இங்கிலாந்தை வென்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது குரோஷியா

உலகத் தர வரிசைப் பட்டியலில் 12-வது இடத்தில் இருக்கும் இங்கிலாந்தும், 20-வது இடத்தில் இருக்கும் குரோஷியாவும் அரை இறுதிப் போட்டியில் மோதின.

1966-ம் ஆண்டு உலக சாம்பியன் பட்டத்தை வென்ற இங்கிலாந்து 52 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற ஆசையுடன் இ்ன்று களமிறங்கியது.

முதல் நிமிடத்திலேயே கட்டைக்கால் கொடுத்து ஜெகஜோதியாக ஆட்டத்தை ஆரம்பித்து வைத்தார்கள் குரோஷிய வீரர்கள்.

3-வது நிமிடத்தில் குரோஷிய அணி கேப்டன் ஒரு இங்கிலாந்து வீரரை கவிழ்த்துவிட்டதால் ப்ரீ கிக் வாய்ப்பு இங்கிலாந்து அணிக்குக் கிடைத்தது. ஆனால் அந்தப் பந்தை பாதியிலேயே பறிமுதல் செய்தனர் குரோஷிய வீரர்கள்.

5-வது நிமிடத்திலேயே எதிர்பாராமல் கோல் அடித்தனர் இங்கிலாந்து வீரர்கள். இங்கிலாந்துக்கு கிடைத்த இன்னொரு ப்ரீ கிக் வாய்ப்பில் அதன் வீரர் டிரிப்பர் மிக அழகாக யாருமே தடுக்க முடியாத வண்ணம் அனைவரின் தலைக்கு மேலேயேும் தூக்கியடித்த பந்து மிக அழகாக உருண்டோடி வலையின் ஓரத்தில் உள்ளே நுழைந்தது. நிச்சயமாக இங்கிலாந்து வீரர்களே எதிர்பாராத கோல் இது.

14-வது நிமிடத்தில் இங்கிலாந்து அணிக்கு கார்னர் ஷாட் கிடைத்தது. இதில் அடிக்கப்பட்ட பந்து மயிரிழையில் தப்பி கோல் போஸ்ட்டுக்கு வெளியில் பறந்தது.

16-வது நிமிடத்தில் தொலைதூரத்தில் இருந்து இங்கிலாந்து வீரர் அடித்த பந்து குரோஷிய கோல் கீப்பரின் கைகளில் தஞ்சமடைந்தது.

18-வது நிமிடத்தில் குரோஷிய வீரர்கள் ஆக்ரோஷமாய் போராடினார்கள். குரோஷிய வீரர்கள் அடித்த பந்து இங்கிலாந்து வீரரின் காலில் பட்டு சட்டென்று வெளியேறியது.

20-வது நிமிடத்தில் இங்கிலாந்து கேப்டன் கேன் குரோஷிய வீரரால் அடித்துத் தள்ளப்பட்டார். இது குறித்து அவர் ஆவேசமாக நடுவரிடம் முறையிட நடுவர் “நான் இருக்கேன். நான் பார்த்துக் கொள்கிறேன்.” என்று சமாதானம் செய்து அனுப்பி வைத்தார்.

21-வது நிமிடத்தில் இங்கிலாந்து கோல் அடிக்க முனைந்தது. ஆனால் முடியவில்லை. பந்து வெளியே சென்றது.

22-வது நிமிடத்தில் குரோஷிய அணி வீரர்கள் கஷ்டப்டபட்டு பாஸிங்கில் உருட்டிக் கொண்டு வந்த பந்தும் கடைசி ஷாட்டில் வெளியில் சென்றது.

29-வது நிமிடத்தில் ஒரு நிமிடம் அனைவரையும் பதைபதைக்க வைத்துவிட்டார்கள் இங்கிலாந்து வீரர்கள். முதல் முறை அடித்த பந்து கோல் போஸ்ட்டின் மீது பட்டு உள்ளே வர.. மீண்டும் ஒரு இங்கிலாந்து வீரர் அதனை கோல் போஸ்ட்டை நோக்கி அடிக்க.. இந்த முறை குரோஷிய கோல் கீப்பர் தரையோடு தரையாக வீழ்ந்து அந்தப் பந்தைப் பிடித்துவிட்டார்.

31-வது நிமிடத்தில் குரோஷிய வீரர்கள் பொங்கியெழுந்து வந்து முற்றுகையிட்டனர். மூன்று முறை அடுத்தடுத்து கோல் போட முயன்றும் முடியாமல் போக, வெறுத்தே விட்டனர்.

35-வது நிமிடத்தில் இங்கிலாந்து வீரர் லிங்கார்டு மிகக் கஷ்டப்பட்டு கொண்டு வந்த பந்து கடைசியாக வேறொரு வீரரின் கால் பட்டு வெளியேறியது.

முதல் மஞ்சள் அட்டையை எடுக்க வைத்த பெருமை குரோஷிய அணிக்கே உண்டு.

உண்மையில் குரோஷிய அணியில் அதன் கோல் கீப்பரைத் தவிர மற்ற அனைவருக்குமே இன்றைக்கு மஞ்சள் அட்டையை கொடுத்திருக்க வேண்டும். அந்த அளவுக்கு மூர்க்கத்தனமாக விளையாடினார்கள். இங்கிலாந்து வீரர்களை அடித்தார்கள். இடித்தார்கள். பிடித்துக் கீழே தள்ளினார்கள். நடுவரோ சிலவைகளை கண்டு கொண்டும், பலவைகளை காணாததுபோலவும் போய்விட்டார்.

47-வது நிமிடத்தில் குரோஷிய வீரர் Mario Mandzukic-ம், 50-வது நிமிடத்தில் இங்கிலாந்து வீரர் Kyle Walker-ம் மஞ்சள் அட்டைகளைப் பெற்றார்கள்.

53-வது நிமிடத்தில் பவுலான நொடியே பந்தை யார் வீசுவது என்பதில் இரு அணியினருக்குமிடையே கை கலப்பு எழ.. இதில் கடுமை காட்டிய இங்கிலாந்து வீரர் வாக்கருக்கு மஞ்சள் அட்டையை நீட்டினார் நடுவர்.

60-வது நிமிடத்தில் குரோஷியாவுக்கு ஒரு கார்னர் ஷாட் கிடைத்தது. இந்த ஷாட்டின்போது கோல் போஸ்ட்டில் அருகே நின்று கொண்டிருந்த குரோஷிய வீரருக்கு கட்டைக் கால் கொடுத்து விழ வைத்தார் ஒரு ஆங்கிலேய வீரர். நிச்சயமாக இதற்கு பெனால்டி கொடுத்திருக்க வேண்டும். ஆனால் நடுவர் இதனைக் கவனிக்காமல் போய்விட்டதால் தப்பித்தது இங்கிலாந்து.

64-ம் நிமிடம் குரோஷிய வீரர்கள் 2 முறை கோல் போஸ்ட்டை நோக்கி ஷாட் அடித்தும் தெய்வாதீனமாக அது கோலாகாமல் தப்பித்தது.

65-வது நிமிடத்தில் ஆங்கிலேயே வீரர் வாக்கர், குரோஷிய வீரர்களால் தாக்கப்பட்டு விளையாட முடியாமல் தவித்துப் போய் வெளியேறினார்.

68-வது நிமிடத்தில் குரோஷியா திடீரென்று கோல் அடித்தது. யாருமே எதிர்பார்க்கவில்லை. Ivan Perisic தனது இடது காலால் பந்தை அடித்து கோலுக்குள் தள்ளி அதுவரையிலும் தூங்கிக் கொண்டிருந்த அத்தனை குரோஷிய ரசிகர்களையும் எழுப்பிவிட்டார்.

71-வது நிமிடத்தில் குரோஷியா மீண்டும் கோல் அடிக்க முனைந்தது. இரண்டு முறை முயன்றும் மயிரிழையில் தப்பியது இங்கிலாந்து.

82-வது நிமிடத்தில் இங்கிலாந்து கோல் கீப்பரின் வயிற்றை புரட்டுவதுபோல ஒரு அற்புதமான ஷாட்டை அடித்தார் குரோஷிய வீரர். கஷ்டப்பட்டு அந்தப் பந்தை பிடித்து அப்படியொரு போஸ் கொடுத்தார் ஆங்கிலேய கோல் கீப்பர்.

92-வது நிமிடத்தில் இங்கிலாந்து அணிக்குக் கிடைத்த ப்ரீ கிக் வாய்ப்பை கோலாக்க முயன்று தோல்வியடைந்தனர்.

இதையடுத்து 1-1 என்ற கோல் கணக்கில் சம நிலையில் போட்டியிருக்க.. நாக் அவுட் விதிமுறைகளின்படி கூடுதல் நேரமாக முதல் 15 நிமிடம் கொடுக்கப்பட்டது.

இப்போதும் ஆட்டம் சூடு பிடிக்காமல் அப்படியேதான் இருந்தது. இரு அணியினருமே முன் கள வீரர்களை உடைத்து உள்ளே போக முடியாமல் தவியாய் தவித்தனர்.

95-வது நிமிடத்தில் குரோஷிய வீரர் ரெபிக் ஆங்கிலேய வீரரை உதைத்ததால் மஞ்சள் அட்டையைப் பெற்றார்.

97-வது நிமிடத்தில் இங்கிலாந்து வீரர்கள் அடித்த கார்னர் ஷாட்டில் 2 முறை கோல் போஸ்ட்டை நோக்கி பந்து பறந்தும் அதை வெற்றிகரமாகத் தடுத்தனர் குரோஷிய வீரர்கள்.

105-வது நிமிடத்தில் குரோஷியா கோல் போட முயற்சித்தது. இப்போது ஆங்கிலேய கோல் கீப்பர் முன்னால் ஓடி வந்து பந்தை எட்டி உதைக்க.. கூடவே முன்னால் ஓடி வந்த குரோஷிய வீரரையும் உதைத்து கீழே படுக்க வைத்துவிட்டார். அந்த வீரர் வலி தாங்காமல் மைதானத்திலிருந்து வெளியேறினார்.

இந்த 15 நிமிடத்திலும் முன்னேற்றம் இல்லை என்பதோடு அடுத்த 15 நிமிடங்கள் எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதில் துவக்கத்திலேயே 119-வது நிமிடத்தில் குரோஷிய அணி ஒரு அழகான வெற்றி கோலை போட்டது. தூரத்தில் இருந்து குரோஷிய வீரர் பாஸிங்கில் அனுப்பிய பந்தை குரோஷிய வீரர் Mario Mandzukic தனது வலது காலால் உதைத்து கோலுக்குள் தள்ளி குரோஷிய வீரர்களின் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்துவிட்டார்.

119-வது நிமிடத்தில் குரோஷிய வீரர்கள் மீண்டும் கோல் போட எத்தனிக்க.. பந்து வலையில் பட்டு வெளியேறியது.

121-வது நிமிடத்தில் குரோஷிய வீரர்களுக்கும், ஆங்கிலேய வீரர்களுக்கும் இடையே கை கலப்பே ஏற்பட்டது. நொடியில் இடையில் மூக்கை நுழைத்த நடுவர், அவர்களைச் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தார்.

123-வது நிமிடத்தில் இங்கிலாந்து அணிக்கு ஒரு ப்ரீ கிக் வாய்ப்பு கட்டக் கடைசியாகக் கிடைத்தது. ஆனால் அதிலும் அவர்களால் கோல் போட முடியவில்லை.

கடைசியாக 2-1 என்ற கோல் கணக்கில் குரோஷியா இங்கிலாந்தை வென்று இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.

குரோஷிய அணி உலகக் கோப்பை போட்டி வரலாற்றில் இப்போதுதான் முதல் முறையாக இறுதிப் போட்டிக்குள் கால் வைக்கிறது.

உலகக் கோப்பை போட்டியின் இறுதிப் போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமையன்று இரவு 8.30 மணியளவில் பிரான்ஸ், குரோஷிய அணிகளுக்கிடையே நடைபெற இருக்கிறது.

– சரவணன்

Leave a Response