கால்பந்து – அர்ஜெண்டினா அதிர்ச்சித் தோல்வி

கால்பந்து திருவிழாவில் ஜூன் 21 அன்று நடந்த முதல் போட்டியில் கால்பந்தின் ஜாம்பவான்களின் நாடான அர்ஜெண்டினா, குரோஷியாவை எதிர்த்தது. இதில் உலகத் தர வரிசைப் பட்டியலில் அர்ஜெண்டினா 5-வது இடத்திலும் குரோஷியா 20-வது இடத்திலும் இருக்கின்றன.

இந்தப் போட்டி மிக பரபரப்பாக இருக்கும் என்று முன்பேயே எதிர்பார்க்கப்பட்டதுதான். அதுபோலவேதான் கடைசிவரையிலும் நடந்து முடிந்தது.

துவக்கத்தில் இருந்தே இரண்டு அணி வீரர்களும் புத்துயிர்ப்புடன் ஓடினர். கீழே விழுவதற்கோ, இடித்துத் தள்ளுவதற்கோ, காலை வாரி விடுவதற்கோ, காலை மிதிப்பதற்கோ ஒருவருக்கொருவர் அஞ்சவில்லை. ஆனால் மிஞ்சினார்கள்.

இரண்டு பேருமே சம பலம் வாய்ந்தவர்களை போல இருந்ததால் மாறி, மாறி கோல் போடும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டேயிருந்தார்கள். கோல் போஸ்ட்டுகளும் மாறி மாறி முற்றுகையிடப்பட்டன.

17-வது நிமிடத்தில் அர்ஜெண்டினாவின் பெரஸ்ஸிற்கு ஒரு அருமையான வாய்ப்புக் கிடைத்தது. குட் பாஸிங்கில் கிடைத்த பந்தை இன்னும் கொஞ்சம் முனைப்பாக கவனித்து அடித்திருந்தால் கோலாகியிருக்கும். ஆனால் ஜஸ்ட் மிஸ்ஸிங்காக கோல் போஸ்ட்டின் பக்கவாட்டில் சென்றுவிட்டது பந்து.

இதேபோல் குரோஷியாவுக்கும் ஒரு வாய்ப்பு உடனேயே கிடைத்தது. அலட்சியமாக எதிரணியைக் கருதிய அர்ஜெண்டினாவின் கோல் கீப்பர் தன்னிடமிருந்த பந்தை தூக்கியடிக்காமல் அருகில் இருந்த தன் அணி வீரரிடம் தள்ளிவிட்டார்.

அந்த வீரர் எதேச்சையாக அதனை பாஸ் செய்த முயன்றபோது பந்து அவரது கட்டுப்பாட்டில் இல்லாமல் குரோஷிய வீரரிடம் ஓட..

கடைசி நொடி குழப்பத்தில் குரோஷிய வீரர் Mandozuxic அடித்த அந்த பந்தும் கோல் வலையை ஒட்டினாற்போல் போய் குரோஷிய ரசிகர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

தள்ளி விடுவதற்கும், தாக்குதல் நடத்துவதற்கும் அஞ்சாமல் போய்க் கொண்டிருந்த நிலையில் முதல் மஞ்சள் கார்டை குரோஷியாவின் ரெபிக் பெற்றார்.

வலது பக்க லைன் அருகே நின்றிருந்த அர்ஜெண்டினா வீரரை தேவையே இல்லாமல் அடித்து வீழ்த்திவிட்டு தான் எதையுமே செய்யவில்லை என்று வேறு அம்பயரிடம் மூக்கோடு மூக்காக நின்று மிரட்டிவிட்டுப் போனார்.

ம்ஹூம்.. அம்பயரால் மஞ்சள் அட்டையைக் காட்டியதைத் தவிற வேறேதுவும் சொல்ல முடியவில்லை.

இடைவேளை வரையிலும் இப்படியேதான் ஷாட்டுக்களை அடிப்பதும் அது குறி தவறுவதுமாக இரண்டு அணியினருக்குமே அதிர்ஷ்டம் கையில் கிடைக்காமலேயே போய்விட்டது.

இடைவேளைக்கு பின்பு மேலும் ஆட்டம் சூடு பிடித்தது. 49-வது நிமிடத்தில் குரோஷியாவின் கோல் போஸ்ட் பகுதியில் அர்ஜெண்டினா வீரருக்கு கட்டக்கால் கொடுத்தமைக்காக மெர்க்குடா என்னும் குரோஷிய வீரருக்கு மஞ்சள் அட்டை பரிசாகக் கிடைத்தது.

இந்தச் சூடு ஆறுவதற்குள் இந்த ஷாட்டில் பறந்து வந்த பந்தை உதைத்தபடியே குரோஷிய வீரர்கள் அர்ஜெண்டினா கோல் பகுதிக்குள் கால் வைக்க தன்னை நோக்கி வந்த பந்தை அர்ஜெண்டினாவின் கோல் கீப்பர் வெகு அலட்சியமாக தனது இடது காலால் தனது அணி வீரருக்கு பாஸ் செய்வதை போல் உதைக்க..

அந்த பந்து சட்டென்று மேலே எழும்ப.. அருகில் நின்று கொண்டிருந்த குரோஷிய வீரர் ஆற, அமர பந்து கீழே வரும்வரை காத்திருந்து தனது வலது காலால் மிக அருமையாக உதைத்து அதை கோலாக்கினார்.

இதைப் பார்த்த நொடியில் அர்ஜெண்டினாவின் பயிற்சியாளர் தலையில் கை வைத்துவிட்டார். கோல் கீப்பரும்தான். ஒட்டு மொத்த அர்ஜெண்டினா ரசிகர்களும் அதிர்ச்சியாகிவிட்டார்கள். கேலரியில் அமர்ந்து தனது அணி வீரர்களை உற்சாகப்படுத்திக் கொண்டிருந்த கால்பந்து கடவுள் மாரடோனாவும் திகைத்துப் போய்விட்டார்.

இது முழுக்க, முழுக்க அர்ஜெண்டினாவின் கோல் கீப்பரின் தவறுதான். வந்த பந்தை அவர் கையில் பிடித்திருந்தால் அது நிச்சயம் கோலாகியிருக்காது. அலட்சிய மனப்பான்மையுடன் பாஸ் செய்ததால் வந்த வினை இது.

இதற்கடுத்தும் குரோஷிய வீரர்கள் பதுங்கிப் பாய ஆரம்பிக்க.. அந்த அணியின் mandozuxic ஒரு மஞ்சள் அட்டையைப் பெற்றார்.

ஆட்டத்தின் 62-வது நிமிடத்தில் குரோஷியின் கோல் போஸ்ட்டின் மிக அருகில் போய் அர்ஜெண்டினாவின் வீரர்கள் கோல் போட எத்தனிக்க கடைசி நொடியில் அது குரோஷிய வீரர்களால் முறியடிக்கப்பட்டது துரதிருஷ்டவசமானது.

65-வது நிமிடத்தில் மீண்டும் ஒரு கோல் சான்ஸ் குரோஷியாவுக்கு வாய்த்தது. ஆனால் கடைசி நொடியில் அர்ஜெண்டினா வீரர்கள் ஒட்டு மொத்தமாய் பந்து மீது விழுக.. அத்திட்டம் பணாலானது.

66-வது நிமிடத்தில் குரோஷியா வீரர் visloka திறமையாக ஒரு அர்ஜெண்டினா வீரரை தரையில் வீழ்த்தியதற்காக மஞ்சள் அட்டையைப் பெற்றார்.

74-வது நிமிடத்தில் அர்ஜெண்டினாவின் மிசா என்னும் வீரர் குரோஷிய வீரருடன் மோதியதில் இருவருக்கும் பலத்த அடி.. காயம்.. குரோஷிய வீரர் ஆட்டக் களத்திலிருந்தே வெளிநடப்பு செய்தார்.

79-வது நிமிடத்தில் மூன்று பேர் மூலமாக பாஸாகி வந்த பந்தை தொலை தூரத்தில் இருந்தே மிக அழகாக அடித்து கோலாக்கினார் குரோஷிய வீரர் மோடிக்.

அந்த பந்து அர்ஜெண்டினா கோல் கீப்பரின் கையையும் தொட்டுவிட்டு வலையின் ஓரமாக அதனை உரசிக் கொண்டே கோல் போஸ்ட்டுக்குள் நுழைந்தது கண் கொள்ளாக் காட்சி.

ஒட்டு மொத்த அர்ஜெண்டினா ரசிகர்களும் கப்சிப். பயிற்சியாளரும், மாரடோனாவும் இந்தக் காட்சியைக் காணச் சகிக்காமல் முகத்தைப் பொத்திக் கொண்டார்கள்.

போட்டி நேரம் முடிய எக்ஸ்ட்ரா டைம் 4 நிமிடங்கள் கிடைத்தன.

இதில் 2-வது நிமிடத்தில் மீண்டும் ஒரு அம்சமான கோலை போட்டது குரோஷிய அணி. நடு மைதானத்தில் இருந்து பந்தை கடத்திக் கொண்டு வந்த குரோஷிய வீரர் கோல் போஸ்ட் அருகே வந்தபோது அர்ஜெண்டினாவின் கோல் கீப்பர் முட்டாள்தனமாக முன்னேறிச் சென்று பந்தை பிடிக்கப் போனார்.

ஆனால், அந்த வீரர் பந்தை சட்டென்று இடம் மாற்ற.. பந்து இப்போது இன்னொரு குரோஷிய வீரரிடம் ஓடியது. கோல் கீப்பர் அதிர்ச்சியாகி மீண்டும் தன் இடத்திற்கு வருவதற்குள்ளாக Ratific என்ற அந்த குரோஷிய வீரர் மிக எளிதாக கோல் போஸ்ட்டுக்குள் கோலை தள்ளிவிட.. மூன்றாவது கோலையும் போட்ட சந்தோஷத்தைக் கொண்டாடியது குரோஷியா.

இன்றைய போட்டியில் 3-0 என்ற கோல் கணக்கில் வென்ற குரோஷியா, 4 புள்ளிகள் பெற்று முதல் 16 அணிகளில் ஒரு அணியாக குரூப் டி பிரிவில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டது.

Leave a Response