தமிழ்நாடு அரசில் உயர்கல்வி அமைச்சராக இருந்த க.பொன்முடிக்கு எதிரான சொத்து வழக்கில், பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோருக்கு உயர் நீதிமன்றம் தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது. இருவரும் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்த நிலையில், தண்டனைக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது. இதனால்,சிறை செல்வது தவிர்க்கப்பட்டது.
ஊழல் வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டதால், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் அடிப்படையில், பொன்முடி தனது சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அமைச்சர் பதவிகளை இழந்தார்
இந்த வழக்கில் பொன்முடி குற்றவாளி என்ற தீர்ப்பை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்தது. இதனால் அவரை மீண்டும் அமைச்சராக்கப் பரிந்துரைத்து ஆளுநர் ஆர்.என்.இரவிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மார்ச் 13 ஆம் தேதி கடிதம் எழுதினார்.
ஆனால் அவர் பதவி பிரமாணம் செய்து வைக்க மறுத்துவிட்டார்.
ஆளுநரின் இந்த முடிவை எதிர்த்து திமுக சார்பில் உச்ச நீதிமன்றம் சென்றனர். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.இரவிக்குக் கடும் கண்டனம் தெரிவித்தார்.
பொன்முடிக்கு பதவியேற்பை ஆளுநர் நடத்தாதது அரசியல் சாசனத்திற்கு எதிரானது. நாளை (இன்று) வரை ஆளுநருக்கு அவகாசம் வழங்குகிறோம்.இல்லையேல் நாங்கள் ஆளுநருக்கு உத்தரவு பிறப்பிக்க நேரிடும் என கடுமையாக எச்சரித்தனர்.
உச்ச நீதிமன்றத்தின் கடுமையான எச்சரிக்கையைத் தொடர்ந்து பொன்முடி பதவியேற்பிற்கு ஆளுநர் இரவி அழைப்பு விடுத்துள்ளார்.
நான்காவது முறையாக உச்ச நீதிமன்றத்தின் கடுமையான கண்டனத்துக்கு உள்ளாகி இருக்கிறார் ஆளுநர் ஆர்.என்.இரவி.
இந்நிலையில், பொன்முடிக்கு பதவியேற்பு நடத்த வேண்டும் அல்லது பதவி விலகவேண்டும் என்ற நிலையில், பதவியேற்பு நடத்த ஆளுநர் முடிவு எடுத்துள்ளார்.
இதைத் தொடர்ந்து, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பொன்முடி அமைச்சராக இன்று மாலை 3.30 மணிக்குப் பதவியேற்கிறார். ஆளுநர் மாளிகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் எளிய முறையில் பதவியேற்பு விழா நடக்கிறது.
பொன்முடிக்கு மீண்டும் உயர் கல்வித்துறையே ஒதுக்கப்பட்டுள்ளது.