விடிய விடிய விழித்திருந்த கோபாலபுரம் – கலைஞருக்கு என்ன ஆச்சு?

இரவு 12 மணிக்கு முன்பு வரை தமிழ்ப் பத்திரிகைகள் தங்கள் பத்திகளை முடிக்காமல் எதுக்கும் விட்டு வைப்போம் என காத்திருக்கின்றனர்.

செய்தித் தொலைக்காட்சிகள் அனைத்தும் கவர் ஸ்டோரிகளை தயார் நிலையில் வைத்து விட்டது.

சென்னை முதல் செங்கோட்டை வரை ஹெலிகாப்டர் விவகாரத்தில் மூக்குடைந்து போயிருக்கும் துணை முதல்வர், அமைச்சர்கள் சூழ கோபாலபுரம் வந்தது தான் Breaking செய்திக்கான தொடக்கமே!

திருமாவளவன், ஜி.கே.வாசன், கமலஹாசன்,சரத்குமார் என அணிவகுத்து நின்ற முக்கியப் பிரமுகர்களின் வாகன இரைச்சல்களுக்கு இடையில்

“வாழ்க வாழ்க வாழ்கவே, டாக்டர் கலைஞர் வாழ்கவே” எனும் முழக்கங்கள் கோபாலபுரத்தின் கோயில் மணியை விட அதிக சத்தத்தை எழுப்புகிறது!

“தலைவருக்கு என்னாச்சு” எனும் பதற்றத்தில் வாகனங்கள் அனைத்தும் கோபாலபுரம் நோக்கியே வருகிறது! “தலைவர் நலமாக இருக்கிறார்” என்ற நம்பிக்கையை தந்து செயல் தலைவர் சென்ற பின்பும் கூட்டம் அலை மோதுகிறது!

மணி 12 ஐ தாண்டியும் கூட்டம் அசரவில்லை, செய்தி சேகரிக்க வந்திருக்கும் ஊடக நண்பர்களுக்கும் சோர்வில்லை!

மணி 2ஐ தாண்டுகிறது! ஜூலை 27!

1969ஆம் ஆண்டு ஜூலை 27ஆம் நாள் திமுகழகத்தின் தலைவராக தலைவர் கலைஞர் பொறுப்பினை ஏற்கிறார்! கிட்டத்தட்ட 49 ஆண்டுகள் கழிந்து 50 வது ஆண்டு தொடங்குகிறது!

பொன் விழா கொண்டாட்டங்களுக்கு உடன்பிறப்புகள் தயாராக வேண்டிய தருணம்! ஆனால், தலையில் கை வைத்து கோபாலபுரம் வீட்டிற்குள் சென்று கொண்டிருக்கும் ஒவ்வொருவரின் முகத்தினரையும் ஏக்கத்தோடு பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்!

ஏக்கத்திற்கு வேலையில்லை!
அரசியல் களத்தில் பல்வேறு மாறுபாடுகள், வேறுபாடுகள் இருப்பினும் தன்னை எதிர்த்தவர்களையும் இன்றைக்கு தன் வீட்டை தேடி வரவழைத்திருக்கும் தலைவர் அவர்!

இதே கோபாலபுரத்தின் வாசலில் தான் அரை நூற்றாண்டு காலத்தின் தமிழக அரசியல் சுற்றிச் சுழன்றது! இந்த வாசலை மிதிக்காத அரசியல் தலைமை ஏது!?

இன்றைக்கு டெல்லி ஏகாதிபத்தியம் தமிழகத்தை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் நிலையை அடியோடு கலைத்து விரட்டியடிக்கும் அவருடைய புதல்வர் “செயல் தலைவர்” அவர்களின் செயல்பாடுகள் அவருக்குவேறெங்கும் இருந்து வந்துவிடவில்லை.

1971இல் பெற்ற தி.மு.க பெற்ற மாபெரும் வெற்றிக்குப் பிறகு 14 ஆண்டுகள் பல்வேறு காரணங்களாலும், துரோகங்களாலும் ஆட்சிக்கு வர முடியாத காலகட்டத்தில் அவர் இந்த இயக்கத்தை வழிநடத்திய விதத்தை கொஞ்சம் ரீவைண்ட் செய்தால் போதும்!

அப்படி, நெருப்பாற்றில் நீந்தி இயக்கம் வளர்த்த தலைவர் இன்றைக்கு பொன் விழா காண்கிறார்!

பாரதப் பிரதமர் மோடி சென்னை வந்து, கலைஞரின் அருகில் அமர்ந்து அவரை தொட்டு நலம் விசாரிக்க முயற்சித்த போது, பின் நின்ற முதன்மைச் செயலாளர் துரைமுருகன் அவர்கள், “அடேய் யார்ரா இவன் தலைவன் மீது கைய வைக்கிறது” என்ற போர்வையில் கொடுத்த லுக் தான் ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் மீதும் இதுவரை தலைவர் கலைஞர் அவர்கள் வைத்திருந்த லுக்!

– நாகா அதியன்

ஜூலை 27 அன்று அதிகாலையில், இன்னும் இரண்டு நாட்களில் தலைவர் புகைப்படம் வெளியிடப்படும் என்றார் திமுக சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன்.

ஆனாலும் 50 ஆம் ஆண்டு பொன்விழாக் கொண்டாட்டங்கள் களைகட்டவில்லை.

Leave a Response