திருப்பதி லட்டு சிக்கல் – உத்தரகாண்ட்டில் திடீர் சோதனை

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வழங்கப்பட்டு வரும் பிரசாத லட்டு தயாரிக்க,விலங்கு கொழுப்பு கலந்த நெய்யைப் பயன்படுத்தியதாக முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு பரபரப்பு குற்றச்சாட்டை எழுப்பினார்.லட்டிற்கு தயாரிக்கப்படும் நெய் சுத்தமானது இல்லை. அதில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டிருந்தது என முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அரசு மீது குற்றம் சாட்டியிருந்தார்.

இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.அந்த வழக்கு விசாரணையில் லட்டு விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றம் சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்து உத்தரவிட்டது.இதில் சிபிஐ-யில் இருந்து இரண்டு அதிகாரிகள் இருப்பார்கள். ஆந்திர பிரதேச மாநில காவல்துறையில் இருந்து இரண்டு அதிகாரிகள் இருப்பார்கள். FSSAI-யின் மூத்த அதிகாரி ஒருவர் இருப்பார் என உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் ஆந்திரப் பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த உணவுப் பாதுகாப்பு அதிகாரிகளின் கூட்டுக் குழு,உத்தரகாண்ட் மாநிலம் ரூர்க்கியில் உள்ள பகவான்பூரில் உள்ள நெய் தயாரிக்கும் நிறுவனத்தில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

அந்த நெய் தயாரிப்பு நிறுவனம், திருப்பதி பாலாஜி கோயிலுக்கு பக்தர்களுக்கு வழங்கப்படும் புனிதமான ‘லட்டுகள்’ தயாரிப்பதற்காக சுமார் 70,000 கிலோ நெய்யை வழங்கியதாகத் தகவல் வெளியாகியது.

கோயிலின் பிரசாத லட்டுகளில் பயன்படுத்தப்படும் நெய் உத்தரகண்ட் மாநிலம் பக்வான்பூரில் உள்ள சௌலி ஷஹாபுதீன்பூரில் உள்ள ஒரு நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது என்பது விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்றம் ஒரு சிறப்புக்குழுவை அமைத்து விசாரிக்க உத்தரவிட்ட பின்பும் ஆந்திர அரசின் உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் பாஜக ஆளும் உத்தரகாண்ட் மாநில உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் இணைந்து இப்படி ஒரு சோதனையை மேற்கொண்டதும் அச்செய்தியைப் பரப்பியிருப்பதும் பல்வேறு ஐயங்களை ஏற்படுத்தியுள்ளதாக திருப்பதி பக்தர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

Leave a Response