இங்கிலாந்தில் இந்திய வம்சாவளியான ரிஷி சுனக் தலைமையிலான கன்சர்வேடிவ் கட்சி ஆட்சி செய்து வருகிறது. சுனக் பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஜனவரி 25 வரை உள்ள நிலையில், முன்கூட்டியே பொதுத்தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதன்படி 650 தொகுதிகளைக் கொண்ட பிரிட்டன் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது.
இதில் ஆட்சி அமைக்க 326 இடங்கள் தேவை. 14 ஆண்டுகளாக பிரிட்டனை வழிநடத்தும் கன்சர்வேட்டிவ் கட்சி மற்றும் தொழிலாளர் கட்சி இடையே நேரடிப் போட்டி நிலவியது.
இந்தத் தோ்தலில் எதிா்க்கட்சித் தலைவா் கியொ் ஸ்டாா்மா் தலைமையிலான தொழிலாளா் கட்சி, இந்திய வம்சாவளியைச் சோ்ந்த பிரதமா் ரிஷி சுனக் தலைமையிலான கன்சா்வேட்டிவ் கட்சியைத் தோற்கடித்து மாபெரும் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. இந்தத் தேர்தலில் அதிகளவில் இந்தியர்கள் போட்டியிட்டனர்.
தொழிலாளர் கட்சி சார்பில் போட்டியிட்ட தமிழ்ப் பெண் உமா குமரன், இலண்டன் ஸ்டராட்ஃபோர்டு தொகுதியில் 19,145 வாக்குகளைப் பெற்று மாபெரும் வெற்றியைப் பதிவு செய்துள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட கன்சர்வேட்டிவ் கட்சி வேட்பாளரான கேன் பிளாக்வெல், 3,144 வாக்குகள் மட்டும் பெற்று 4 ஆவது இடத்தைப் பெற்றார்.
ஈழத் தமிழ்ப் பெண்ணான உமா குமரன் பிரித்தானிய வரலாற்றில் முதல் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் ஆவார். தமிழீழம் யாழ்ப்பாணத்த்லிருந்து இவர்கள் குடும்பம் புலம்பெயர்ந்து சென்றிருக்கிறது.
இவர் வெற்றி பெற்றார் என்கிற பெருமையோடு, தேர்தல் பரப்புரையின்போது 2009 ஆம் ஆண்டு தமிழீழத்தில் சிங்கள இனவெறி அரசால் நிகழ்த்தப்பட்ட தமிழினப்படுகொலைக்கு சர்வதேச அமைப்புகள் மூலம் நீதி பெற்றுத் தர தீவிர முயற்சி செய்வேன் என்று கூறியிருந்தார்.
அதனால் ஈழத்தமிழ்ச் சமூகம் அவருடைய வெற்றியை,இனப்படுகொலைக்கான நீதி பெறும் போராட்டத்தில் முக்கிய நிகழ்வாகப் பார்க்கின்றனர்.