விஷவாயுவைக் கொடுத்துக் கொன்ற தூய இனவரலாறு பிராணவாயுவை நிறுத்திக் கொல்வதாக நீள்கிறது – ராஜநாயகம் கொந்தளிப்பு

ஆகஸ்ட் 12 – 2017,

உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூர் நகரில் பாபா ராகவ்தாஸ் (பி.ஆர்.டி) அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை குழந்தைகள் நல சிகிச்சைப் பிரிவில் கடந்த 6 நாட்களில் பிறந்த குழந்தைகள் உள்பட சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட குழந்தைகள் 63 பேர் பரிதாபமாக உயிர் இழந்தனர்.

(இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி ஆகஸ்ட் 13 ஆம் நாள் மாலை மேலும் 9 குழந்தைகள் உயிர் இழந்தன. இதனால் பலி எண்ணிக்கை 72 ஆக உயர்ந்தது)

இந்நிகழ்வில் மனம் வெதும்பி பேராசியர் ராஜநாயகம் எழுதியுள்ள பதிவில்,

அது முதல்வரின் தொகுதி. தன்னிகரில்லாத் தலைவராய் கால்நூற்றாண்டாகக் கோலோச்சிவரும் மடசாம்ராஜ்யம்.

அவர் எழுந்தருளிச் சென்ற இரண்டாம் நாளிலேயே தொடங்கியது அந்த யுத்தம்.ஹிட்லரின் ஆஷ்ட்விச் நிழல் படிந்த கொலைக்களமானது கோரக்பூர்..

விஷவாயுவைக் கொடுத்துக் கொன்ற தூய இனவரலாறு பிராணவாயுவை நிறுத்திக் கொல்வதாக நீள்கிறது.

பயந்தாங்கொள்ளிகளின் வாழ்வாதாரங்களைப் படிப்படியாய்ப் பறித்து மெல்லக்கொல்லும் சட்டங்கள் திட்டங்களே ஏழை எளியோர் முன்னேற்றத்தின் முதல்படியா?

வலுவிழந்தோரின் அடுத்த தலைமுறையைப் பூண்டோடு வேரறுக்கும் போரின் தொடக்கமே வல்லரசாவதின் அடுத்தபடியா..?

ஐந்து நாட்களில் அறுபத்துநான்கு பாலகர்களை மூச்சுத் திணறடித்துக் காவு வாங்கிக் கீதாஉபதேசக் களமானது அந்த மருத்துவமனை…

நெஞ்சுடைக்கும் துக்கத்தில் பிஞ்சுப்பிணங்களை ஏந்திய கரங்கள்…

தூய்மை குறித்துப் பிரஸ்தாபிக்கும் முதல்வர்…

இருக்கலாமோ, இதுவும் தூய்மைப்படுத்தும் பன்முகத்திட்டத்தின் ஓர் அங்கமாக…

ஒரு மாட்டுத்தொழுவத்தில் தொடர்ந்து நான்கைந்து பசுக்கள் இறந்திருந்தாலே கொந்தளித்திருக்காதா மாநிலம்… தேசியம்…முதலில் அப்படி ஒரு தொடர் மரணம் சம்பவித்திருக்க முடியுமா?

விலங்கினும் இழிய
ஏழ்மை ஈனும் குழவிகள்…

அன்புச்செல்வங்களே அடுத்த பிறவியில் நீங்கள் அற்பத்திமூன்று நாயன்மார்களாகவே பிறக்க வாய்ப்புக் கிடைத்தாலும் மறுத்துவிடுங்கள்.

அகண்ட பாரதத்தில் பசுக்களாய்ப் பிறப்பதே பாதுகாப்பானது.

ச.ராஜநாயகம். 12.08.2017

Leave a Response