரோட்டில் தலா ஒரு கேந்திரிய வித்யாலயாக்களை நிறுவுவது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்குமாறு மாண்புமிகு மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் அவர்களைக் கேட்டுக்கொள்கிறேன்

இவ்வாறு அந்தக் கடிதத்தில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

Leave a Response