
கேப்பாபுலவு மக்கள் தமது சொந்தநிலம் கோரி கடந்த மார்ச் மாதம் 1 ம் தேதி ஆரம்பித்த போராட்டம் இன்று 119 ஆவது நாளை எட்டியுள்ள நிலையில் இன்றையதினம் கொழும்பில் பெரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டனர்.
சம உரிமை இயக்கம் முன்னிலை சோஷலிச கட்சி மற்றும் கேப்பாபுலவு மக்கள் இணைந்து இன்றுகாலை 10.30 மணியளவில் கொழும்பு கோட்டை தொடர்வண்டி நிலையம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை மேற்கொண்டனர்.
அதன்பின்னர் ஜனாதிபதி செயலகம் நோக்கி பேரணியாகச் சென்றபோது சிங்களக் காவல்துறையினர் வீதி தடையை ஏற்படுத்தினர். கலகமடக்கும் காவல்துறையினர் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ள வாகனங்கள் சகிதம் வருகைதந்து போராட்டக்காரர்களை இடைமறித்தனர்.
பின்னர் போராட்டக்காரர்களில் ஒரு சிலரை மட்டும் ஜனாதிபதி செயலகம் அழைத்துச் சென்று அங்கு ஜனாதிபதியின் செயலாளரோடு சந்திப்பொன்றை ஏற்ப்படுத்தி கொடுத்தனர்.
சென்றவர்கள் சந்திப்பை முடித்து வரும்வரை குறித்த இடத்திலேயே தரித்து நின்ற போராட்டக்காரர்கள் சந்திப்புக்குச் சென்றவர்கள் வருகை தந்ததும் அவ்விடத்தைவிட்டு கலைந்து சென்றனர். கேப்பாபுலவு போராட்டம் கொழும்புக்கு வந்ததால் சிங்களவர்கள் மத்இயில் அதிர்ச்சி அலைகள் பரவியிருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


