ஈரோடு மாவட்டத்தில் காலிங்கராயன்பாளையம் முதல் கொடுமுடி அருகே உள்ள ஆவுடையார்பாறை வரை 56½ மைல் தூரம் பாய்ந்து பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலத்துக்கு பாசனம் அளித்து வருகிறது காலிங்கராயன் வாய்க்கால். இந்த வாய்க்கால் கி.பி.1270-ம் ஆண்டு வெட்ட தொடங்கப்பட்டு 1282-ம் ஆண்டு பாசனத்துக்கு திறக்கப்பட்டது.
கொங்கு மண்டல பகுதியின் நிர்வாக பொறுப்பில் இருந்த காலிங்கராயன் அவருடைய சொந்த முயற்சியால் 12 ஆண்டுகள் தவம்போல் அணை கட்டி, வாய்க்கால் வெட்டும் பணியை முடித்தார். 736 ஆண்டுகளுக்கு முன்பு பவானி ஆற்றையும், நொய்யல் ஆற்றையும் இணைக்கும் வகையில் வெட்டப்பட்ட காலிங்கராயன் வாய்க்கால் நதிகள் இணைப்பின் முன்னோடி திட்டமாக கருதப்படுகிறது.
தொழில்நுட்பம் எதுவும் இல்லாத அந்த காலத்திலேயே மிகவும் சிறப்பாக வாய்க்கால் வெட்டி வறட்சியாக இருந்த பகுதிகளை வளம் கொழிக்க வைத்தவர் காலிங்கராயன். இன்றும் அவருடைய பெயரால் வாய்க்கால் பாசனம் தரும் முக்கிய வாய்க்காலாக உள்ளது.
இந்த வாய்க்கால் பாசனத்துக்காக திறக்கப்பட்டது 1282-ம் ஆண்டு தை மாதம் 5-ந் தேதியாகும். இந்த நாளை காலிங்கராயன் விழாவாக கொண்டாட வேண்டும் என்று ஈரோடு காலிங்கராயன் பாசன பகுதி விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். மேலும், காலிங்கராயன் அணைக்கட்டு அமைந்திருக்கும் பகுதியான பவானி அருகே உள்ள காலிங்கராயன் பாளையத்தில் மணிமண்டபம் கட்டவும் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்தநிலையில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடந்த 2016-ம் ஆண்டு காலிங்கராயன் மணிமண்டபம் மற்றும் வெண்கல சிலை அமைக்க உத்தரவிட்டு நிதி ஒதுக்கீடு செய்தார். அதன்பேரில் தமிழ்நாடு பொதுப்பணித்துறை சார்பில் ரூ.1 கோடியே 65 லட்சம் செலவில் அழகிய மணிமண்டபம் மற்றும் 7 அடி உயரம் உள்ள காலிங்கராயன் வெண்கல சிலை அமைக்கப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழா நேற்று மாலை நடைபெற்றது.
விழாவில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு புதிய மண்டபத்தை திறந்து வைத்தார்.
அவர் ரிமோட்டை இயக்கி காலிங்கராயன் முழுஉருவ சிலையை திறந்து வைத்தார். பின்னர் அவர் காலிங்கராயன் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்த விழாவில் அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், கே.சி.கருப்பணன், செல்லூர்ராஜூ, டாக்டர் சரோஜா, பி.தங்கமணி, கே.பி.அன்பழகன் ஆகியோரும் கலந்துகொண்டு காலிங்கராயன் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
ஈரோடு மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர், மாவட்ட வருவாய் அதிகாரி கவிதா, ஆர்.டி.ஓ. நர்மதாதேவி, தாசில்தார் அமுதா, காலிங்கராயன் வாரிசுதாரர்கள் ஏ.எம்.ஆர்.அருண்குமார், சித்தார்த் ஏ.எம்.ஆர். காலிங்கராயன், விஷ்ணு காலிங்கராயன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
பின்னர் பவானி அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளிக்கூடத்தில் நடந்த விழாவில் பேசிய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-
இந்த விழாவில், ஈரோடு மாவட்டத்தின் ஒரு பகுதிக்கு நீர் வழங்கும் திட்டத்தை செயல்படுத்திய காலிங்கராயன் மணிமண்டபத்தை திறந்து வைத்து உள்ளேன் என்பது மகிழ்ச்சிக்குரியது. ஜெயலலிதா இருந்தபோது முல்லை பெரியாறு அணை கட்டிய பென்னிகுயிக், கொல்லிடம் ஆற்றின் குறுக்கே அணைக்கட்டிய கரிகால் பெருவளத்தான் ஆகியோருக்கு மணிமண்டபம் கட்டியதுடன் காலிங்கராயனுக்கு மணிமண்டபம் கட்ட நிதி ஒதுக்கி இருந்தார். அதைத்தொடர்ந்து பொதுப்பணித்துறை சார்பில் மணிமண்டபமும், சிலையும் அமைக்கப்பட்டது. காரைவாய்க்கால், கோணவாய்க்கால் என்றெல்லாம் அழைக்கப்படும் காலிங்கராயன் வாய்க்கால் மூலம் ஈரோடு மாவட்டத்தில் 15 ஆயிரத்து 743 ஏக்கர் தற்போது பாசன வசதி பெற்று வருகிறது.
இப்படிபட்ட வலுவான அணையினையும், கால்வாயையும் கட்டிக்கொடுத்து நதிகள் இணைப்பின் முன்னோடியாக விளங்கியவரும், மக்களுக்கு பல அறப்பணிகளை செய்து வந்தவருமான காலிங்கராயனுக்கு சிலை அமைக்க வேண்டும் என்றும், காலிங்கராயன் அணைக்கட்டு பகுதியை சுற்றுலா தலமாக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. அந்த கோரிக்கையை ஏற்ற ஜெயலலிதா 2016-ம் ஆண்டு காலிங்கராயனுக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவித்து உத்தரவிட்டார்.
அதன்படி பவானி அருகே காலிங்கராயன் அணைக்கட்டு பகுதியில் பொதுப்பணித்துறை சார்பில் ரூ.1 கோடியே 65 லட்சம் செலவில் மணிமண்டபம் கட்டப்பட்டு உள்ளது. இந்த மண்டபத்தில் 7 அடி உயரத்தில் காலிங்கராயன் முழு உருவ வெண்கல சிலை அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த சிறப்பு வாய்ந்த காலிங்கராயன் சிலையையும், மணிமண்டபத்தையும் திறந்து வைத்ததில் நான் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.
வருங்காலத்தில் காலிங்கராயன் நினைவை போற்றும் வகையில் ஆண்டுதோறும் தமிழ்நாடு அரசு சார்பில் விழா கொண்டாடப்படும் என்ற மகிழ்ச்சியான செய்தியை தெரிவித்து கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
காலிங்கராயன் எல்லா மக்களுக்குமாகச் சிந்தித்து செயலாற்றினாலும் வரை கவுண்டர் சமுதாயத்தின் பெருமையாக அடையாளப் படுத்துகிறார்கள். அதே சமுதாயத்தைச் சேர்ந்தவர் முதல்வராக இருக்கும்போது காலிங்கராயன் விழா குறித்து அறிவிப்பு வெளியானதில் அந்த சமூக மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.