மோடி, அமித்ஷா முகத்தில் சாணி அடித்த குஜராத் – எஸ்.எஸ்.சிவசங்கர்

குஜராத் ராஜ்யசபா தேர்தலில் சாம, தான, பேத, தண்ட வழிமுறைகள் அத்தனையையும் பின்பற்றி வெற்றி மட்டுமே நோக்கம் என்று செயல்பட்டது மோடி-அமித்ஷாவின் பா.ஜ.க.
ஏன் மோடி-அமித்ஷா பா.ஜ.க என்றால், மற்ற இந்திய மாநிலங்கள் எப்படியோ, குஜராத்தில் இவர்கள் தான் பா.ஜ.க. இவர்கள் இன்றி ஓரணுவும் அசையாது. ஆட்சிச் சக்கரம் சுழலாது.
எதை எல்லாம் குஜராத்தில் நடைமுறைப் படுத்தி பார்த்தார்களோ, அதை எல்லாம் இந்தியா முழுதும் செயல்படுத்தி வெற்றி கண்டார்கள். குஜராத் அவர்களது சோதனை களம் ஆனது.
மூன்று முறை குஜராத் முதல்வராக கட்சியில் கையாண்ட முறையை தான், பிரதம வேட்பாளராக மோடி அறிவிக்கப்படும் போதும் கையாண்டார்கள். பிரதமர் வேட்பாளர் ஆனார் மோடி.
போட்டியாளர்களை தயவு தாட்சண்யமின்றி அடித்து வீழ்த்துதல், இவர்களது அரசியல் பாலபாடம். அடுத்து, கட்சியில் இருக்கும் சீனியர்களை காணாமல் அடிப்பது.
குஜராத்தில் இவரால் வீழத்தப்பட்டு, கட்சியை விட்டே துரத்தப்பட்டவர் வலுவான சங்கர்சிங் வகேலா. இவர் தான் இப்போது காங்கிரஸிலிருந்து வெளியே வந்து பாரதிய ஜனதா கட்சிக்கும், அமித்ஷாவுக்கும் கைகொடுத்தவர். இது தான் காலக் கொடுமை.
ராஜ்யசபாவிற்காக அறிவித்த தேர்தல் தேதியை தள்ளி வைத்தது, காங்கிரசின் ஆறு எம்.எல்.ஏக்களை வெளியே இழுத்து காங்கிரஸ் ஆதரவை சிதறடித்தது என எல்லாம் செய்தும் அவர்களுக்கு நம்பிக்கை இல்லை.
அடுத்த கட்டம் தான், முதன்முதலாக ராஜ்யசபா தேர்தலில் ‘யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை’ என்னும் நோட்டோவை அறிமுகப் படுத்தியது. இதை எதிர்த்து காங்கிரஸ் கோர்ட்டுக்கு போனது. கோர்ட் வழக்கம் போல், நீதி வழங்கியது. தேர்தலுக்கு பிறகு விசாரணையாம்.
காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை கர்நாடகா அழைத்து வந்து பாதுகாத்து, திரும்ப குஜராத் அழைத்து வந்து வாக்களிக்க வைக்க வேண்டிய நிலை காங்கிரஸிற்கு.
கோழி குஞ்சை கவ்வ வான் மேயும் பருந்து போல், பா.ஜ.க காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை கொத்தித் தூக்க அத்தனை வழிமுறைகளிலும் முயற்சித்தது.
“எங்களுக்கு கோடிக்கணக்கில் பா.ஜ.க பணம் தர முயற்சித்தது”, என குஜராத் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் பேட்டி கொடுத்தார்கள். வருமான வரித்துறை பேட்டி கொடுத்த இவர்கள் மீதே பாய்ந்தது.
காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் தங்கியிருந்த இடத்தை ரெய்டு செய்தது. அவர்களுக்கு பாதுகாப்பளித்த கர்நாடக காங்கிரஸ் அமைச்சர் சிவக்குமார் வீடுகளை நான்கு நாட்கள் அலசியது வருமானவரித்துறை.
பா.ஜ.கவின் மத்திய அரசு, தன் பிடியில் இருக்கும் நிறுவனங்களைக் கொண்டு, ராஜ்யசபா சீட்டை பிடிக்க முயன்றதற்கு இதெல்லாம் சாட்சி. மோடியின் அதிகாரக் கூத்துகள்.
இரண்டு ராஜ்யசபா இடங்களை வெற்றி பெற எளிதான வாய்ப்பிருந்தாலும், காங்கிரசின் ஒரு இடத்தையும் தட்டி பறித்தால் தான், குஜராத் தங்கள் இரும்புப் பிடிக்குள் இருப்பதை நிரூபிக்க முடியும் என்ற எண்ணம் ஒரு பக்கம்.
இங்கே கையாளும் முறைகளுக்கு எதிர்கட்சிகள் பயந்து விடும், வழக்கம் போல் பத்திரிக்கைகள் வாய்மூடி மௌனித்திருக்கும் என்ற எண்ணம் இன்னொரு பக்கம். இதை அப்படியே பின் வரும் தேர்தல்களில் பயன்படுத்தலாம் என்பது கூடுதல் திட்டம்.
ராஜ்யசபா தேர்தலில் வாக்களிக்கும் எம்.எல்.ஏக்கள் தங்கள் கட்சி பிரதிநிதியிடம் தன் வாக்கை காட்ட அனுமதி உண்டு. அதே போல, கட்சி உத்தரவை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் கட்சிக்கு அதிகாரம் உண்டு.
காலையில் வாக்குப்பதிவு ஆரம்பித்தது. எல்லா எம்.எல்.ஏக்களும் வந்து வாக்களித்தனர். காங்கிரஸில் இருந்து விலகிய சங்கர்சிங் வகேலா ஒரு பேட்டியளித்தார். “நான் காங்கிரஸ் வேட்பாளர் அகமது பட்டேலுக்கு வாக்களிக்கவில்லை”. பா.ஜ.கவிற்கு வாக்களித்தேன் என்பதை மறைமுகமாக சொன்னார், என்ன இருந்தாலும் பழுத்த அனுபவஸ்தரல்லவா.
வாக்களிக்கும் இடத்தில் பா.ஜ.கவின் அதிகார திமிர் வெளிப்படுத்தப்பட்டது. அது தான் இப்போது அதன் முகத்தில் சாணி அடித்துள்ளது.
காங்கிரஸில் தாங்கள் விலைக்கு வாங்கிய எம்.எல்.ஏக்களின் வாக்குகளை பதிவு செய்து, அமித்ஷாவிடம் காட்ட சொன்னார்கள் பா.ஜ.கவினர். இரண்டு பேரும் தங்கள் வாக்குகளை முதலாளியிடம் காட்டினார்கள். இது அப்பட்டமான விதிமுறை மீறல்.
தேர்தல் கமிஷனில் முறையிட்டது காங்கிரஸ். பா.ஜ.கவின் மத்திய அமைச்சர் பெருமக்கள் தேர்தல் கமிஷனிற்கு படையெடுத்தார்கள். திரும்ப, திரும்ப மனு கொடுத்தார்கள். ஏற்கனவே முன்மாதிரி இருந்ததால், வேற்று நபர்களிடம் காட்டிய வாக்குகள் செல்லாது என இப்போது தேர்தல் கமிஷன் அறிவித்து விட்டது.
பாரதிய ஜனதாவின் கோர அதிகார வெறியாட்டத்திற்கு விழுந்த அடி இது. இப்போது தான் தேசிய மீடியாக்கள் தூக்கம் கலைத்துள்ளன. மோடி-அமித்ஷா வகையறாவை எதிர்க்க ஆள் இல்லை என்ற மாயை ஒரே நாளில் தகர்ந்துவிட்டது.
பா.ஜ.க செய்வதெல்லாம் அக்மார்க் நியாயம் என சொல்லும் ‘நியாயவாதிகளுக்கு’ முகத்தில் கரி. பா.ஜ.கவின் அசிங்க ஆட்டம் தேர்தல் கமிஷனால் வெளிப்பட்டு விட்டது.
இதல்லாமல் வாக்கை எண்ண விடாமல் நள்ளிரவில் பா.ஜ.க அடித்த கூத்துகள் அதிகபட்சமானது. மத்திய சட்ட மந்திரியே தேர்தல் கமிஷனுக்கு வந்தது அவர்கள் பயத்தை வெளிப்படுத்தியது.
இரவெல்லாம் தேர்தல் கமிஷன் முன்பே அமித்ஷாவும், குஜராத் முதல்வரும் தேவுடு காத்ததே, இந்தத் தேர்தல் அவர்களுக்கு எத்தகைய மானப் பிரச்சினை என்பதை வெளிக்காட்டியது.
பா.ஜ.க மூன்றாவது வேட்பாளர் போடாமல் இருந்திருந்தால், அகமது பட்டேல் போட்டியின்றி வெற்றி பெற்றிருப்பார். அது ஒரு செய்தியாகவே இருந்திருக்காது. ஆனால் ஒரு பரபரப்பான சூழலை ஏற்படுத்தி, இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்து முகத்தில் குத்து வாங்கியிருக்கிறது பா.ஜ.க.
இரண்டு விதமான ரூபாய் 500 நோட்டுகள் வெளிவந்துள்ளதையும், பணமதிப்பிழப்பீட்டு நடவடிக்கையும் பெரும் ஊழல் என நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் போர் கோலம் பூண்டது, நீண்ட நாட்களுக்கு பிறகு காங்கிரஸிற்கு உயிர் வந்தது போல் இருந்தது.
இதே நாளில், இந்த வாக்கு மதிப்பிழப்பு நடந்ததும் இரட்டை வெற்றி.
அகமது பட்டேல் தோல்வி அடைந்திருந்தால் கூட, இந்த நிகழ்வு நல்ல தொடக்கமாகவே அமைந்திருக்கும்.
ஆனால் பா.ஜ.க, மோடியின் இவ்வளவு அக்கிரமங்கள், அட்டுழியங்களை மீறி அகமது பட்டேல் வெற்றி பெற்று விட்டார்.
இது போன்ற தேர்தல்களில் அரசியல் கட்சிகள் வழக்கமாக செய்யும் நடவடிக்கைகள் தான் இது. ஆனால் இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடாத உத்தமர் மோடி என்று கட்டமைத்த பிம்பம் தகர்ந்தது இப்போது. இதற்கு மோடிக்கும், அமித்ஷாவுக்கும் தான் நன்றி சொல்ல வேண்டும்.
இந்த வெற்றி, தூங்கிக் கிடந்த காங்கிரஸை போராட்ட களத்திற்கு இழுத்து வரும். காங்கிரஸ் உயிர்பித்துக் கொள்ள பெரும் வாய்ப்பை தங்கத் தட்டில் வைத்து கொடுத்துள்ளனர் மோடி டீம்.
இந்த வெற்றி, சர்வாதிகாரத்திற்கு விழுந்த அடி, அதிகார மமதைக்கு விழுந்த அடி.
அதுவும் மோடியின் குஜராத்தில் விழுந்த அடி, மிக நல்லது நாட்டுக்கு.
# உச்சாணிக்கு உயர்த்திய குஜராத்திலேயே துவங்கியிருக்கிறது, சரிவும் !

Leave a Response