நீண்டகாலமாகச் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளைச் சந்திப்பதற்காக அவர்களின் உறவினர்கள் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு மகசீன் சிறைச்சாலையை நோக்கிய பயணம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர்.
ஐக்கிய நாடுகள் சர்வதேச மனித உரிமைகள் பேரவையின் அமர்வு ஜெனீவாவில் இன்று (12.09.2022) ஆரம்பமாகின்ற நிலையில் பயங்கரவாதத் தடைச்சட்டம் மற்றும் அதன்கீழ் கைதுசெய்யப்பட்டுச் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் தொடர்பாகச் சர்வதேசக் கவனத்தை ஈர்க்கும் வகையில் உறவினர்களது இந்தப் பயணம் கடந்த சனிக்கிழமை (10.09.2022) ஆரம்பமாகியது.
குரல் அற்றவர்கள் குரல் அமைப்பு யாழ். ஊடக அமையத்தில் இது தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பை நிகழ்த்திய பின்னர், ஊடக அமையத்தின் முன்றலில் இருந்து ஒழுங்குசெய்யப்பட்ட பேருந்தில் கொழும்பை நோக்கிய இப்பயணம் ஆரம்பமானது.
கொழும்பு மகசீன் சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகள் உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்கள் சிறைச்சாலையை நோக்கி மேற்கொண்டுள்ள இந்தப் பயணத்துக்கு வலுச்சேர்க்கும் விதமாக அவர்களை அரசியற்கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் சந்தித்து வழியனுப்பி வைத்துள்ளனர்.
வழியனுப்பு நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் க.வி.விக்னேஸ்வரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம், தமிழ்த்தேசியப்பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன், யாழ் மறைமாவட்ட குருமுதல்வர் ஜெபரட்ணம் அடிகளார், சிவபூமி அறக்கட்டளையின் முதல்வர் கலாநிதி ஆறு. திருமுருகன், பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரெழுச்சி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் வேலன் சுவாமிகள், யாழ் மாநகரசபையின் பிரதி மாநகரபிதா து. ஈசன், மாநகரசபை உறுப்பினர் வ.பார்த்தீபன், காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் சங்கத்தின் யாழ். மாவட்டப் பிரதிநிதிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
இவர்களால், அரசியல் கைதிகளுக்கு வழங்குவதற்கென உலர் உணவுகள் அடங்கிய அத்தியாவசியப் பொருட்கள் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன.
பயணத்துக்கான ஒழுங்குபடுத்தல்களை குரல் அற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மு.கோமகன் மேற்கொண்டிருந்தார்.