மகாபலிபுரம் – திரைப்பட விமர்சனம்


ஐந்துநண்பர்களை வைத்துக்கொண்டு மகாபலிபுரத்தின் இன்னொருபக்கத்தைக் காட்டியிருக்கும் இயக்குநர், இதுவரை தமிழ்த்திரைகளில் மிகவும் புனிதமானது என்று சொல்லப்பட்டு வந்த நட்பைப் போட்டு உடைத்திருக்கிறார். எவ்வளவு நட்பாக இருந்தாலும் வீட்டுக்கூடத்தைத் தாண்டி அனுமதிக்காதீர்கள் என்கிற கருத்தைச் சொல்லியிருக்கிறார்.
மகாபலிபுரத்தில் வசிக்கும் விநாயக், கருணாகரன், வெற்றி, ரமேஷ், கார்த்திக் ஆகிய ஐவரும் நண்பர்கள். இவர்களில் விநாயக் தவிர மற்றவர்கள் சுற்றுலாவழிகாட்டிகளாக இருக்கிறார்கள். இவர்களில் வெற்றி காதலிக்கிறார். அவருடைய வீட்டை எதிர்த்துத் திருமணம் செய்துவைக்கிறார்கள் நண்பர்கள். இதனால் கணவரின் நண்பர்களை தன் வீட்டுக்கூடத்திலேயே மதுக்குடிக்க அனுமதிக்கிறார் வெற்றியின் மனைவி. அந்த அளவு நட்பாகப் பழகுகிறார்கள்.
ஒருநாள் இவர்கள் எல்லாம் மதுக்குடித்துவிட்டு இணையத்தில் ஆபாசப்படம் பார்க்கிறார்கள். அதில் வெற்றியின் மனைவியின் ஆபாசப்படம் வருகிறது. அதிர்ச்சியடைந்து வெற்றி வீட்டுக்கு ஓடுகிறார். அங்குபோனால் அவருடைய மனைவி தூக்கில் தொங்கிக்கொண்டிருக்கிறார். அதைப் பார்த்த அதிர்ச்சியில் மாடியிலிருந்து தவிறிவிழுந்து வெற்றியும் செத்துப்போகிறார்.
நண்பர்களில் ஒருவரான விநாயக்தான் படத்தின் நாயகன். அவருக்கும் ஒரு காதலி இருக்கிறார். அவரும் அநியாயத்துக்குச் செத்துப்போகிறார். ஏற்கெனவே செத்துப்போன தம்பதிகளின் மரணத்துக்குக் காரணமானவர்கள்தாம் காதலியின் மரணத்துக்கும் காரணம் என்று தெரிந்து எல்லோரையும் பழிவாங்குகிறார் நாயகன் விநாயக்.
இந்தக்கதையை நேர்த்தியாகச் சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குநர் டான்சாண்டி. தொடக்கத்தில் நண்பர்களின் கூத்து கும்மாளங்களுடன் தொடங்குகிற படம் மெதுவாக நகர்கிறது. சுற்றுலா வருகிற வெள்ளைக்காரர்களிடம் ஆங்கிலத்தில் பொழந்துகட்டுகிற நண்பர்கள் படிப்பறிவில்லாதவர்கள் என்று சொல்வதின் மூலம் பல தகவல்களை இந்தச் சமுகத்துக்குச் சொல்கிறார் இயக்குநர்.
விநாயக் சிலை செய்கிற சிற்பியாக இருக்கிறார். மகாபலிபுரம் ஊருக்குத் தோதான வேலை. சிற்பக்கூடத்துக்குள் போதைப்பொருள் வியாபாரம் உட்பட நியாயத்துக்குப் புறம்பான நிகழ்வுகள் நடக்கின்றன. நாயகன் மற்றும் அவருடைய நண்பர்கள் எல்லாம் அதில் சாதாரணமாக ஈடுபடுகிறார்கள்.
இதுபோன்ற காட்சிகளில் நமக்கு மகாபலிபுரத்தின் இன்னொரு பக்கத்தைக் காட்டுகிறார் இயக்குநர். போதைப்பொருள் வியாபாரம் தாண்டி இன்னொரு ஆபத்தான வியாபாரமாக ஆபாசப்படவியாபாரம் படத்தில் இருக்கிறது. நாயகன் விநாயக் பலஇடங்களில் இளவயதுசத்யராஜ் மாதிரி தெரிகிறார். உயரம் அவருக்குப் பலம். நடிப்பில் இன்னும் கவனம் செலுத்தவேண்டும், நண்பர்களில் ஒருவரான வெற்றியும் அவரைத் திருமணம் செய்யும் அங்கனாராயும் தங்கள் வேடத்தை நன்றாகச் செய்திருக்கிறார்கள்.
கருணாகரன், ரமேஷ், கார்த்திக் ஆகிய மூவருக்கும் முக்கியமான வேடங்களே. ஒவ்வொருவரும் தங்கள் பங்கை நன்றாகச் செய்திருப்பதோடு அங்கங்கே சிரிக்கவைத்து மகிழ்ச்சியளிக்கிறார்கள். இவர்களில் ரமேஷ் வெள்ளைக்காரியை திருமணம் செய்துகொண்டு வெளிநாடு போய்க் குடியேறுவதும் அங்கிருந்துகொண்டே நண்பர்களுக்கான தகவல்தொடர்பாளராக இருப்பதும் நல்லகற்பனை.
துரை என்கிற வேடத்தில் நடித்திருக்கும் ஜெயக்குமார் அமைதியான வில்லன் வேடத்தை நன்றாகச் செய்திருக்கிறார். அவர் சாதாரணமாகக் கொலைசெய்வதும் அந்தஉடலை சாக்குமூட்டையில் போட்டுக்கட்டி சுடுகாட்டுக்குக் கொண்டுபோய் விநாயக் புதைத்துவிட்டு வருவதும் மிகச்சாதாரணமாக நடக்கிறது. கொலையும் அதை மறைப்பதும் இவ்வளவு எளிதா இயக்குநரே?
நாயகன் விநாயக்கின் காதலியாக நடித்திருக்கிறார் விர்த்திகா. கதையில் அவருடைய பெயர் மகா. அவர் எளிமையான அழகுடன் இருக்கிறார். விநாயக்குடன் ஒருபாடல் அவருடன் ஊர்சுற்றுவது என்று அவருடைய வேடம் சிறியது. ஆனாலும் இந்த மகா பலியாகும் விதம் ஏற்படுத்தும் தாக்கம் பெரிது. கேயின் இசையில் பாடல்கள் பரவாயில்லை ரகம். சந்திரன்பட்டுசாமியின் ஒளிப்பதிவும் படத்துக்குப் பலம்

Leave a Response