முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி விஜய்பாஸ்கர் வீடுகளில் சோதனை – நடந்தது என்ன?

எல்இடி விளக்குகள் கொள்முதலுக்கான டெண்டர் விட்டதில் அரசுக்கு ரூ.500 கோடி இழப்பு ஏற்படுத்தியது மற்றும் முறைகேடான வகையில் தனியார் மருத்துவக் கல்லூரி தொடங்க அனுமதி வழங்கியது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின்படி அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி மற்றும் சி.விஜயபாஸ்கர் மீது இலஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்து தமிழகம் முழுவதும் 44 இடங்களில் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.

இந்தச் சோதனையில் பினாமிகள் பெயரில் உள்ள நிறுவனங்களுக்கு எல்இடி விளக்குகள் டெண்டர் விட்டதற்கான ஆவணங்கள் மற்றும் மோசடி தொடர்பான 436 முக்கிய ஆவணங்கள், 3.10 கிலோ தங்கம், 9 கிலோ வெள்ளி, ரூ.51.35 இலட்சம் ரொக்கம், 10 சொகுசு மகிழுந்துகளை இலஞ்ச ஒழிப்புத்துறை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிமுக ஆட்சியின்போது உள்ளாட்சித்துறை அமைச்சராகப் பதவி வகித்தவர் எஸ்.பி.வேலுமணி. தற்போது தொண்டாமுத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். இவர் 2014-2021 கால கட்டத்தில் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தார். இவரது பணிக்காலத்தில் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி பல்வேறு முறைகேட்டில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

அதன்படி கடந்த ஆகஸ்ட் மாதம் எஸ்.பி.வேலுமணி உட்பட 17 பேர் மீது இலஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்து தமிழகம் முழுவதும் 58 இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர். அந்தச் சோதனையில், ரூ.13 இலட்சம் ரொக்கம் மற்றும் தங்க நகைகள், பல கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

பின்னர் சென்னை, கோவை மாநகராட்சியில் நடந்த முறைகேடு தொடர்பாகவும் அவரது வீடு மற்றும் நண்பர்களின் வீடுகளில் இலஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தியது. மேலும், எஸ்.பி.வேலுமணி தனது பணிக்காலத்தில் உள்ளாட்சித்துறையின் கீழ் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் எல்இடி விளக்குகள் கொள்முதல் செய்யப்பட்டது. விளக்குகள் கொள்முதல் செய்ததில் பெரிய அளவில் முறைகேடு செய்து தனக்கு நெருக்கமானவர்களின் நிறுவனங்களுக்கு அரசு விதிகளுக்கு மாறாக டெண்டர் வழங்கியுள்ளார். அந்த வகையில் தமிழக அரசுக்கு எஸ்.பி.வேலுமணி ரூ.500 கோடி வருவாய் இழப்பு ஏற்படுத்தியது விசாரணையில் தெரியவந்துள்ளது.

அதைதொடர்ந்து எஸ்.பி.வேலுமணி, அவரது நண்பரான சந்திரபிரகாஷ், சந்திரசேகர், சீனிவாசன், ராஜன், ராதாகிருஷ்ணன், விஜயகுமார் உட்பட 10 பேர் மீது இலஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்தது. அதன்படி எஸ்.பி.வேலுமணி மற்றும் அவரது நண்பர்களான 9 பேருக்குச் சொந்தமான வீடுகள், அலுவலகங்கள், நிறுவனங்கள் என சென்னையில் 9 இடங்கள், கோவையில் 14 இடங்கள், திருச்சியில் 2 இடங்கள், செங்கல்பட்டு, தாம்பரம், ஆவடி என மொத்தம் தமிழகம் முழுவதும் 31 இடங்களில் நேற்று அதிகாலை முதல் மாலை வரை இலஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் ஒரே நேரத்தில் காவல்துறை பாதுகாப்புடன் அதிரடி சோதனை நடத்தினர்.

அந்த வகையில், எஸ்.பி.வேலுமணியின் கோவை சுகுணாபுரம் வீட்டில் இலஞ்ச ஒழிப்புத்துறை ஏடிஎஸ்பி திவ்யா தலைமையில் சோதனை நடந்தது. எஸ்.பி.வேலுமணியின் அண்ணன் அன்பரசன் வீடு, கோவை அதிமுக நிர்வாகி சந்திரசேகர் வீடு, பீளமேட்டில் உள்ள கேசிபி இன்ஜினியரிங் நிறுவன நிர்வாக இயக்குநர் சந்திரபிரகாஷ் வீடு மற்றும் தொண்டாமுத்தூர், வடவள்ளி பகுதிகளில் உள்ள பினாமிகளின் வீடுகள் மற்றும் சென்னை அருகே உள்ள செங்கல்பட்டு கோகுலாபுரம் 2வது தெருவைச் சேர்ந்தவர் வேலுமணியின் ஆதரவாளர் கணேஷ்குமார் வீட்டிலும் சோதனை நடந்தது.

அதேபோல், தாம்பரம், சானடோரியம் ஜிஎஸ்டி சாலையில் எஸ்.பி.வேலுமணிக்கு நெருக்கமான கணபதி என்பவருக்குச் சொந்தமான எலக்ட்ரிக்கல் கடை உள்ளது. இங்கிருந்துதான் எல்இடி பல்புகள் சப்ளை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்தக் கடையில் 5 பேர் கொண்ட இலஞ்ச ஒழிப்புட்த்துறையினர் சோதனை நடத்தினர். சென்னை நங்கநல்லூர் கணபதி தெருவில் வசித்து வரும் கட்டிட கான்ட்ராக்டரான வேலுமணியின் தீவிர ஆதரவாளர் சபேஷன்(60), பொதுப்பணித்துறை, மாநகராட்சி கான்ட்ராக்ட் மற்றும் மின்சார தெருவிளக்கு பணிகளை டெண்டர் எடுத்து செய்து வருகிறார். இவரது வீட்டில் கூடுதல் எஸ்.பி.தேவநாதன் தலைமையில் சோதனை நடந்தது. அம்பத்தூர் ஞானமூர்த்தி நகரில் சபரி எலக்ரிக்கல்ஸ் உரிமையாளர் ராதாகிருஷ்ணன் வீடு என மொத்தம் தமிழகம் முழுவதும் 31 இடங்களில் சோதனை நடந்தது.

இந்தச் சோதனையில், எஸ்.பி.வேலுமணி அவரது நண்பர்கள், பினாமிகளுக்கு சொந்தமான 31 இடங்களில் இருந்து ரூ.32.98 இலட்சம் ரொக்கம், 1,228 கிராம் தங்க நகைகள், 948 கிராம் வெள்ளிப் பொருட்கள் 10 சொகுசு மகிழுந்துகள், மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய மற்றும் பினாமிகள் பெயரில் உள்ள 316 சொத்து ஆவணங்கள், 2 வங்கிப் பெட்டக சாவிகள் பறிமுதல் செய்யப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களை வைத்து எஸ்.பி.வேலுமணி மற்றும் எல்இடி விளக்கு டெண்டர் எடுத்த நிறுவனங்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

அதேபோல், அதிமுக ஆட்சியில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தவர் சி.விஜயபாஸ்கர். இவர் தற்போது விராலிமலை தொகுதி சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்.

இவர், தனது பதவிக் காலத்தில் குறிப்பாக 2020 ஆம் ஆண்டு திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை மஞ்சங்காரணையில் செயல்பட்டு வரும் வேல்ஸ் தனியார் மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையில் மாணவர் சேர்க்கையை 150 ஆக ஆரம்பிக்க விண்ணப்பத்தின் பேரில் கடந்த 2020 ஆம் ஆண்டு மருத்துவக்குழு ஆய்வு செய்து சான்று அளித்தது. அதில், தேசிய மருத்துவக் குழுமத்தின் விதிமுறைகளுக்கு முரணாக முறைகேட்டில் ஈடுபட்டு விஜயபாஸ்கர் சான்றிதழ் அளித்திருந்தது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அந்த ஆதாரத்தின் படி முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், வேல்ஸ் மருத்துவக்கல்லூரி டிரஸ்டி ஐசரி கணேஷ், அந்த மருத்துவக் கல்லூரியின் டீன் சீனிவாசராஜ் மற்றும் மருத்துவக்கல்லூரியில் உள்கட்டமைப்பு தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை அளித்த அப்போதைய சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி டீன் பாலாஜிநாதன், ஆர்த்தோ பிரிவு பேராசிரியர் மருத்துவர் மனோகர், நோயியல் துறை பேராசிரியர் மருத்துவர் சுஜாதா, மருந்தியல் துறை பேராசிரியர் வசந்தகுமார் ஆகிய 7 பேர் மீது இலஞ்ச ஒழிப்புத்துறை நேற்று முன்தினம் வழக்குப்பதிவு செய்தனர்.

அதைத்தொடர்ந்து சி.விஜயபாஸ்கர் மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரி உரிமையாளர் ஐசரி கணேஷ், தேனி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் பாலாஜிநாதன், குமாரமங்கலம் அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியர் மனோகர் உட்பட 7 பேருக்கு சொந்தமான சென்னையில் 5 இடங்கள், சேலத்தில் 3 இடங்கள், மதுரை, தேனி, புதுக்கோட்டை, திருவள்ளூர், தாம்பரம் என மொத்தம் 13 இடங்களில் நேற்று ஒரே நேரத்தில் இலஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.

அதன்படி சி.விஜயபாஸ்கருக்கு சொந்தமான புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் சவுராஷ்டிரா தெருவில் உள்ள வீட்டில் திருச்சி இலஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி மணிகண்டன் தலைமையில் சோதனை நடத்தினர்.
வீட்டில் சி.விஜயபாஸ்கர் பெற்றோர் மட்டும் இருந்தனர்.

இதேபோல் திருச்சி கிராப்பட்டியில் உள்ள விஜயபாஸ்கரின் உறவினருக்குச் சொந்தமான எஸ்.ஏ.எஸ் பாட்லர்ஸ் நிறுவனம், சேலத்தில் அஸ்தம்பட்டி பழனியப்பாநகரில் உள்ள நோயியல் துறை பேராசிரியர் மருத்துவர் சுஜாதாவின் வீட்டில் டிஎஸ்பி ஜெய்குமார் தலைமையில் 6 பேர் சோதனை நடத்தினர். சேலம் சீரங்கப்பாளையத்தில் உள்ள ஆர்த்தோ பிரிவு பேராசிரியர் மருத்துவர் மனோகர் வீடு, சூரமங்கலம் சுப்பிரமணியநகர் பாரதி தெருவில் உள்ள மருந்தியல் துறை பேராசிரியர் மருத்துவர் வசந்தகுமாரின் வீட்டிலும் இலஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தினர்.

அதேபோல், மதுரை புதூர் ஆத்திகுளம் பகுதியில் ஜவஹர்புரம் மாரியம்மன் கோயில் தெருவில் வசிக்கும் தேனி அரசு மருத்துவக் கல்லூரியின் முதல்வரான டாக்டர் பாலாஜிநாதனின் மருத்துவமனையுடன் கூடிய வீடு, சென்னை மற்றும் மதுரை இலஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தினர். சென்னையைப் பொருத்தமட்டில் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்குச் சொந்தமான அடையார் எல்பி சாலையில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு வீடு, கீழ்ப்பாக்கம் ரெம்ஸ் தெருவில் உள்ள விஜயசாந்தி அடுக்குமாடிக் குடியிருப்பு வீடு, ஈஞ்சம்பாக்கம் பாரதி அவென்யூவில் வசித்து வரும் வேல்ஸ் மருத்துவ கல்லூரி மருத்துவமனை உரிமையாளர் ஐசரி கணேஷ் வீடு, செனாய் நகர் நாதமூனி தெருவில் வசித்து வரும் வேல்ஸ் மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர் சீனிவாசராஜ் வீடு, நந்தனம் அண்ணாசாலையில் உள்ள வேல்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் நிர்வாக அலுவலகம் என 5 இடங்களில் சோதனை நடந்தது.

அதில், முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மற்றும் வேல்ஸ் மருத்துவக் கல்லூரி உரிமையாளர், அரசு மருத்துவக் குழுவில் இருந்த 4 டாக்டர்களின் வீடுகள் என 13 இடங்களில் இருந்து மட்டும் ரூ.18.37 இலட்சம் ரொக்கம், 1,872 கிராம் தங்கம் நகைகள், 8.28 கிலோ வெள்ளிப் பொருட்கள் மற்றும் வழக்கு தொடர்பான 120 ஆவணங்கள், 1 சிடி, 1 பென்டிரைவ், 2 ஐ-போன்கள், 4 வங்கிப் பாதுகாப்புப் பெட்டக சாவிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

Leave a Response