ஸ்டெர்லைட், நியூட்ரினோ பற்றி பேசாதீர் – ரஜினி உத்தரவு ரசிகர்கள் அதிர்ச்சி

சென்னை போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லத்தில் கடந்த 10-ந் தேதி ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அதன் தொடர்ச்சியாக, நேற்று போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லத்தில், ரஜினி மக்கள் மன்ற மாவட்ட இளைஞர் அணி செயலாளர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

நேற்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக, ரஜினி மக்கள் மன்ற மாவட்ட இளைஞர் அணி செயலாளர்கள் அனைவரும் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்துக்கு வரவழைக்கப்பட்டு, அங்கிருந்து அனைவரும் ஒரே நேரத்தில் வேன்களில் போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் வீட்டுக்கு அழைத்து வரப்பட்டனர்.

மண்டபத்தில் இருந்து அழைத்து வரப்பட்ட இளைஞர் அணி செயலாளர்களின் செல்போன்களை மாநில நிர்வாகிகள் மொத்தமாக வாங்கி வைத்துக் கொண்டனர். ஆலோசனை கூட்டத்தில் செல்போனுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. காலை 10.30 மணி முதல் 11.30 மணி வரை ஒரு மணி நேரம் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் ரஜினிகாந்துடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

இந்த ஆலோசனை கூட்டத்தில், மாவட்டத்தில் உள்ள மக்கள் பிரச்சினைகள், அங்கு உள்ள வளர்ச்சி பணிகள், கிளைகள் அமைப்பது தொடர்பான நிலவரங்கள், உறுப்பினர்கள் சேர்க்கை குறித்த விவரங்கள் ஆலோசிக்கப்பட்டுள்ளது.

ரஜினிகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில், ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “இளைஞர் அணியினருடனான சந்திப்பு ஆக்கபூர்வமாக இருந்தது” என்று தெரிவித்து உள்ளார்.

தேனி மாவட்ட இளைஞர் அணி செயலாளர் கணேஷ் கூறும்போது, “கூட்டத்தில், ஸ்டெர்லைட் பிரச்சினை, நியூட்ரினோ பிரச்சினைகள் குறித்து கூறினோம். அதனை காலப்போக்கில் பார்த்துக் கொள்ளலாம். இப்போதைக்கு கட்டமைப்பை ஏற்படுத்துங்கள், இளைஞர்களை அதிகப்படுத்துங்கள், வலுப்படுத்துங்கள் என்று அறிவுறுத்தி உள்ளார்” என்று கூறினார்.

தமிழகத்தின் அடிப்படைச் சிக்கல்கள் பற்றி இப்போது பேச வேண்டாம் என்று ரஜினி சொன்னது பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Response