காலா தோல்வி- ரஜினியின் திமிருக்கு மக்கள் கொடுத்த அடி

‘காலா’ : ஒரு சிறு குறிப்பு..

‘காலா’ திரைப்படம் உலகெங்கிலும் எதிர்பார்த்த வரவேற்பு பெறாதது என்பது ரஜினியின் திமிருக்கு மக்கள் கொடுத்துள்ள அடி என்றபோதிலும் இன்னொரு பக்கம் அந்தப் படத்தின் தோல்வி வருத்தத்தை அளிக்கிறது. ஏனெனில்..

1.கடந்த பல ஆண்டுகளில் முஸ்லிம்களை எதிராகவும், பயங்கரவாதிகளாகவுமே கமல்ஹாசன், மணிரத்தினம் போன்ற பார்ப்பனர்கள் சித்திரித்துக் கொண்டிருந்த நிலையில், முஸ்லிம் சிறுபான்மையினர் குறித்த ஒரு நல்ல சித்திரத்தை பார்ப்பவர்கள் மத்தியில் வரைந்த படம் இது.

2.தலித் – முஸ்லிம் ஒற்றுமை என்கிற கருத்தாக்கம் மீண்டும் ஒரு புதிய எழுச்சியுடன் மேலுக்கு வந்துகொண்டுள்ள நிலையில் அதற்கு வலு சேர்க்கும் முயற்சி இது.

முதன் முதலில் இந்தக் கருத்தாக்கத்தை முன்வைத்தவரும் நம் தமிழகத்திலிருந்து சென்று மும்பையில் ஒரு தாதாவாக வாழ்ந்த ஒரு முஸ்லிம்தான். ஹாஜிமஸ்தான். நெருக்கடி நிலை காலத்தில் சிறையிலிருந்து வெளிவந்த பின் அவர் போக்கில் ஒரு மாற்றம் ஏற்பட்டது. மும்பையில் தலித்களையும் முஸ்லிம்களையும் இணைத்து “தலித் முஸ்லிம் சுரக்‌ஷா சமிதி” (DMSM) என்றொரு அமைப்பை உருவாக்கினார்.

இப்படியான ஒரு ஒற்றுமை உருவாவதை அரசால் சகித்துக் கொண்டிருக்க முடியவில்லை. சல்மான் ருஷ்டியின் Satanic Verses நாவலுக்கு எதிராக ஒரு பேரணியை மும்பையில் அறிவித்தது DMSM. அதில் திட்டமிட்டுக் கலவரத்தைத் உருவாக்கி, காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அன்று 11 பேர்கள் (என்று நினைவு) கொல்லப்பட்டனர்.

இது குறித்து அப்போது ஏதோ ஒரு பத்திரிக்கையில் எழுதினேன். எனது ‘இந்துத்துவத்தின் பன்முகங்கள்’ நூலில் அது உள்ளது.

ஒரு நல்ல அரசியலை முன்வைத்த ஒரு திரைப்படம் இப்படி ராஜனியால் பாழ்பட்டது வருத்தத்தை அளிக்கிறது. பெரிய சூப்பர் ஸ்டார்கள் இல்லாமலேயே இதுபோன்ற திரைப்படங்கள் நல்ல வரவேற்பிக்குள்ளாகிற சூழலில் நல்ல கருத்துக்களை மக்களிடம் கொண்டு செல்ல ரஜினி போன்றவர்களை நம்பத் தேவையில்லை.

ஹாஜி மஸ்தான் பற்றி நான் இங்கு குறிப்பிட்டுள்ளது சும்மா ஒரு வரலாற்று நினைவுதான். மற்றபடி அவரை ஒரு ரோல்மாடலாகவோ, அல்லது Satanic Verses நூல் தடை தொடர்பாக அவர் பேரணி நடத்தியது எல்லாம் சரி எனச் சொல்வதற்காகவோ அல்ல. அந்த நூல் பிறகு பல நாடுகளிலும் தடை செய்யப்பட்ட போதிலும், முதன் முதலில் தடை செய்யப்பட்டது இந்தியாவில்தான் என்றும் நினைவு.

– அ.மார்க்ஸ்

Leave a Response