ரஜினிக்கு சுப.வீரபாண்டியன் எழுதியுள்ள காட்டமான கடிதம்

ஐபிஎல் போட்டிக்கெதிராக சென்னையில் நடந்த போராட்டத்தைத் தொடர்ந்து, சீருடையில் இருக்கும் காவலர்கள் மீது கை வைப்பவர்களை தண்டிக்க இன்னும் கடுமையான சட்டங்களை நாம் இயற்றவேண்டும் என கூறியிருந்தார். வன்முறையின் உச்சகட்டமே சீருடையில் பணிபுரியும் காவலர்கள் தாக்கப்படுவது தான். இத்தகைய வன்முறை கலாச்சாரத்தை உடனே கிள்ளி எறியவில்லை என்றால் நாட்டுக்கே பேராபத்து என ரஜினி கூறியிருந்தார்.

இதற்குப் பதிலளிக்கும் விதமாக திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன் எழுதியுள்ள திறந்த கடிதம்…..

இன்னும் கட்சி தொடங்கவில்லை என்றாலும், அரசியலுக்கு வந்துவிட்ட நடிகர் ரஜினிகாந்த், ஐபிஎல் எதிர்ப்புப் போராட்டத்தில் சீருடையுடன் இருந்த காவலர்கள் தாக்கப்பட்டதற்காக மிகவும் கோபப்பட்டுள்ளார். அவர்களைத் தண்டிக்கத் தனிச் சட்டமே இயற்றப்பட வேண்டும் என்னும் அளவிற்குப் போயிருக்கிறார். ஆனால் அன்று காவல்துறை மக்களின் மீது நடத்திய தடியடி பற்றி எதும் கூறவில்லை.

ஏப்ரல் 1 முதல் தமிழகம் எங்கும் நடந்துவரும் பல்வேறு போராட்டங்கள் தமிழர்களின் உரிமைப் போராட்டமாகவும், மான உணர்ச்சியின் வெளிப்பாடாகவும் உள்ளன. திருச்சி முக்கொம்பிலிருந்தும், அரியலூரிலிருந்தும் தொடங்கி நடைபெற்றுவரும் மக்களைத் திரட்டும் மாபெரும் பேரணிகள், முழு அடைப்புப் போராட்டங்கள், ஐபிஎல் எதிர்ப்புப் போராட்டம், நெய்வேலி முற்றுகைப் போராட்டம், தொடர்வண்டி நிறுத்தப் போராட்டம் என்று தமிழகமே இன்று கொந்தளித்துக் கொண்டிருக்கிறது. இப்போராட்டங்களை நடத்திய, நடத்திவரும் அனைத்துக் கட்சிகளும், அமைப்புகளும் பாராட்டிற்குரியவர்கள்.

பல்வகைப் போராட்டங்களில் ஒன்றாக, விவசாயம் செத்துக் கொண்டிருக்கும்போது, விளையாட்டு எதற்கு என்று கேட்டு, சென்னையில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் விளையாட்டுப் போட்டியை நிறுத்தத் சொல்லி நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் அமைந்தது.

நாடே இத்தனை துன்பங்களுக்கு உள்ளாகியிருக்கும்போது, ஐபிஎல் விளையாட்டுப் போட்டி வேண்டாம் என்று, கடந்த 2 ஆம் தேதி இரவு, முகநூல் நேரலையில். திராவிட இயக்கத் தமிழர் பேரவை சார்பில் நான் பேசியிருந்தேன். தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் மிகக் கடுமையான எச்சரிக்கை ஒன்றை விடுத்திருந்தார். பாரதிராஜா தலைமையில் புதிதாக உருவாகியுள்ள கலை இலக்கிய பண்பாட்டுப் பாதுகாப்பு அமைப்பு ஏப்ரல் 10 ஆம் நாள் இரவு நேரடியாக சேப்பாக்கம் சென்று தன் எதிர்ப்பை நிலைநாட்டியது.அப்போராட்டத்தில் கலந்துகொண்ட சீமான், அமீர், வெற்றிமாறன், கவுதம், வைரமுத்து, தோழர் மணியரசன் அனைவரையும் நாம் நெஞ்சாரப் பாராட்டுகின்றோம். கடுமையான காவல்துறைப் பாதுகாப்பையும் மீறி, அன்று அவர்கள் அந்தப் போராட்டத்தை நடத்தியிருக்கவில்லை என்றால், எஞ்சிய விளையாட்டுப் போட்டிகள் வேறு ஊருக்கு மாற்றப்பட்டிருக்காது.

எனினும் அந்தப் போராட்டத்தில், உணர்ச்சிமயமான போராட்டங்களில் எப்போதும் நடைபெறுவதைப் போல, சில அத்துமீறல்கள் நடைபெற்றுவிட்டன. காவலர்கள் சிலர் தாக்கப்பட்டதை யாரும் விரும்பவில்லை. அதனை ரஜினிகாந்த் கண்டித்துள்ளார். அதே நேரம், அறவழியில் போராடிய போராட்டக் குழுவினரும், பொதுமக்களும், காவலர்களால் விரட்டி விரட்டி அடிக்கப்பட்டனரே, அது குறித்து ரஜினிகாந்த் ஏன் வாய் திறக்கவில்லை?

ரஜினி அரசியலுக்கு வந்ததற்குப் பின்பு, திருச்சியில் ஒரு காவலர் எட்டி உதைத்து ஒரு பெண் மரணம் அடைந்தது குறித்து அப்போது ரஜினி ஏதும் அறிக்கை விட்டாரா? சமூக வலைத்தளத்தில் எதும் பதிவுகள் இட்டாரா? அப்போது அவருடைய ‘சிஸ்டம்’ (கணிப்பொறி) கெட்டுப் போயிருந்ததோ என்னவோ!

உணர்ச்சிவயமான, தன்னெழுச்சியான போராட்டங்களில் இப்படிச் சில நிகழ்வுகள் நடந்துவிடும் என்பதே உண்மை. அவற்றை நாம் நியாயப்படுத்தவில்லை. ஆனால், ஒரு பக்கச் சார்புடன் அதனை மட்டும் கண்டிப்பதும், அதற்காகக் கோபப் படுவதும் நியாயமில்லை.

காந்தியார் நடத்திய அகிம்சை போராட்டத்தில் கூட, அப்படிச் சில நிகழ்வுகள்; நடந்துள்ளன. 1922 ஆம் ஆண்டு, உ.பி. கோரக்பூர் மாவட்டம், சவுரி சவுரா என்னுமிடத்தில், ஓரிருவர் அல்ல, 21 காவல்துறையினர் காவல் நிலையத்திலேயே வைத்து உயிருடன் எரிக்கப்பட்டனர். செய்தியறிந்து சினம் கொண்ட காந்தியடிகள் அந்தப் போராட்டத்தையே நிறுத்தி விட்டார்.

ஆனால் நேரு போன்றவர்கள் அதனை ஏற்கவில்லை. “இந்தியாவில் எங்கோ ஒரு மூலையில் உள்ள, ஏதோ ஒரு கிராமத்தில், மக்கள் அடக்குமுறை தாளாமல், வன்முறையை உபயோகித்து விட்டார்கள் என்பதற்காக, இந்திய சுதந்திரப் போரையே ஒத்தி வைப்பதா? ஆம் என்றால், பாபு (காந்தியார்) கூறும் அகிம்சைக் கொள்கையில் எங்கோ ஒரு பெரிய கோளாறு இருக்கிறது என்றே பொருள்” என்று நேரு, தன் நூலொன்றில் ( The first Sixty years – vol 1) குறிப்பிட்டுள்ளார்.

1942 ஆகஸ்டில் நடைபெற்ற ‘வெள்ளையனே வெளியேறு’ விடுதலைப் போராட்டத்தில் பல்வேறு அத்துமீறல்கள் நடைபெறவே செய்தன. ரஜினி அன்று இருந்திருந்தால், அந்த வன்முறைகளை அடக்க, ஆங்கிலேயர்கள் தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என்று சொல்லியிருப்பாரோ?

1965ஆம் ஆண்டு தமிழகத்தில் கொழுந்துவிட்டு எரிந்த இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் ஒரு தியாக வரலாறு. தன்னைத் தானே எரித்துக் கொண்டவர்கள், நஞ்சுண்டு மாண்டவர்கள், துப்பாக்கிச் சூட்டிற்குப் பலியானவர்கள் என்று தியாகிகளின் எண்ணிக்கை பெருகும். ஆனால் அந்தப் போராட்டத்திலும் கூட, 1965 பிப்.10 அன்று திருப்பூரில் விரும்பத்தகாத வன்முறை ஒன்று நடந்தது.

அன்றையதினம், 500 பள்ளி மாணவர்கள் அஞ்சல் நிலையத்தை நோக்கி ஊர்வலம் சென்றனர். அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தக் காவல் துறையினர் தடை விதித்தனர். மாணவர்கள் மீறினர். உடனே தடியடி நடத்தினர். மாணவர்கள் கலையவில்லை. மாறாக, மக்கள் பெருங்கூட்டம் கூடிவிட்டது. அடுத்து, துப்பாக்கிச் சூடு நடத்தினர். 13 வயது மாணவன் ஒருவன் அதில் இறந்துபோய்விட்டான். கோபம் கொண்ட கூட்டம், தன் கட்டுப்பாட்டை இழந்தது. அங்கு நின்று கொண்டிருந்த ராமசாமி (43), வெங்கடேசன்(44) என்னும் இரண்டு காவல் உதவி ஆய்வாளர்களைப் பெட்ரோல் ஊற்றி, உயிரோடு எரித்து விட்டது. மூன்று உயிர்கள் தேவையின்றி அன்று பறிபோயின.

காவலர்கள் கொல்லப்பட்டதை யார்தான் சரி என்று சொல்வார்கள்? அவர்களும் நம்மைப் போன்ற மனிதர்கள்தாமே! ஆனால் ஒன்றை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். பள்ளி மாணவர்களின் ஊர்வலத்திற்குத் தடை விதிக்காமல் இருந்திருந்தால், அல்லது, துப்பாக்கிச் சூடு நடத்தாமல் இருந்திருந்தால், இந்தக் கொடுமைகள் நடந்திருக்காது.

இப்போதும், மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, ஐபிஎல் போட்டியை அன்றே ஊர் மாற்றியிருந்தால், இந்தச் சிக்கல்கள் எல்லாம் வந்திருக்காது. நீ என்ன வேண்டுமானாலும் செய்துகொள், நான் விளையாட்டுப் போட்டியை நடத்தியே தீருவேன் என்று ஆணவத்துடன் சொன்னவர்கள்தாம் இத்தனைக்கும் பொறுப்பேற்க வேண்டும். அவர்களைத் தண்டிக்க வேண்டும் என்று கூறாமல், எங்கோ நடந்துவிட்ட ஒரு பிழையை மட்டும் பெரிதுபடுத்துவது அழகில்லை.

ரஜினியின் கோபத்தில் நியாயமில்லை!

இவ்வாறு அவர் எழுதியுள்ளார்.

Leave a Response