நாடாளுமன்றத் தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தீவிர பரப்புரை மேற்கொண்டுவருகின்றன.
இந்நிலையில், பிரதமர் மோடி நேற்று முன்தினம் இராஜஸ்தானில் நேற்று பரப்புரை மேற்கொண்டார்.அப்போது, காங்கிரசுக் கட்சி ஆட்சியில் இருந்தபோது தேசத்தின் செல்வத்தில் இஸ்லாமியர்களுக்கு முதல் உரிமை உண்டு என்று சொன்னார்கள். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிகக் குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள். இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள், சகோதரிகளின் தாலியைக்கூட விட்டுவைக்காது’என மத ரீதியாக மக்களைப் பிளவுபடுத்துகிற மாதிரி பேசியிருந்தார்.
காங்கிரசுக் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியான போதுகூட, `முஸ்லிம் லீக் அறிக்கை போல இருக்கிறது’ என மதத்தை முன்வைத்து பேசியிருந்தார் மோடி.
ஒரு பிரதமராக இருந்துகொண்டு அதிகாரத்துக்காக மக்களின் மத உணர்வுகளைத் தூண்டுவது தரம் தாழ்ந்த செயல். அப்பட்டமான வெறுப்புப் பேச்சு என எதிர்க்கட்சிகள் சாடிவருகின்றன.
இந்த நிலையில்,நேற்று உத்தரப்பிரதேசத்தின் இஸ்லாமிய மக்கள் தொகை கணிசமாக வாழும் அலிகாரில் நடந்த பேரணியில் பேசிய மோடி,
மக்களின் சொத்துகளை மறுபங்கீடு செய்ய காங்கிரசு திட்டமிட்டிருக்கிறது.`காங்கிரசும், சமாஜ் வாதியும் இஸ்லாமிய சமூகத்தின் சமூக-பொருளாதார நிலையை உயர்த்த எதுவும் செய்யவில்லை. முத்தலாக் காரணமாக பல மகள்களின் வாழ்க்கை சீரழிந்தது. அதற்கு எதிராகச் சட்டம் இயற்றி, அவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாப்பானதாக மாற்றினோம்.
முன்பு, ஹஜ் புனித யாத்திரைக்கான ஒதுக்கீடு குறைவாக இருந்ததன் காரணமாக, நிறையச் சண்டைகள் இருந்தன, இலஞ்சமும் பரவலாக இருந்தது. செல்வாக்கு மிக்கவர்களுக்கு மட்டுமே ஹஜ் செல்லும் வாய்ப்பு கிடைக்கும். அதனால், இந்தியாவிலுள்ள நமது இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கான ஹஜ் ஒதுக்கீட்டை அதிகரிக்குமாறு சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசரிடம் கோரிக்கை விடுத்திருந்தேன். இன்று, இந்தியாவின் ஹஜ் ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டிருக்கிறது. விசா விதிகளும் எளிதாக்கப்பட்டிருக்கிறது.
அதேபோல், முன்பு நம் இஸ்லாமிய தாய்மார்கள், சகோதரிகள் `மெஹ்ரம்’ (ஆண் துணை) ஹஜ்ஜுக்கு இல்லாமல் தனியாகச் செல்ல முடியாது. ஆனால், எங்கள் அரசாங்கம் பெண்களை மெஹ்ரம் இல்லாமல் ஹஜ் செல்ல அனுமதித்தது என்று பேசினார்.
இதற்கு, இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதிக்ளில் அவர்களுக்கு ஆதரவாகவும், மற்ற பகுதிகளில் இஸ்லாமியர்கள் மீது வெறுப்பைத் தூண்டும் விதமாகவும் பிரதமர் மோடி பேசி வருகிறார் என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.
இராஜஸ்தான் வெறுப்புப் பேச்சுக்கு நாடு முழுவதிலுமிருந்து கிடைத்த கடும் எதிர்ப்புகளையும் கண்டனங்களையும் பார்த்து மோடி பயந்துவிட்டார் என்று அரசியல்பார்வையாளர்கள் கூறுகின்றனர்.