மனம் கனத்தது, கண்ணீர் பொங்கியது – பெருங்கடல் வேட்டத்து ஆவணப்பட அதிர்வு

பல தடைகளைக் கடந்து ஜூலை 8 ஆம்
நாள் 4-30 மணிக்கு கவிக்கோ அரங்கத்தில்,அருள்எழிலன் எழுதி இயக்கிய ‘பெருங்கடல் வேட்டத்து’ ஆவணப்படம் திரையிடப்பட்டது.

அப்படம் குறித்து எழுத்தாளர் சாவித்திரி கண்ணன் எழுதியுள்ள உணர்வுரை…

மனம் ரொம்பவும் கனத்துப் போனது,பல பேர் சுற்றிலும் உள்ளனர் என்பதையும் மீறி கண்களில் கண்ணீர் விசுக்கென்று பொங்கியது.

அருள் எழிலனின்,பெருங் கடல் வேட்டத்து’ என்ற ஆவணப் படம் பார்க்கும் போது ஏற்பட்ட உணர்வுகள் வார்த்தைகளில் வெளிப்படுத்த முடியாதவை…! அப்படி ஒரு ஆழமான பாதிப்பை பெற்றேன்.

ஒகிப் புயலில் கடலில் மாட்டிக் கொண்ட மக்களை காப்பாற்ற மத்திய மாநில அரசுகள், போதுமான ஈடுபாடு காட்டாமல் ,அலட்சியமாக செயல்பட்டது நன்றாகவே தெரியவருகிறது.

காப்பாற்ற வாய்ப்பிருந்தும்,194 மீனவர்களை
கடலுக்கு தாரை வார்த்த அரசின் கையாலாகாத்தனம்
மன்னிக்க முடியாத சோகமாகும்.

மீனவர்களிடம் உள்ள மரபான இயற்கை அறிவை ஆபத்தான கால கட்டங்களில் கூட,பயன்படுத்த மறுக்கும் அரசு நிர்வாகத்தின் ஆணவம் இந்த நாட்டின் மிகப் பெரிய சாபக்கேடு.

மீனவர்கள் மிகக் கஷ்டப்பட்டு கடலில் பிடிக்கும் மீன்களில் 98 சதவிகிதம் வெளி நாடுகளுக்கு அனுப்பபடுகிறது என்ற செய்தி,பொருளாதார ரீதியாக இந்தியா இன்னும் காலனியாதிக்க நிலையில் த்ன்னைத் தானே தாரை வார்த்து வாழ்கிறது என்பதற்கான எடுத்துக் காட்டாகும்.

மீனவர்களிடம் செல்வாக்காக உள்ள பாதிரியார்களை அரசாங்கம் எப்படி கைப்பாவையாக பயன்படுத்துகிறது என்பதும் இந்த ஆவணப்படத்தின் முக்கியமான பதிவுகளாகும்!

ஒளிப்பதிவாளர்களான ஜவஹர், ஜெயக் கொடி,ஜோசப் விஜய் ஆகியோரின்பங்களிப்பு மகத்தானது.
அருள் எழிலனின் இந்த ஆவணப்படதை வீதிதோறும் திரையிட வேண்டும்.

Leave a Response