‘சங்கமித்ரா’வில் இருந்து ஸ்ருதிஹாசன் அதிரடி விலகல் ; காரணம் இதுதான்..!


‘பாகுபலி’ படத்தில் அனுஷ்காவுக்கும், தமன்னாவுக்கும் கிடைத்த பெரும் புகழையும் பார்த்து நமக்கும் இப்படி ஒரு பிரமாண்ட படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்காதா என ஏங்கும் நடிகைகள் பலர் இருக்கின்றனர்.. ஆனால் ‘சுந்தர்.சி இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாக இருக்கும் ‘சங்கமித்ரா’ என்கிற வரலாற்று படத்தில் நடிக்கும் வாய்ப்பு அதிர்ஷ்டவசமாக ஸ்ருதிஹாசனை தேடி வந்தது.

ஆனால் இப்போது என்ன நினைத்தாரோ தெரியவில்லை.. அந்தப்படத்தில் இருந்து ஸ்ருதிஹாசன் விலகுவதாக அறிவித்துள்ளார்.. தயாரிப்பு நிறுவனமும் இதை உறுதிப்படுத்தி இருக்கிறது. இதுபற்றி ஸ்ருதிஹாசன் தரப்பில் இருந்து மழுப்பலான விளக்கம் தரப்பட்டுள்ளது.

“துரதிர்ஷ்டவசமாக சங்கமித்ராவில் பங்காற்ற வேண்டாம் என்ற முடிவை ஸ்ருதிஹாசன் எடுக்கும் நிலையில் உள்ளார். இந்த படம் எவ்வளவு பெரியது, 2 வருடங்கள் படப்பிடிப்புக்கான தேதிகள் என அனைத்தும் தெரிந்தே ஸ்ருதிஹாசன் நடிக்க வந்தார். தனது கதாபாத்திரத்துக்கான பயிற்சி, முழு வடிவ திரைக்கதை மற்றும் முறையான படப்பிடிப்பு தேதிகள் ஆகியவை குறித்த முக்கியத்துவம் அவருக்கு தெரியும்.

படப்பிடிப்புக்கு தயாராக, ஏப்ரல் மாதத்திலிருந்து சிறந்த சண்டைப் பயிற்சியாளரிடம் பயிற்சி பெற ஆரம்பித்துவிட்டார். ஆனல், சங்கமித்ரா படத்தின் மீது அவருக்கிருந்த ஆர்வம், அர்ப்பணிப்பு ஆகியவற்றை தாண்டி, இந்த முடிவை எடுக்கவேண்டியிருந்தது. முழுமையான ஸ்க்ரிப்ட் அவருக்கு தரப்படவில்லை. படப்பிடிப்பு தேதிகளும் சரியாக முடிவு செய்யப்படவில்லை. இதுவே அவரது முடிவுக்குக் காரணம்” என அந்த விளக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Response