பொன்முடிக்கு மீண்டும் பதவி

தமிழ்நாடு அரசில் உயர்கல்வி அமைச்சராக இருந்த க.பொன்முடிக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கில், பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சிக்கும் உயர் நீதிமன்றம் தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது. இருவரும் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்த நிலையில், தண்டனைக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது. இதனால், சிறை செல்வது தவிர்க்கப்பட்டது.

இருப்பினும், ஊழல் வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டதால், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் அடிப்படையில், பொன்முடி தனது சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அமைச்சர் பதவிகளை இழந்தார். இதையடுத்து அவர் போட்டியிட்டு வென்ற திருக்கோவிலூர் தொகுதி காலியானதாக அண்மையில் அறிவிக்கை செய்யப்பட்டு, தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பப்பட்டது.

இந்தச் சூழலில், 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்த உயர் நீதிமன்றத்தின் தீரப்புக்கு, நேற்று உச்ச நீதிமன்றம் தடை விதித்து இடைக்கால உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவு அடிப்படையில், தற்போது பொன்முடி குற்றவாளி கிடையாது. எனவே, அவர் சட்டமன்ற உறுப்பினராக நீடிக்க முடியும்.

இதுதொடர்பாக சட்டப்பேரவைச் செயலக அதிகாரிகள் தரப்பில், உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்திருந்தால், அந்த உத்தரவுடன் சட்டப்பேரவைச் செயலகத்தை அவர் அணுகி, திருக்கோவிலூர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டதை இரத்து செய்யக் கோரலாம் என்றனர்.

ஏற்கெனவே, காங்கிரசு முன்னாள் தலைவர் இராகுல் காந்தி, தகுதியிழப்பு செய்யப்பட்டு, அவர் மேல்முறையீடு செய்து அந்தத் தீர்ப்புக்குத் தடை பெற்றதால் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை மீண்டும் பெற்றார். இந்த முன்னுதாரணம் இருப்பதால், பொன்முடிக்கு மீண்டும் சட்டமன்ற உறுப்பினர் பதவி கிடைக்க வாய்ப்பு உள்ளது.அமைச்சராக மீண்டும் பொறுப்பேற்கவும் தடையில்லை என்கிறார்கள்.

Leave a Response