சட்டத்துக்குப் புறம்பாக நியூட்ரினோ ஆய்வுக்கு உத்தரவு – மோடிக்கு பூவுலகின்நண்பர்கள் கண்டனம்

நியூட்ரினோ திட்ட அனுமதி அறிவிப்பை பிரதமர் மோடி திரும்பப்பெற வேண்டும் என்று கோரிக்கை விடுத்து பூவுலகின் நண்பர்கள் கண்டன அறிக்கை:

நியூட்ரினோ ஆய்வுத் திட்டத்தை தமிழகத்தில் அமைப்பதில் உள்ள தடைகளை நீக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அமைச்சரவை செயலாளர் சின்கா அவர்களுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளதாக எகனாமிக் டைம்ஸ் 29.11.2017 அன்று செய்தி வெளியிட்டுள்ளது. இத்தகைய நடவடிக்கை அதிகார மீறலாகும்.

நியூட்ரினோ திட்டத்தை தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி பெற்ற பின்பே நடைமுறைப்படுத்த வேண்டும் என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பதிவு செய்த பொது நல வழக்கில் மதுரை உயர் நீதிமன்ற கிளை கூறியுள்ளது. இதுநாள் வரை தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் நியூட்ரினோ திட்டத்திற்கு அனுமதி வழக்கவில்லை. மேலும் பூவுலகின் நண்பர்கள் தாக்கல் செய்த வழக்கில் பசுமை தீர்ப்பாயம் நியூட்ரினோ திட்டத்திற்கு கொடுக்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதியை நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது. புதிய அனுமதி வாங்கவும் கூறியிருந்தது. அதன்படி நியூட்ரினோ திட்டத்திற்கான புதிய அனுமதி பெற பதிவு செய்யப்பட்ட மனுவும் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் முன்பாக நிலுவையில் உள்ளது.

மேலும் இதே வழக்கில் தமிழக அரசு தனது நிலைப்பாட்டை “தண்ணீர் மற்றும் காற்றில் ஏற்படும் மாசு குறித்த ஆய்வு மேற்கொள்ள மட்டுமே தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் நிபுணர்கள் உள்ளனர். நியூட்ரினோவிற்கு பல்வேறு துறை வல்லுனர்களின் கருத்து பெறப்பட வேண்டியிருப்பதால் அத்துறை சார்ந்த நிபுணர்கள் அடங்கிய குழுவை அமைத்து அக்குழு அளிக்கும் முடிவின் அடிப்படையிலேயே இத்திட்டத்திற்கான அனுமதி வழங்க முடியும்” எனக் கூறியிருந்தது.

இந்த நிலையில் பிரதமரின் இந்த நடவடிக்கை தமிழ்நாட்டின் மீது நியுட்ரினோ ஆய்வகத்தை சட்டத்திற்கு புறம்பாக வலிந்து திணிப்பதாக அமைவது கண்டனத்திற்குரியது. அரசு அமைப்புகள் சுதந்திரமாக செயல்படுவதைத் தடுக்கும் விதமாக இச்செயல் உள்ளது.

நியூட்ரினோ திட்டம் அமைய உள்ள இடம் மேற்குத் தொடர்ச்சி மலை என்பதாலும், இத்திட்டத்திற்க்குத் தேவையான கட்டுமானத்திற்குப் பல ஆயிரம் கிலோ வெடி மருந்துகள் பயன்டுத்தி சுரங்கம் அமைக்க வேண்டியுள்ளதாலும் சூழலியல் நோக்கில் இத்திட்டத்தை எதிர்க்கிறது பூவுலகின் நண்பர்கள் இயக்கம்.

மேலும் இந்திய நியூட்ரினோ ஆய்வுத் திட்டம் என்பது செயற்கை நியூட்ரினோ கதிர்களையும் ஆய்வு செய்யும் வகையிலேயே திட்டமிடப்பட்டுள்ளது. இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இத்திட்டம் செயல்படுத்தபடுகிறது என்னும் குற்றச்சாட்டையும் முன்வைக்கிறது பூவுலகின் நண்பர்கள் இயக்கம். இது இராணுவத் தேவைக்கான ஆய்வாக அமையக்கூடும் என்னும் கருத்தும் உள்ளது. இந்த நிலையிலேயே இத்திட்டத்தைத் தொடர்ந்து எதிர்த்து வருகிறது பூவுலகின் நண்பர்கள் இயக்கம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave a Response