எடப்பாடி ஆட்சியைக் கவிழ்க்க ஸ்டாலினுக்கு பழ.நெடுமாறன் புது யோசனை

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் நடந்த ரோட்டரி சங்க விழாவில், தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் ஜூன் 19 அன்று கலந்து கொண்டார். முன்னதாக அவர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

சட்டமன்றத்தில் பலம் பொருந்திய எதிர்க்கட்சியாக தி.மு.க. விளங்குகிறது. இவர்கள், சட்டமன்றத்தில் மக்களின் பிரச்சினைகளை சுட்டிக்காட்டி அரசுக்கு நெருக்கடி ஏற்படுத்தி இருக்க வேண்டும். ஆனால் கவர்னரை சந்தித்து, இந்த ஆட்சியின் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வர வேண்டும் என்று மீண்டும் சொல்வது சட்டமன்ற மரபுக்கு எதிரானது. இதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

தற்போது நடக்கிற கூட்டத்தொடரில் மானியக்கோரிக்கைகள் குறித்து விவாதிக்கப்படுகிறது. ஒரு வெட்டுத் தீர்மானத்தைக் கொண்டு வந்து, அதன் மீது நம்பிக்கை வாக்கெடுப்பை தி.மு.க. நடத்தியிருக்க வேண்டும். இந்த வாக்கெடுப்பில் தோற்றுப்போனால் அரசு பதவி விலக வேண்டும். இதுதான் சட்டமன்ற விதிமுறை ஆகும்.

ஆனால் இதனை விடுத்து, ஆளுநரைச் சந்தித்து கொல்லைப்புற வழியாக ஆட்சியைக் கவிழ்க்க முயற்சி செய்வது ஜனநாயக மரபுகளுக்கு விரோதமானது.

கோவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அலுவலகம் தாக்கப்பட்டதைக் கண்டிக்கிறேன்.

ஆர்.கே நகர் தொகுதியில் பணம் பட்டுவாடா புகார் குறித்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற ஜனநாயகத்துக்கு எதிரான நடவடிக்கை, வேறு எங்கும் நடைபெறாத வகையில் தேர்தல் ஆணையம் கவனிக்க வேண்டும்

இவ்வாறு பழ.நெடுமாறன் கூறினார்.

Leave a Response