கதம் கதம்- திரைப்பட விமர்சனம்

நேர்மையான காவல்அதிகாரிகளையே கதாநாயகனாகப் பார்த்துக்கொண்டிருக்கும் தமிழ்த்திரையில் கெட்டவன் ஒருவனை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கிறது இந்தப்படம். நட்டி காவல்துறை ஆய்வாளராகவும் நந்தா துணைஆய்வாளராகவும் ஒரே காவல்நிலையத்தில் வேலை செய்கிறார்கள். இவர்களில் நட்டி, அந்தக்காவல்நிலைய எல்லைக்குள் நடக்கிற எல்லாத் தவறான செயல்களையும் ஊக்குவிப்பதோடு அதனால் தனக்கு என்ன கிடைக்கும் என்பதை மட்டுமே பார்க்கிறவர். இவருக்கு நேரெதிரானவர் நந்தா. நேர்மையோடும் துணிவோடும் அநீதிகளை எதிர்க்கவேண்டும் என்று நினைக்கிறார். ஆனால் உயரதிகாரியான நட்டி மட்டுமின்றி மாவட்டகாவல்கண்காணிப்பாளராக இருக்கும் நிழல்கள்ரவியும் குற்றவாளிகள் பக்கமே நிற்பதால் எதுவும் செய்யமுடியாமல் தவிக்கிறார். ஒருகட்டத்திவ் நிலைமை மாறுகிறது. தன்னுடைய உயிருக்கே பாதிப்பு ஏற்படுகிற சூழலைத் தொடர்ந்து நட்டி மனம்மாறி நல்லவராகிறார். ஆனாலும் நந்தாவின் பார்வையில் அவர் கெட்டவராகவே இருக்கிறார். இதனால் நந்தா எடுக்கும் அதிரடி முடிவு காரணமாக என்ன நடக்கிறது என்பதுதான் படம்.
ஆமாம் நான் அப்படித்தான் என்று சொல்லிக்கொண்டு நட்டி செய்கிற செயல்கள் எல்லாம் ரசிக்கத்தக்கவை இல்லையென்றாலும் தன்னுடைய நடிப்பால் ரசிக்கவைக்கிறார். பின்னாட்களில் அவர் நல்லவராகிவிடுவார் என்று எதிர்பார்க்கிற மாதிரி முன்னாலேயே காட்சிகள் வைத்திருக்கிறார்கள்.
நேர்மையானவர்கள் படுகிறபாட்டினைப் பிரதிபலிக்கும் பாத்திரத்தைக் கச்சிதமாகச் செய்திருக்கிறார் நந்தா. ஒருகட்டத்தில் அவர் எடுக்கும் தவறான முடிவால்கூட அவர் மீது கோபம்வராதபடிக்கு அவருடைய பாத்திரம் இருக்கிறது. இறுதிக்காட்சியில் தவறாக முடிவெடுக்காமல் சமன் செய்துவிடுகிறார். அவருடைய வேடத்தை மிகநன்றாகச் செய்திருக்கிறார். நாயகி ஷனம்ஷெட்டியுடனான காதல்காட்சிகளில் கொஞ்சம் இளகியிருக்கலாம்.
நாயகியாக நடித்திருக்கும் ஷன்ம்ஷெட்டி, தன்னுடைய பங்கை பங்கமில்லாமல் செய்திருக்கிறார். நந்தா மீது சந்தேகப்படும் காட்சி எதார்த்தத்துக்குப் புறம்பாக இருக்கிறது. ,நட்டிக்கு இணையாக நடித்திருக்கும் சாரிகா, தன்னுடைய உடல்வளத்தால் ரசிகர்களைக் கவருகிறார். அவருடைய வேடமும் நன்று.
வில்லனாக நடித்திருப்பவரின் குரல் அவருக்குப் பலம். அந்த வேடத்தை வைத்துக்கொண்டு அரசியல்வாதிகளைத் தோலுரித்திருக்கிறார் இயக்குநர்.
தாஜ்நூரின் இசையில் பாடல்கள் கேட்கும்படி இருக்கின்றன. ஏற்கெனவே கேட்டபாடல்கள் மாதிரியும் இருப்பதுதான் குறை. கதைக்குத் தேவையான அளவு பின்னணிஇசை கொடுத்திருக்கிறார்.
பலவீனத்தைக் காட்டிக்கொள்ளாமல் இருக்கலாம் ஆனால் இல்லாமலிருக்காது என்பது உட்பட பல வசனங்கள் ரசிக்கவைக்கின்றன.
எல்லாக்காலத்துக்கும் பொருந்தக்கூடிய கதையை எடுத்துக்கொண்ட இயக்குநர், அதை முப்பதாண்டுகளுக்கு முந்திய திரைக்கதை வடிவில் கொடுத்திருக்கிறார். விஜயகாந்த படம் பார்த்த மாதிரி இருக்கு சார், போகப்போக ரஜினி படமே பார்ப்பே என்கிற வசனம் இயக்குநர் பாபுது£யவனின் ஒப்புதல் வாக்குமூலம் போல இருக்கிறது.

Leave a Response