மீனவர்களை அப்புறப்படுத்தாதீர் – தமிழ்நாடு அரசுக்கு கி.வெங்கட்ராமன் கோரிக்கை

சென்னை மீனவர்களை வாழ்விடத்திலிருந்து அப்புறப்படுத்தாதீர் என தி.மு.க. அரசுக்கு தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் கி.வெங்கட்ராமன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்……

சென்னையில் பட்டினப்பாக்கத்திலுள்ள லூப் சாலையை மீனவர்கள் ஆக்கிரமித்து விட்டதாகக் கூறி, சென்னை உயர் நீதிமன்றம் கடந்த 11.04.2023 அன்று, தானே முன்வந்து வழக்குத் தாக்கல் செய்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் சென்னை பெருநகர மாநகராட்சி, லூப் சாலையிலுள்ள மீனவர்களின் கடைகளை அகற்ற வேண்டுமென ஆணையிட்டனர். இதனை ஏற்றுக் கொண்ட தி.மு.க. அரசு, மறுநாளே (12.04.2023) காவல்துறையின் துணையோடு, அம்மீனவ மக்களின் கடைகளை அடாவடியாக அகற்றி வரும் செயல் கடும் கண்டனத்திற்குரியது.

சிங்காரச் சென்னை, சீர்மிகுச் சென்னை என்ற பெயரில், சென்னையின் உண்மையான மண்ணின் மக்களான மீனவர்களையும், உழைக்கும் மக்களையும் நகரத்தைவிட்டு விரட்டியடிப்பதையே தி.மு.க. – அ.தி.மு.க. திராவிடக் கட்சிகள் தொடர்ந்து செய்து வருகின்றன.

மக்களுக்காகத்தான் அரசும் சட்டங்களும் என்ற அடிப்படை சனநாயக விழுமியத்தைக் கூட உள்வாங்கிக் கொள்ளாமல், மனிதநேயமின்றி மீனவ மக்களின் வாழ்விடத்திலிருந்தே அவர்களை வெளியேற்றுவதற்கான சதித் திட்டத்தின் ஒரு பகுதியாகவே இது நடக்கிறது. இதனை எதிர்த்து, நொச்சிக்குப்பம் உள்ளிட்ட மீனவப் பகுதி மக்கள் போராட்டங்களில் இறங்கியுள்ளனர்.

நொச்சிச் செடிகள் மிகுந்திருந்த பகுதியில் வாழ்ந்து வந்த மீனவர்கள், தங்கள் வாழ்விடத்தை இங்கு அமைத்துக் கொண்டு, அங்கேயே மீன் கடைகளை அமைத்துக் கொண்டு, படகுகளை நிறுத்திக் கொண்டு காலங்காலமாக வாழ்ந்து வருவதன் அடையாளமாகவே “நொச்சிக்குப்பம்” என்ற பெயர் விளங்குகிறது. மீனவ மக்களின் வாழ்விடத்தின் ஒரு பகுதியைத் தான் அவர்கள், சாலை அமைக்க அரசிடம் வழங்கினர். இப்போது அதே சாலையைக் காரணம் காட்டி அவர்களை ஆக்கிரமிப்பாளர்கள் எனக்கூறி, அவர்கள் தம் வாழ்விடப் பகுதியிலிருந்து அவர்களை வெளியேற்றத் துடிப்பது அப்பட்டமான மக்கள் பகைப் போக்கு!

சென்னை தியாகராயர் நகர் உள்ளிட்ட பல்வேறு முதன்மையான பகுதிகளில் வணிக வளாகங்களும், கல்வி நிலையங்களும் பொது இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள நிலையில், அவற்றைத் தகர்த்து அகற்ற வேண்டுமென இதே சென்னை உயர் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்புகளை செயல்படுத்த முன்வராத தமிழ்நாடு அரசு, எளிய மண்ணின் மக்களான மீனவர்கள் மீது மட்டும் நீதிமன்றத் தீர்ப்பைக் காரணம் காட்டிப் பாய்வது, உள்நோக்கமுடையது.

ஏற்கெனவே வளர்ச்சித் திட்டங்கள் என்ற பெயரால், சிங்காரச் சென்னை என்ற பெயரால் மண்ணின் மக்களை மாநகரத்தின் மையப் பகுதியிலிருந்து வெளியேற்றி, சென்னை மாநகரத்தின் மையமான இடங்கள் அனைத்தும் மார்வாடிகள், மலையாளிகள் மயமாகி வருவதைப் பார்க்கிறோம். அந்த வெளியார் மயத்தின் இன்னொருப் பகுதியாகத்தான், மீனவர்கள் அப்புறப்படுத்த வருவதை பார்க்க வேண்டியுள்ளது. சென்னை பெருநகர மாநகராட்சி உடனடியாக இச்செயலை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய வேண்டும். பட்டினப்பாக்கம் லூப் சாலையின ஓரத்தில் வழக்கம் போல், மீனவர்கள் தங்கள் கடைகளை அமைத்துக் கொள்ள அனுமதி தர வேண்டும் என தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Response