ஐபிஎல் – ஐதராபாத்தை வென்றது கொல்கத்தா

ஐதராபாத்தில் நடைபெற்ற 54-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும் மோதின.

டாஸ் வென்ற ஐதராபாத் அணியின் தலைவர் கேன் வில்லியம்ஸ் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். அதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக ஷிகர் தவானும், ஸ்ரீவத்சவ் கோஸ்வாமியும் களமிறங்கினர்.

இருவரும் இணைந்து நிதானமான ஆட்டத்தினை வெளிபடுத்தி முதல் விக்கெட்டுக்கு 75 ரன்கள் சேர்த்தனர். இந்நிலையில் கோஸ்வாமி 35(26) ரன்கள் எடுத்த நிலையில் கேட்ச் ஆனார். அடுத்து இறங்கிய அணித்தலைவர் கேன் வில்லியம்சன் 36(17) ரன்களில் வெளியேற்றப்பட்டார்.

சிறப்பாக ஆடி வந்த ஷிகர் தவான் 50(39) ரன்களில் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து இறங்கிய யூசுப் பதான் 2(4) ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். அடுத்து களமிறங்கியவர்கள் நிலைத்து நின்று ஆடவில்லை. இறுதியில், ஐதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்கள் எடுத்தது.

கொல்கத்தா அணி சார்பில் அதிகபட்சமாக பிரசித் கிருஷ்ணா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம் கொல்கத்தா அணிக்கு 173 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன், கொல்கத்தா அணியின் சார்பில் கிறிஸ் லைன் மற்றும் சுனில் நரைன் ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். இதில் அதிரடியாக ரன்கள் சேர்த்த சுனில் நரைன் 29(10) ரன்களில் ஷாகிப் அல் ஹசன் பந்து வீச்சில் கேட்ச் ஆனார்.

அடுத்து கிறிஸ் லைனுடன் ராபின் உத்தப்பா ஜோடி சேர்ந்தார். சிறப்பாக ஆடி வந்த கிறிஸ் லைன் தனது அரை சதத்தை பதிவு செய்தார். பின்னர் கெளல் பந்து வீச்சில் கிறிஸ் லைன் 55(43) ரன்களில் கேட்ச் ஆகி வெளியேறினார். அடுத்ததாக உத்தப்பாவுடன் கேப்டன் தினேஷ் கார்த்திக் ஜோடி சேர்ந்தார்.

பின்னர் அதிரடியின் மூலம் ரன் சேர்த்துக் கொண்டிருந்த உத்தப்பா 45(34) ரன்களில் கேட்ச் ஆகி வெளியேறினார். அடுத்து களமிறங்கிய ஆண்ட்ரூ ரசல் 4(4) ரன்னிலும், நிதிஷ் ராணா7(5) ரன்னிலும் வெளியேறினர். கடைசியில் தினேஷ் கார்த்திக் 26(22) ரன்களும், சுப்மன் கில் ரன் ஏதும் எடுக்காமலும் இறுதிவரை அவுட் ஆகாமல் களத்தில் இருந்தனர். ஐதராபாத் அணியின் சார்பில் அதிகபட்சமாக, கெளல், ப்ரத்வொய்ட் ஆகியோர் தலா 2 விக்கெட்டும், ஷாகிப் அல் ஹசன் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இறுதியில் கொல்கத்தா அணி 19.4 ஒவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றது.

Leave a Response