காவிரி தீர்ப்பு – தமிழக முதல்வர் அறிக்கை

காவிரி தீர்ப்பு குறித்து தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

காவிரி டெல்டா விவசாயிகளின் வாழ்வாதார பிரச்சினையாக மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் உணர்வுகளோடு பின்னிப் பிணைந்து இருப்பது காவிரி நதிநீர் பிரச்சினை ஆகும். காவிரி நதி கர்நாடகத்தில் உற்பத்தியானாலும், கீழ்ப்பாசன மாநிலத்தின் உரிமை என்ற அடிப்படையில், காவிரி நதி நீரின் மீது தமிழ்நாட்டிற்கு அதிக உரிமை உள்ளது. சென்னை மாகாணத்திற்கும், மைசூர் சமஸ்தானத்திற்கும் இடையே 1892 மற்றும் 1924-ம் ஆண்டுகளில் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தங்கள், காவிரி நதி நீரில் தமிழ்நாட்டிற்கு உள்ள உரிமையை தெளிவாக்குகின்றன.

காவிரி நதிநீர் பங்கீட்டுப் பிரச்சினை தொடர்பாக, தமிழ்நாடு காவிரி நீர்ப்பாசன விளைபொருட்கள் விவசாயிகள் நல உரிமைப் பாதுகாப்புச் சங்கத்தினர், உச்சநீதி மன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடுத்தனர். இந்த வழக்கில், தமிழ்நாடு அரசு தன்னை இணைத்துக் கொண்டது. இந்த வழக்கினை விசாரித்த உச்சநீதிமன்றம், காவிரிப் பிரச்சினைக்கு தீர்வு காண ஒரு நடுவர் மன்றத்தை ஏற்படுத்துமாறு உத்தரவு ஒன்றை 1990-ம் ஆண்டு பிறப்பித்தது. உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவின் காரணமாக, 1986-ம் ஆண்டு எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் தமிழ்நாடு அரசால் அனுப்பப்பட்ட கடிதத்திற்கு உயிரூட்டப்பட்டு, மத்திய அரசால் அறிவிக்கை செய்யப்பட்டு, காவிரி நடுவர் மன்றத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

பகிர்ந்தளிப்பு

1990-ம் ஆண்டு அமைக்கப்பட்ட காவிரி நடுவர் மன்றம் நீண்ட விசாரணைக்கு பின்னர், தனது இறுதி ஆணையை 5.2.2007 அன்று பிறப்பித்தது. 50 விழுக்காடு நம்பகத்தன்மை என்ற அடிப்படையில், காவிரியின் மொத்த நீர்வளம் 740 டி.எம்.சி. அடி நீர் என வரையறுத்து, அதனடிப்படையில் காவிரிப் படுகை மாநிலங்களுக்கான நீர் அளவை காவிரி நடுவர் மன்றம் ஒதுக்கீடு செய்தது. அதில், தமிழ்நாட்டிற்கு 419 டி.எம்.சி. அடி நீரும், கர்நாடகத்திற்கு 270 டி.எம்.சி. அடி நீரும், கேரளாவிற்கு 30 டி.எம்.சி. அடி நீரும், புதுச்சேரிக்கு 7 டி.எம்.சி. அடி நீரும், தவிர்க்க முடியாத உபரி 4 டி.எம்.சி. அடி நீர் எனவும், சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக 10 டி.எம்.சி. அடி நீர் எனவும், இந்த 740 டி.எம்.சி. அடி நீரை காவிரி நடுவர் மன்றம் பகிர்ந்தளித்தது.

இந்த இறுதி ஆணையை, முறையாக செயல்படுத்துவதற்கு ஏதுவாக காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர்முறைப்படுத்தும் குழு ஆகியவற்றை அமைக்கவும் காவிரி நடுவர் மன்றம் பரிந்துரை செய்தது. அந்த தீர்ப்பை மத்திய அரசிதழில் வெளியிடுவதற்கு அப்போதைய முதல்-அமைச்சர் ஜெயலலிதா வற்புறுத்தியபோதும், மத்திய அரசு, அதற்கு செவி சாய்க்கவில்லை. பின்னர், உச்சநீதிமன்றத்தில் ஜெயலலிதா வழக்கு தொடர்ந்து, எடுத்த நடவடிக்கைகளின் காரணமாக, உச்சநீதிமன்றத்தின் தலையீட்டால், காவிரி நடுவர் மன்ற இறுதி ஆணை 19.2.2013 அன்று மத்திய அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டது. ஜெயலலிதாவின் இடையறா முயற்சியின் காரணமாகவே, காவிரிப் பிரச்சினையில் தமிழ்நாட்டின் உரிமை நிலை நாட்டப்பட்டது.

தீர்ப்பு

கர்நாடக அரசு, தன்னிச்சையாக தமிழ்நாட்டின் முன் அனுமதி பெறாமல் கட்ட உத்தேசித்த அணைக்கட்டுகள், இறைவைப் பாசனத் திட்டங்கள் போன்றவை குறித்து உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசால் இடைக்கால மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி ஆணையை எதிர்த்து கர்நாடக மற்றும் கேரள அரசுகள் உச்ச நீதிமன்றத்தில் சிவில் வழக்குகளை தாக்கல் செய்தன. இந்த வழக்குகளில் நேற்று தீர்ப்பு வெளியாகியது.

காவிரி டெல்டா பகுதியில் காவிரி நடுவர் மன்ற இறுதி ஆணையில் நிலத்தடி நீர் 20 டி.எம்.சி. அடி உள்ளது என கூறியுள்ளது. எனினும், நிலத்தடி நீர் காவிரி பாசன உபயோகத்திற்கு கணக்கிட எடுத்துக்கொள்ளக்கூடாது எனவும் நடுவர் மன்றம் தீர்ப்பளித்திருந்த நிலையில், தற்போது, உச்ச நீதிமன்றம், நிலத்தடி நீரை கணக்கில் எடுத்துக்கொண்டு பில்லிகுண்டுலுவில் தமிழ்நாட்டிற்கு அளிக்க வேண்டிய 192 டி.எம்.சி. அடி நீரை 177.25 டி.எம்.சி. அடியாக குறைத்துள்ளது ஏமாற்றமளிக்கிறது.

மறு ஆய்வு

ஜெயலலிதா வழியில் செயல்படும் அரசு, தமிழர்களின் நலனை காப்பதில் எப்போதும் முனைப்புடன் செயல்படும் அரசு என்பது அனைவரும் அறிந்ததே. தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், முதன்மைச்செயலாளர் துரைமுருகன் ஆகியோரும் இத்தீர்ப்பினால் தமிழ்நாட்டின் உரிமை பறிபோய்விட்டது போன்று ஒரு தோற்றத்தை உருவாக்கப்பார்க்கின்றனர். ஆனால், உண்மையில் தி.மு.க. அரசே தமிழ்நாட்டின் உரிமைகளை விட்டுக்கொடுத்து, தமிழ்நாட்டின் நலனுக்கு எதிராக செயல்பட்டுள்ளது.

தி.மு.க. ஆட்சி காலத்தில்தான், கர்நாடக அரசு, கபினி ஆற்றின் குறுக்கே அணை கட்டி, அது 1974-ம் ஆண்டு, பயன்பாட்டிற்கு கொண்டுவந்தது. அப்போது ஆட்சியில் இருந்த தி.மு.க. அரசு, உரிய நடவடிக்கை எடுக்காததால் தமிழ்நாட்டின் உரிமை பறிபோனது. அதேபோன்று, 1924-ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தின் குறிப்பிட்ட அம்சங்களை 1974-ம் ஆண்டு மறு ஆய்வு செய்திருந்தால் இத்தகைய சூழ்நிலை உருவாகியிருக்காது. தி.மு.க. ஆட்சி காலத்தில்தான் தமிழ்நாடு உரிமைகளை இழந்துள்ளது என்பது இதன்மூலம் தெளிவாகிறது.

சாதகமான அம்சங்கள்

ஆனால், தமிழக அரசு கடந்த 7 ஆண்டுகளாக திறமையான உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர்களைக் கொண்டு, திறம்பட வாதிட்டதின் பயனாக தமிழ்நாட்டின் உரிமைகள் மீண்டும் நிலைநாட்டப்பட்டுள்ளன. மேலும், தமிழ்நாட்டிற்கு சாதகமான பல அம்சங்கள் இத்தீர்ப்பில் இடம் பெற்றுள்ளன. ஆனால், தமிழக அரசை குறை கூறவேண்டும் என்ற நோக்கில் மட்டுமே பேசி வரும் இவர்கள், சாதகமான அம்சங்கள் பற்றி குறிப்பிட மறந்து விட்டனர்.

தமிழ்நாட்டின் உரிமைகளையும், வேளாண் பெருமக்களின் நலன்களையும் கண்ணின் மணிபோல எப்போதும் காக்கும் தமிழக அரசு இறுதி தீர்ப்பை முழுமையாக ஆராய்ந்து சாதகமான அம்சங்களை விரைந்து முன்னெடுத்துச் செல்லவும், நமக்குரிய காவிரி நதி நீரினை முழுமையாக பெறவும், சட்ட வல்லுனர்களின் ஆலோசனையை பெற்று, தேவையான தொடர் நடவடிக்கைகளை விரைவாகவும், உறுதியாகவும் எடுக்கும் என தெரிவித்துக்கொள்கிறேன்.

Leave a Response