மோடி ஆட்சிக்காலம் இந்தியாவின் இருண்டகாலம் – சீமான் கடும்தாக்கு

காரைக்கால் மதகடி அரசலாறு பாலம் அருகில் நாம் தமிழர் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.மரிஅந்துவான் தலைமை தாங்கினார்.

கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:-

மத்தியில் உள்ள மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகளைக் கடந்தும் இதுவரை தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றைக்கூட நிறைவேற்றவில்லை. விவசாயிகளின் பயிர்க்கடனை இரத்து செய்யவில்லை. மத்தியப்பிரதேசத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை சுட்டுக் கொல்கின்றனர். பணமதிப்பிழப்பை செய்து நாட்டை 15 ஆண்டுகளுக்கு பின்னோக்கிக் கொண்டு சென்றுவிட்டனர்.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள இந்தியர்களின் கறுப்புப் பணத்தை மீட்டு ஒவ்வொரு இந்தியரின் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்வோம் என்று கூறினார்கள். அதை நம்பி வாக்களித்த மக்களை அவர்கள் திட்டமிட்டு ஏமாற்றி விட்டனர். வங்கியில் டெபாசிட் செய்த தங்களது பணத்தை எடுக்கக்கூட விடாமல் பலவித தடைகளை இந்த அரசு ஏற்படுத்தியது. மத்தியில் பா.ஜ.க. ஆட்சி செய்யும் காலம் இந்தியாவின் இருண்ட காலமாக விளங்குகிறது.

நாடு வளர்ச்சியை நோக்கிச் செல்வதற்குப் பதிலாக பின்னோக்கிச் செல்கிறது. இதற்கு மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசின் தவறான கொள்கை முடிவுகள்தான் காரணமாகும். பா.ஜ.க, காங்கிரசு ஆகிய இரண்டு கட்சிகளும் நமது இந்திய தேசத்திற்கு எதிரான கட்சிகள்தான்.

இவ்வாறு சீமான் பேசினார்.

Leave a Response