காலா யாரென்பது புரிந்தது – ஓர் எழுத்தாளரின் பார்வை

’காலா’ பார்த்து விட்டேன்! இரண்டு தடவைகள் பார்த்து விட்டேன்! திரைக்கதையைப் படித்துவிட்டு மீண்டும் ஒருமுறை பார்க்கவும் விருப்பம்!

அந்தக் காலத்தில் எம்.ஜி.ஆர் படங்களைத் திரும்பத் திரும்பப் பார்த்தது. இடையில் சத்யஜித் ரே, ரித்விக் கடாக் படங்களை தாகம் தீராமல் மீண்டும் மீண்டும் பார்த்துத் தவித்தது. இடையில் இருபது ஆண்டுகளில் எந்தப் படத்தையும் இரண்டு முறை பார்த்ததாக நினைவில் இல்லை.

நீண்ட இடைவெளிக்குப்பின் இரண்டாவது தடவை விரும்பிப் பார்த்த படம் காலா. இரண்டாவது முறையாகப் பார்த்த பின் தான் ”காலா” யாரென்பது புரிந்தது.

“அட, இந்த காலா, நம்ம ஊர் கருப்புதாம்லே” என்பது உறைத்தது.

நம்ம ஊரு கருப்பு இங்க இருந்து பம்பாய்க்குப் போயி அங்க உள்ள பெரிய சாமிய வெல்லம் பொரட்டி எடுத்திருக்காம்னா பாத்துக்கோயேன்.” என்று சொல்லத் தோன்றுகிறது.

கருப்பு, மாடசாமி, கபாலி, டேவிட், தாவூத் போன்ற வில்லன்கள் இடத்தில் உண்மையான வில்லன் – ஹரி இருத்தப்பட்டு எதிரில் உண்மையான நாயகன் கருப்பு (காலா) போரிடுகிறார்.

வைதிக ஹரிக்கு எதிராக அவைதிக கருப்பர்கள் தொடுக்கும் போர் – காலா. வில்லன் கதாபாத்திரத்துக்கு ஹரி என்று பெயரிடப்பட்டுள்ளதே புரட்சிகரமானது!
ஆமாம்! காலா இந்துத்வாவுக்கு எதிராக எடுக்கப்பட்ட வெகுமக்கள் படம் என்பதை உறுதிபடக் கூறமுடியும்.

மசாலாக்கள், நாயக பிம்பம், பதிவிரதை நாயகி போன்ற மலின பார்முலாக்கள் வெகுவாக குறைக்கப்பட்ட கதை அமைப்பு!
படத்தின் முதல் ஃப்ரேம் முதல் கடைசி ஃப்ரேம் வரை தோலுரிக்கப்படுவது இந்துத்வா அரசியல்.

தலித் மக்களைத் தமது வாக்கு வங்கிகளாக மாற்ற, நகர்ப்புறக் குடிசைப்பகுதிகளில் இந்துத்வா சங்கிகள் எவ்வாறு நுழைகிறார்கள் என்பதையும் தலித் மக்களுக்கு நல்லது செய்கிறேன் என்ற போர்வையில் எவ்வாறு அவர்கள் புதிய சேரிகளுக்குத் துரத்தப் படுகிறார்கள் என்பதையும் மும்பை தாராவி அனுபவங்களின் ஊடாக காலா அம்பலப்படுத்துகிறது. இதன் நீட்சியாகவே இறுதிக் காட்சிகளில் நகர்ப்புறக் குடிசைப்பகுதி அகற்றம் குறித்த இந்தியா தழுவிய போராட்டங்கள் விரிவடைகின்றன.

நகர்ப்புற தலித் மக்களின் சமூகப் பிரச்சனைகளுடன் பொருளாதார அடிப்படைத் தேவைகளையும் இணைத்து உருவாக்கப்பட்ட முதல் வெகுமக்கள் தமிழ் சினிமா – காலா!
– அப்பணசாமி

Leave a Response