
சென்னையில் ஜூன் 26 அன்று தமுஎகச – இந்திய மாணவர் சங்கம் இணைந்து நடத்திய தமிழர் உரிமை மாநாட்டை தொடங்கி வைத்து எழுத்தாளர் பிரபஞ்சன் பேசினார். அவருடைய பேச்சு,,
தமிழர் உரிமை என்பது மண்ணையும், மொழியையும் காப்பதுதான். 1965 ஆம் ஆண்டு வரை மொழியை மட்டும்தான் திணிக்க நினைத்தார்கள். இந்தியா என்பது இந்தி தேசம் என மாற்ற முயற்சித்தார்கள். இப்போது நடைபெறும் திணிப்பானது இந்தியாவை இந்துத்துவா தேசமாக மாற்றும் முயற்சி.
இந்தியாவில் முதன்முதலாக நகரம் அமைத்து வாழ்ந்தது தமிழினம் என்று வந்துவிடக்கூடாது என்பதற்காகக் கீழடியை அவர்கள் விரும்பவில்லை. கீழடி மண் என்பது நமது கலாச்சாரம்.சங்க இலக்கியம் 500 ஆண்டுகாலம் பரப்புடையது. அதன்பிறகு 700 ஆண்டுகள் கழித்து தொகுக்கப்பட்டது. 500 ஆண்டுகாலத்தில் முதல் 250 ஆண்டுகள் விவசாயத்தையும், மக்களையும் பாடியது. இதனிடையே வைதீகம் நுழைந்தது. பின்னர் எழுதிய இலக்கியங்களில் மன்னர்தான் எல்லாம் என்று எழுதப்பட்டது. இதுதான் வைதீகத்தின் குரல். 500 ஆண்டுகாலத்தில் மொழித்திணிப்பு என்பது தத்துவத்திணிப்பாக மாறியது. இதுதான் இந்துத்துவா. இப்போது இந்தியை நுழைத்து, சமஸ்கிருத்தையும் அமர்த்துவார்கள்.
மொழி ஆதிக்கத்தின் வாயிலாக பண்பாடுகள் ஊடுருவும்.இந்தியாவில் நகரம் அமைத்த தமிழினம் என்ற பெருமை தமிழனுக்கு வந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் கீழடிக்குத் தடை போடுகிறார்கள்.
கோவலன் கண்ணகியைக் கூட்டிக் கொண்டு கீழடிக்குத்தான் வந்தான். ஏனென்றால் கீழடிதான் மதுரை. அறிஞர் இராசமாணிக்கனார் 50 ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய புத்தகத்தில் திருப்பரங்குன்றம் தென்திசையில் 17 கி.மீ. தொலைவில் மதுரை இருந்தது என்கிறார். அது தற்போது நிருபணமாகி உள்ளது.
2000 ஆண்டுகளுக்கு முன்பு தமிழனுக்கு நகரம் இருந்துள்ளது. அது கூடாது என்று வடநாடு கருதுகிறது.நர்மதா நதிக்கு தென்பகுதியில் எவரும் இல்லை என்று வடநாடு கருதுகிறது. நர்மதா நதிக்கு தெற்கே உள்ள தேசம்தான் இந்தியா. தமிழகத்தின் பெருமை இந்தியாவின் பெருமை. மக்களால் கண்டுபிடிக்கப்பட்ட எதையும் நாங்கள் எதிர்க்க மாட்டோம்.
இந்தி, தமிழ் உட்பட அனைத்து மொழிகளையும் உழைக்கும்போது கண்டுபிடித்தார்கள். உழைப்பின் பயன்தான் மொழி, பண்பாடு. எனவே, கீழடியை ஒருபோதும் விட்டுக் கொடுக்க மாட்டோம். கீழடி ஆய்வு தொடர வேண்டும். அதற்குத் தொடர்ந்து போராட வேண்டும். மொழி, மண்ணைப் பாதுகாக்க தொடர்ந்து போராடுவோம்.
மாணவர்கள் படிக்கத் தொடங்குபவர்கள். ஆசிரியர்கள் படித்துக் கொண்டே இருக்க வேண்டும். சங்க இலக்கியத்தின் செழுமையைப் படிப்போம். தமிழ்மொழியை விமர்சனக் கண்ணோட்டத்தோடு அணுக வேண்டும். தொடர்ந்து போராடுவோம். மொழி, மண்ணை, வரலாற்றைப் பாதுகாப்போம். இந்த உணர்ச்சி நீடிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.


