எழுத்தாளர் தீபச்செல்வன் எழுதும் “நடுகல்” நாவலில் இருந்து…

உருத்திரபுரம் எட்டாம் வாய்க்கால் இந்துக்கல்லூரியைத் தாண்டிப் போன யாரையோ இராணுவம் சுட்டுப்போட்டுள்ளதாக செய்திகள் வந்து கொண்டிருந்தன. நாங்கள் முறிப்பில் தஞ்சமடைந்திருந்தபோது ஒருநாள் அண்ணா வந்து அம்மாவின் முன்னால் நின்றான். சின்னம்மா குடும்பம் இப்போது வட்டக்கச்சிக்கு இடம்பெயர்ந்து விட்டார்கள். இவன் வடக்கச்சிக்கும் முறிப்புக்கும் இடையில் உள்ள யுத்த வலயமான கிளிநொச்சியை தாண்டி வந்திருந்தான்.
“அண்ணா என்னை விட்டிட்டு ஒரு இடமும் போகாதை.”
“…”
“எனக்குப் பயமாய் இருக்குது”
எனக்கோ, அண்ணா வந்தது பெரும் புளுகு. அண்ணாவும் நானும் கொய்யாமரத்தில் இருந்தோம்.
“தென்னங்கீற்றில் தென்றல் வந்துமோதும், எம் தேசம் எங்கு குண்டுவந்து வீழும்….”
அண்ணா கத்திப் பாட்டுப் படித்துக் கொண்டிருந்தான்.
“வா மாவீரர் துயிலும் இல்லத்துக்கு போவம்”
என் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு போனான். எனக்கு மாவீரர் துயிலும் இல்லத்திற்கு போக வேண்டும் என்று வெகுநாள் விருப்பம். ஒவ்வொரு மாவீரர் நாளுக்கும் பெரியம்மாவுடன் அண்ணா துயிலும் இலத்திற்குப் போவான். அங்குதான் ராசண்ணாவின் கல்லறை இருக்கிறது.
“உஷ் சத்தம் போடாதீர்கள். உங்கள் பாதச்சுவடுகளை மெதுவாகப் பதியுங்கள். இங்கே தாயக விடுதலைக்காய் மடிந்த வீரர்கள் உறங்கிக் கொண்டிருக்கின்றனர்”
என்றெழுதப்பட்ட அறிவிப்புப் பலகையைக் காட்டி. செருப்பை கழற்றிவிட்டு என்னையும் செருப்பைக் கழற்றுமாறு சைகை காட்டினான் அண்ணா.
சில போராளிகள் துயிலும் இல்லத்தில் பராமரிப்பு வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள். மெல்ல கல்லறைப் பக்கம் நகர்ந்த எங்களை “தம்பியாக்கள் இஞ்சை வாங்கோ எங்கை போறியள்?” என்று இடை மறித்தார்கள் அந்தப் போராளிகள். அவர்கள் பேச முன்னர் அண்ணா தொடங்கினான்.
“இந்திய இராணுவத்தோட நடந்த சண்டையிலை எங்கடை அண்ணா, பெரியம்மாவின்டை மகன். வீரச்சாவு அடைஞ்சவர். அவரின்டை கல்லறையைப் பாக்க வந்தனாங்கள். அவரின்டை பெயர் இரண்டாம் லெப்டினன் நீக்கிலஸ். கிளிநொச்சி இரத்தினபுரம்.”
“அந்தப் பக்கம் 18வது லைனில பாருங்கோ…”
“ஓ தெரியும்.. நான் பெரியம்மாவோடை வாறனான்…”
“அப்பச் சரி…”
“ஆனையிறவுச் சண்டையிலை வீரச்சாவடைந்த குமரன் அண்ணேன்ரை கல்லறை எது?”
“இந்த வரிசையிலை 478ஆவது இடத்தைப் பாருங்கோ”
“குமுதினியன் அண்ணை. நல்லூர்?”
“அது இஞ்ச இல்லை கோப்பாயிலை”
“பரந்தன் சண்டையில வீரச்சாவடைஞ்ச குணா அண்ணேன்ரை கல்லறை”
“விபரம் பார்த்துத்தான் சொல்ல வேணும்.”
இவர்களின் பெயரெல்லாம் இவனுக்கு எப்பிடித் தெரியும் என்ற தோரணையுடன் நின்ற என் தோள்களில் கையைப் போட்டுக் கொண்டு “நட“ என்றான் அண்ணா.
ஒவ்வொரு கல்லறைகளாகப் பார்த்துக்கொண்டிருந்தேன். கண்ணுக்கு எட்டிய தூரம் வரையில் கல்லறைகள்தான். அதில் மாவீரர்களின் பெயர், சொந்தப் பெயர், பிறந்த இடம், பிறந்த, வீரச்சாவடைந்த திகதிகள், வீரச்சாவடைந்த சம்பவம் எல்லாம் எழுதப்பட்டிருந்தன. கல்லறைகளில் உள்ளவர்கள் ஆழ்ந்துறங்க பெரும் அமைதியில் துயிலும் இல்லம் உறைந்திருந்தது. கோயில் ஒன்றைப் போல பேணப்படும் அந்தத் துயிலும் இல்லத்தில் கல்லறைகளின் அருகில் அமர்ந்து துளிர்க்கும் புற்களைப் அதனருகிலிருந்து மெல்ல மெல்ல பிடுங்கி சுத்தம் செய்தனர் சில போராளிகள்.
அண்ணா எல்லா கல்லறைகளுக்கும் மலர் மரியாதை செய்யும் பொது இடத்தில் மலர் வைத்து வணங்கிக் கொண்டிருந்தான்.
“ஏன் அண்ணா இவ்வளவு பேரும் செத்தவையள்?”
“ம்.. மாவீரர்களை கும்பிடு! அவையள் எனக்கும் உனக்குமாத்தான் போராடி வீரச்சாவடைஞ்சவையள்”
நிமிர்ந்து அண்ணாவைப் பார்த்து விட்டு, நானும் கைகளை கூப்பி வணங்கினேன்.
“அவையின்டை அம்மா, அப்பா, தம்பி எல்லாம் அழ மாட்டினமா?
“அழுவினம்தான்.”
“அவையள் பாவம் எல்லோ?”
“ஆனால் அந்த அம்மா, அப்பா, தம்பியளோடை, எங்கடை மண் எல்லாத்தையும் ஆமியிட்டை இருந்து காப்பாற்றத்தான் இவையள் வீரச்சாவு அடைஞ்சவை…”
ஒவ்வொரு கல்லறைகளையும் தொட்டுத் தடவும்போது யார் யாரோ அண்ணாக்களும் அக்காக்களுமாய் தெரிந்தன. ராசாண்ணாவுக்காக பெரியம்மா அழுகிற மாதிரி ஒவ்வொரு கல்லறையினருகிலும் தாய்மாரும் சகேதரர்களும் அழுவதைப் போலிருந்தது. கல்லறைகளனருகில் குந்தியிருந்து பெயர்களை வாசித்தேன்.
“இவர்கள் விதைக்கப்பட்டவர்கள். மீண்டும் முளைப்பார்கள்.”
என ஒரு பலகையில் எழுதப்பட்டிருந்தது.
இதை எல்லாம் பார்த்துக்கொண்டிருந்த போராளி ஒருவன் நெருங்கி வந்தான். “நீங்கள் இண்டைக்குப் பள்ளிக்கூடம் போகேல்லையா?” எங்கள் இருவரது முகத்தையும் உற்று நோக்கினான். “இல்லை அண்ணா! நாங்கள் கிளிநெச்சியில் இருந்து இடம்பெயந்து வந்திருக்கிறம். இன்னும் பள்ளிக்கூடம் சேரேல்லை” சமாளித்தான் அண்ணா. அந்தப் போராளி என்னைப் பார்த்து சற்றுக் குனிந்து எனது தலையைத் தடவியபடி “தம்பியாக்கள் நீங்கள் ஒழுங்கா படிக்க வேணும். அதுதான் நீங்கள் மாவீரர்களுக்குச் செய்யிற மரியாதை. நீங்கள் எல்லாம் படிக்க வேணும் எண்டுறதும் அவையின்டை கனவு. உங்களுக்காகத்தானே போராடி அவையள் வீரச்சாவடைஞ்சவையள். இடம்பெயர இடம்பெயர படிக்கவேணும். இதுதானே எங்கடை வாழ்க்கை.” என்று முடித்தார்.
“நாங்கள் நாளைக்கே முறிப்பு விக்கினேஸ்வரா பள்ளிக்கூடத்திலை சேருரம் அண்ணை” உறுதியளித்தான் அண்ணா. “நீங்கள் இந்த வழியாலதானே பள்ளிக்கூடம் போகவேணும். நீங்கள் பள்ளிக்கூடம் போறியளா? எண்டு பாத்துக் கொண்டிருப்பன்…” எதிர்பார்ப்புடன் புன்னகைத்தார் அந்தப் போராளி.


