சிறுத்தைப் புலியைக் கொன்று நாம் சிறுமைப்பட்டுவிட்டோம் என்று முன்னாள் அமைச்சரும் சுற்றுச்சூழலியலாளருமான பொ.ஐங்கரநேசன் வேதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில்…
கிளிநொச்சியில் இன்று (21.06.2018) அநியாயமாகச் சிறுத்தைப் புலி ஒன்று படுகொலை செய்யப்பட்டுள்ளது. கொலையுண்டுகிடக்கும் அந்தச் சிறுத்தையைப் பார்க்கும்போது உண்மையில் மனது வலிக்கிறது.
உலகின் பல நாடுகளில் சிறுத்தைகள் காணப்பட்டாலும், இலங்கையில் காணப்படும் சிறுத்தை இலங்கைக்கே உரித்தான ஒரு உப இனம் ( Panthera pardus Kotiya) ஆகும். இலங்கைக் காடுகளில் அண்ணளவாக 1000 சிறுத்தைகள் மட்டுமே இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.
அழிந்துவருகின்ற உயிரினங்களில் ஒன்றாகப் பட்டியலிடப்பட்டுள்ள இச் சிறுத்தைகளில் ஒன்றே இன்று படுகொலை செய்யப்பட்டுள்ளது. சில தினங்களுக்கு முன்னர், முல்லைத்தீவில் படையினராலும் சிறுத்தைப் புலி ஒன்று கொல்லப்பட்டுள்ளது.
இலங்கையில் காட்டுராஜா சிங்கம் அல்ல, சிறுத்தைதான் ராஜா. இலங்கையில் இல்லாத சிங்கத்தை சிங்கள மக்கள் தங்கள் இனத்தின் அடையாளமாக தேசியக்கொடியில் வாளேந்த வைத்திருக்கிறார்கள். சிங்கத்தைத் தேசியக் கொடியில் இடம்பெறச்செய்த பின்னர் இலங்கை அரசு தனது நாட்டுக்கு என்று ஒரு தேசிய விலங்கைத் தெரிவுசெய்யவிரும்பவில்லை.
ஏனெனில் இலங்கைக்கு தேசிய விலங்கைத் தெரிவு செய்வதாக இருந்தால் சிறுத்தைப்புலியைத்தான் தெரிவு செய்யவேண்டும். ஆனால் இலங்கை அரசு சிங்கத்தை மீறி சிறுத்தைப்புலியை பெருமைப்படுத்தவிரும்பவில்லை. இதனால்தான் தேசியவிலங்கு இன்றும் நிரப்பப்படாமல் வெற்றிடமாகவே உள்ளது.
ஆனால் நாமும் தமிழர்தாயகத்துக்குரிய தேசியவிலங்காகச் சிறுத்தையைத் தெரிவு செய்து அதனைப் பெருமைப்படுத்தியதோடு, அதனால் நாமும் பெருமையடைந்தோம். அந்தச் சிறுத்தைகளில் ஒன்றைக் கொன்று இப்போது சிறுமைப்பட்டுவிட்டுவோம்.
என்னைச் சிறுத்தைப் புலி ஒன்று தாக்கவரும்போது, சிறுத்தையைக் கொன்றுதான் என்னைக் காப்பாற்றவேண்டிய நிலை ஏற்படுமானால் என்னைச் சாகவிட்டு சிறுத்தையைக் காப்பாற்றுங்கள் என்றுதான் சொல்லுவேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.