ஸ்வீடனுக்கு எதிரான போட்டியில் ஜெர்மனி அபார வெற்றி

நடப்பு சாம்பியனும், தற்போது உலகின் நம்பர் ஒன் அணியாகவும் இருக்கும் ஜெர்மனி சோதனையான நேரத்தில் ஜூன் 23 அன்று களமிற்கியது.

Group F பிரிவில் இருக்கும் ஜெர்மனியும், ஸ்வீடனும் இதுவரையிலும் ஒரு போட்டியில் கலந்து கொண்டுள்ளன. இதில் ஜெர்மனி மெக்சிகோவுடன் மோதி 1-0 என்ற கோல் கணக்கில் தோல்வியைத் தழுவியிருக்கிறது.

ஸ்வீடன் தென் கொரியாவுடன் மோதி வெற்றி பெற்று 3 புள்ளிகளுடன் இருக்கிறது.
இன்று நடைபெற்ற ஒரு ஆட்டத்தில் மெக்சிகோ, தென் கொரியாவை வீழ்த்தி கூடுதலாக 3 புள்ளிகள் பெற்று அடுத்தச் சுற்றுக்குத் தகுதி பெற்றேவிட்டது.

இந்தச் சூழலில் இந்தப் போட்டி நடைபெற்றதால் இதில் வெற்றி பெற்றால்தான் ஜெர்மனி அடுத்தச் சுற்று பற்றியே சிந்திக்க முடியும் என்கிற நிலைமை..!

ஆட்டம் துவங்கியதில் இருந்தே ஜெர்மனி வீரர்களின் ஆதிக்கமே அதிகமாக இருந்தது என்னவோ உண்மைதான்.

3, 5, 7 ஆகிய நிமிடங்களில் வரிசையாக வந்து கோல் அடிக்கும் முயற்சியை மேற்கொண்டார்கள் ஜெர்மானியர்கள். ஆனால் கடைசி நேர சொதப்பலினாலும், பாஸிங்கிற்கு ஆள் இல்லாததினாலும் அத்திட்டம் தோல்வியடைந்தது.

12-வது நிமிடத்தில் ஸ்வீடன் வீரர் டிமோ வெர்னர் திடீரென்று தனக்குக் கிடைத்த பந்தை உருட்டியபடியே மிக வேகமாக ஜெர்மனியின் கோல் போஸ்ட்டை நோக்கி ஓடி வர. அவருடனேயே ஓடி வந்த இரண்டு ஜெர்மனி வீரர்கள் ஷாட் அடிக்க முயலும்போது அவரது முயற்சியைத் தடுத்து நிறுத்தி அவரைக் கீழே தள்ளிவிட்டார்கள்.

ஆனால் இதனை அம்பயர் பவுலாகவும், பெனால்டியாகவும் நினைக்காமல் தொடர்ந்து பந்தை உருட்ட அனுமதித்தார்.

சம்பந்தப்பட்ட வீரர் கதறு, கதறு என்று கதறியும் அவருக்குரிய நியாயம் கிடைக்கவில்லை. நிச்சயமாக இந்த இடத்தில் பெனால்டி கொடுத்திருக்க வேண்டும். நம்மூர் கோர்ட் மாதிரியே இங்கே அம்பயர்களுக்குள்ளும் ஆளுக்கேத்தாப்புலதான் நீதி கிடைக்கும்போல..!

இடையில் ஜெர்மனி வீரர் ஒருவருக்கு மூக்கு உடைந்து ரத்தம் கொட்டி உடனடியாக மைதானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார். அவருக்கு பதிலாக பதிலி வீரர் களமிறக்கப்பட்டார்.

32-வது நிமிடத்தில் சட்டென்று ஜெர்மனி வீரர்களிடமிருந்து பறித்த பந்தை பாஸிங் மூலமாக பாதி மைதானம் தாண்டி ஜெர்மனி கோல் பகுதியில் நின்று கொண்டிருந்த ஸ்வீடன் வீரர் தனது சக வீரரான Ola toivenon-க்கு பாஸ் செய்ய.. அவர் அதை மின்னல் வேகத்தில் உருட்டிச் சென்றார்.

இரண்டு ஜெர்மன் வீரர்கள் பதறிப் போய் அவரை விரட்டியபோதும் ஜெர்மானிய கோல் கீப்பர் முன்னால் வந்து நின்று பந்தை தடுக்கப் போயும், அவர்களையெல்லாம் மீறி மிக லாவகமாக அந்தப் பந்தை தூக்கியடித்து கோல் போஸ்ட்டுக்குள் தள்ளினார் Ola toivenon.

ஸ்வீடன் அணியின் இந்த முதல் கோலினால் ஸ்டேடியமே அதிர்ந்தது. அத்தனை மின்னல் வேக கோல் இது..!

இதையடுத்து வழக்கம்போல வீராவேசம் கொண்டு ஜெர்மன் வீரர்கள் கிளம்ப.. அவர்களுக்கும் இரண்டு அழகான வாய்ப்புகள் கிடைத்தன.

38-வது நிமிடத்தில் கோல் போஸ்ட்டின் மிக அருகில்வரைக்கும் போய் கோல் போட முனைந்தனர் ஜெர்மன் வீரர்கள். ஆனால் கடைசி நேர குழப்பத்தில் பந்து கோல் போஸ்ட்டை உரசிக் கொண்டு வெளியேறிவிட்டது.

இடைவேளையின்போது எக்ஸ்ட்ரா நேரமான 2 நிமிடம் முடியும் நேரத்தில் ஸ்வீடன் அணிக்கு ஒரு கோல் அடிக்கும் வாய்ப்பு கிட்டியது. ஆனால் அதை கோலாக்க முடியவில்லை. பந்து கோல் கீப்பரிடமே அடைக்கலமானது.

வழக்கம்போல அதிரடியையும், அடிதடியையும், அடாவடியையும் இடைவேளைக்கு பின்புதான் பார்க்க முடியும் என்று தோன்றியது. அப்படியேதான் நடந்தேறியது.

இடைவேளைக்கு பின்னான ஆட்டத்தில் 47-வது நிமிடத்தில் ஜெர்மனி அணி வீரர் மார்க்கோ ரியோஸ் அழகான பாஸிங்கில் கிடைத்த பந்தை கோல் போஸ்ட்டுக்குள் அடித்து, அதுவும் தனது இடது காலால் பந்தை தட்டி கோலாக்கிவிட்டு மொத்த ஜெர்மனியையும் எழுப்பிவிட்டார்.

இப்போது 1-1 என்ற கோல் கணக்கில் இரு அணிகளும் சமமாக இருக்க.. போராட்டம் மென்மேலும் தொடர்ந்தது..!

அடுத்த நிமிடமே மீண்டும் ஜெர்மன் வீரர் டோனி க்ரூப்ஸ அடித்த ஷாட் வீணாகிப் போனது. இதற்கடுத்த நிமிடத்தில் ஜெர்மனிக்குக் கிடைத்த ஒரு ப்ரீ கிக்கில் அடிக்கப்பட்ட பந்தும் உயரே பறந்து வெளியேறியது.

51-வது நிமிடத்தில் ஸ்வீடன் வீரர் Albin Ekdal, ஜெர்மன் வீரர் Thomas Mueller-ஐ கீழே தள்ளி விழ வைத்தமைக்காக முதல் மஞ்சளட்டையைப் பெற்றார்.

பந்தை ஜெர்மனி வீரர்கள் விடாமல் தங்களுக்குள்ளேயே பாஸ் செய்து கொண்டிருந்ததால், அடுத்தடுத்து கோல் முயற்சிகள் ஸ்வீடனின் கோல் போஸ்ட் பகுதியிலேயே நடந்தன.

56-வது நிமிடத்தில் ஜெர்மன் வீரர் ராபின் ஆல்சன் மிகவும் பிரயத்தனப்பட்டு கோல் போட முயற்சித்தும் தோல்வியடைந்தார்.

60-வது நிமிடத்தில் இருந்து 65-வது நிமிடங்கள்வரையிலும் தொடர்ச்சியாக 5 நிமிடங்கள் ஸ்வீடன் கோல் பகுதியை முற்றுகையிட்டிருந்தனர்

ஜெர்மன் வீரர்கள். பந்து பறப்பதும், கோல் கீப்பரால் தடுக்கப்படுவதும், பின்பு கார்னருக்குச் செல்வதும், ஸ்வீடன் வீரர்களால் பறிக்கப்படுவதும், மீண்டும் ஜெர்மன் வீரர்களின் கால்களுக்கு பந்து வருவதுமாக ஒரு தொடர் போராட்டமே நடந்து முடிந்தது. இதில் ஜெர்மனி வீரர்களுக்கு பலன் கிடைக்கவில்லை.

2 நிமிட இடைவெளிக்கு பிறகு மீண்டும் ஜெர்மனி வீரர் டோனி க்ரூஸ் கோல் போட முயல.. அது மயிரிழையில் தப்பி ஜெர்மன் ரசிகர்களை டென்ஷனாக்கியது.

70-வது நிமிடத்தில் ஓடிக் கொண்டிருந்த ஸ்வீடன் வீரர் Emil Forsberg-ஐ கவட்டைக் கால் கொடுத்து கீழே தள்ளிய ஜெர்மனி வீரர் Jerome Boateng மஞ்சளட்டையை பரிசாகப் பெற்றார். எதுக்காச்சும் கவலைப்படணுமே.. ஓகே.. ஓகே.. நான்தான் என்று சிரித்துக் கொண்டே தலையாட்டிவிட்டுப் போனார் அவர்.

73-வது நிமிடத்தில் ஒரேயொரு செகண்ட் தாமதம் செய்திருந்தால் ஜெர்மன் அணி சேம் சைடு கோல் போட்டிருக்கும். ஆனால் சட்டென்று காலை நுழைத்த ஒரு ஜெர்மன் வீரரால் பந்து அவுட் சைடுக்கு போக ஸ்வீடனுக்கு கோல் வாய்ப்பு வீணாணது.

75-வது நிமிடத்தில் கார்னக் ஷாட்டில் கிடைத்த பந்தை ஸ்வீடன் வீரர் Emil Forsberg தொலை தூரத்தில் இருந்தே அடிக்க அது ஜெர்மானிய கோல் கீப்பரின் கைகளுக்கு சரியாகச் சென்று அமர்ந்தது.

தொடர்ச்சியாக இரு தரப்பினருமே ஆக்ரோஷமாக பந்தை தேடிப் பிடிக்கும் வேலையில் ஈடுபட்டார்கள். கேலரியில் இருந்த அவர்களது ரசிகர்களோ இவர்களைவிடவும் டென்ஷனாக இருந்தார்கள்.

81-வது நிமிடத்தில் ஜெர்மன் வீரர் டிமோ வெர்னரின் கோல் போடும் முயற்சியும் தோல்வியடைந்தது.

82-வது நிமிடத்தில் ஜெர்மன் வீரர் Jerome Boateng முரட்டுத்தனமான ஆட்டத்திற்காக இரண்டாவது மஞ்சளட்டையை பெற்றதால் அது சிவப்பு அட்டையாக மாற ஆடுகளத்தைவிட்டு வெளியேற்றப்பட்டார். இதனால் ஜெர்மன் அணி 10 வீரர்களோடு விளையாட வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானது.

இப்போது கிடைத்த ப்ரீ கிக்கில் அடிக்கப்பட்ட ஷாட்டில்கூட பந்து ஜெர்மனி கோல் கீப்பரின் கைகளிலேயே போய் விழுந்தது.

87-வது நிமிடத்தில் ஜெர்மன் வீரர் டோனி க்ரூஸ் அடித்த அழகான ஷாட்டும் கோல் போஸ்ட்டை தொடாமலேயே போய் வீணானது.

இடைவேளைக்கு பின்பு நிறைய கட்டப் பஞ்சாயத்துக்கள் நடந்ததால் கூடுதலாக 5 நிமிடங்கள் கிடைத்தன.

கூடுதல் நேரத்தின்போது 1.35-வது நிமிடத்தில் ஜெர்மன் வீரர் ஜூலியன் பண்டிட் அடித்த பந்து கோல் போஸ்ட்டைத் தொட்டுவிட்டு வெளியேறியது.

3.45-வது நிமிடத்தில் ஸ்வீடன் வீரர் John Guidetti அடித்த பந்தும் ஜெர்மனியின் கோல் கீப்பரால் கைகளால் தடுக்கப்பட்டு வீணானது.

இதற்கடுத்து ஜெர்மனி வீரர் டோனி க்ரூஸை ஸ்வீடன் வீரர்கள் தேவையில்லாமல் கட்டைக் கால் கொடுத்து தடுத்ததினால், அந்த இடத்திலேயே ப்ரீ கிக்கிற்கு வாய்ப்பு கிடைத்தது.

கிடைத்த வாய்ப்பை கச்சிதமாக பயன்படுத்தி ஒரு மேஜிக்கல் கோலை அடித்தார் ஜெர்மனி வீரர் டோனி க்ரூஸ். இதுதான் ஜெர்மனியை அடுத்த சுற்றுக்குக் கொண்டு போகப் போகிறது என்பதால் இந்தக் கோலை கொண்ட்டாட்டமாகவே கொண்டாடினார்கள் ஜெர்மன் வீரர்களும், ரசிகர்களும்..!

மிக அற்புதமான கோல் இது. நிச்சயமாக இது கடவுளின் அனுக்கிரகம் அல்லது அதிர்ஷ்டம் இருந்தால் மட்டுமே கிடைக்கக் கூடியது..! அத்தனை அழகாக கோல் போஸ்ட்டுக்குள் நுழைந்தது அந்த பந்து..!

இத்தனை சூழலுக்குப் பிறகும் ஸ்வீடன் வீரர் Sebastian Larsson முரட்டுத்தனத்துடன் திரும்பவும் வாலாட்ட மஞ்சளட்டையை எச்சரிக்கையைப் பெற்றார்.

கூடுதல் நேரம் 5 நிமிடங்கள் என்றிருந்தது கடைசியாக 7 நிமிடங்களாக மாறிப் போயிருந்தது. ஆட்டம் முடிந்ததற்கான விசில் ஊதிய பின்பு ஒரு பக்கம் ஜெர்மன் வீரர்கள் கொண்டாட்டத்தில் இறங்கினாலும் தோல்வியைத் தழுவிய ஸ்வீடன் வீரர்கள்.. பாவம்.. அப்படியே மைதானத்தில் அமர்ந்துவிட்டார்கள்.

உண்மையில் அவர்களும் கடுமையாகத்தான் மோதினார்கள்.. விளையாடினார்கள்..! ஆனால், அவர்களுக்கு கடைசி நேர அதிர்ஷ்டம் கிட்டவில்லை.. அவ்வளவுதான்..!

இப்போது குரூப் எஃப் பிரிவில் மெக்சிகோ 6 புள்ளிகள் பெற்று அடுத்தச் சுற்றுக்குத் தகுதி பெற்றுவிட்டது. ஆனால் அடுத்து தகுதி பெறும் அணி எது என்பதில் ஜெர்மனிக்கும், ஸ்வீடனுக்கும்தான் போட்டி இருக்கிறது.

இப்போது இரு அணிகளுமே 3 புள்ளிகள் எடுத்து சம அளவில் இருக்கின்றன. அடுத்தப் போட்டிகளில் யார் அதிக கோல் அடித்து வெற்றி பெறுகிறார்களோ அவர்களே அடுத்தச் சுற்றுக்குள் நுழைவார்கள். ஆக, ஜெர்மனியும், ஸ்வீடனும் அடுத்த போட்டிகளில் ஜெயித்தே தீர வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றன.

– சரவணன்

Leave a Response