
ஐபிஎல் டி20 போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் மோதிக்கொண்டன.
பெங்களூரு எம்.சின்னசாமி அரங்கில் மே 1 ஆம் தேதி இரவு நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி தலைவர் ரோகித் ஷர்மா முதலில் பந்துவீச முடிவு செய்தார்.
மனன் வோரா, டி காக் இருவரும் ராயல் சேலஞ்சர்ஸ் இன்னிங்சை தொடங்கினர். டி காக் 7 ஓட்டங்கள் எடுத்து மெக்லநாகன் பந்துவீச்சில் ரோகித் வசம் பிடிபட்டார். ஓரளவு தாக்குப்பிடித்த வோரா 45 ரன் (31 பந்து, 2 பவுண்டரி, 4 சிக்சர்) விளாசி ஆட்டமிழந்தார். அடுத்து மெக்கல்லமுடன் கேப்டன் கோஹ்லி இணைந்தார். பொறுப்புடன் விளையாடிய இருவரும் 3வது விக்கெட்டுக்கு 60 ஓட்டங்கள் சேர்த்தனர்.
மெக்கல்லம் 37 ஓட்டங்கள் எடுத்து (25 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்) துரதிர்ஷ்டவசமாக ரன் அவுட்டானார். மன்தீப் சிங் 14, விராத் கோஹ்லி 32 ரன் (26 பந்து, 2 பவுண்டரி, 1 சிக்சர்), வாஷிங்டன் சுந்தர் 1 ரன் எடுத்து ஹர்திக் பாண்டியா பந்துவீச்சில் அடுத்தடுத்து ஆட்டமிழக்க,பெங்களூரு திடீர் சரிவைச் சந்தித்தது. சவுத்தீ 1 ரன் எடுத்து பூம்ரா வேகத்தில் கட்டிங் வசம் பிடிபட்டார். 2 விக்கெட் இழப்புக்கு 121 ரன் என்ற வலுவான நிலையில் இருந்த பெங்களூர் அணி, மேற்கொண்டு 22 ரன்னுக்கு 5 விக்கெட் இழந்தது குறிப்பிடத்தக்கது.
மெக்லநாகன் வீசிய கடைசி ஓவரில் கிராண்ட்ஹோம் 3 சிக்சர் விளாசியதால் ஆர்சிபி அணி ஸ்கோர் கணிசமாக உயர்ந்தது. அந்த அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 167 ஓட்டங்கள் எடுத்தது.
கிராண்ட்ஹோம் 23 ரன் (10 பந்து, 3 சிக்சர்), உமேஷ் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். மும்பை இந்தியன்ஸ் பந்துவீச்சில் ஹர்திக் 3, மார்கண்டே, பூம்ரா, மெக்லநாகன் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 168 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணியில் இஷான் கிஷான், கேப்டன் ரோகித் ஷர்மா இருவரும், சந்தித்த முதல் பந்திலேயே டக் அவுட்டாகினர்.
சூர்யகுமார் யாதவ் 9 ரன்னில் உமேஷ் வேகத்தில் வெளியேறினார். டுமினி 23 ரன்னில் ரன்அவுட்டானார். போலார்ட் 13 ரன்னில் வெளியேறி ஏமாற்றினார். 84 ரன்னில் 5 விக்கெட் இழந்த நிலையில் ஹர்திக், குருணல் பாண்டியா சகோதரர்கள் அணியை வெற்றி பெறச் செய்ய கடுமையாகப் போராடினர். இந்த ஜோடி 56 ரன் சேர்த்த நிலையில் குருணல் (23) ஆட்டமிழந்தார்.
பந்துவீச்சில் 3 விக்கெட் வீழ்த்திய ஹர்திக் 41 பந்தில் அரைசதம் எடுத்த நிலையில் சவுத்தீ வேகத்தில் வெளியேற மும்பை இந்தியன்ஸ் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 153 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது.


