“கபாலி” படத்தின் இரண்டாம் பகுதியைப் படம்பிடிக்க மலேசியா வருமாறு பிரதமர் நஜிப்அப்துல்ரசாக்,ரஜினிகாந்துக்கு விடுத்துள்ள அழைப்பை அரசாங்கம்மறுபரிசீலனை செய்யவேண்டும் என ஸ்ரீடெலிமா சட்டமன்றஉறுப்பினர் ஆர்.எஸ்.என்.ராயர் கேட்டுக்கொண்டிருக்கிறார்.
நஜிப் அண்மையில் சென்னை வந்திருந்தபோது,ரஜினி வீட்டுக்கு வந்து அந்த அழைப்பை விடுத்தார்.
மலேசியாவில் கடந்தஆண்டு வெளியிடப்பட்டு மிகப்பெரிய வெற்றியைக் கண்ட கபாலி படத்தால் விளைந்த நன்மைகளைவிடத் தீமைகளே அதிகம் என்றும் ஸ்ரீடெலிமா சட்டமன்றஉறுப்பினர் ஆர்.எஸ்.என்.ராயர் கூறியிருக்கிறார்.
“மாறாக, அரசாங்கம் உள்நாட்டு இந்தியஇயக்குநர்களுக்கும் நடிகர்களுக்கும் உதவி உள்நாட்டு இந்திய திரைப்படத்துறையை ஊக்குவிக்க வேண்டும்.
“உள்நாட்டில் இந்தியப்படத் தயாரிப்புக்கு ஆதரவுகொடுங்கள்.அது மலேசியரிடையே ஒற்றுமை,பணிவன்பு,பண்பாட்டுப் பல்வகைமை,மூத்தோரை மதித்தல்முதலிய பண்புகளை வளர்க்கும்”, எனவும் ராயர் கூறியிருக்கிறார்.
“கபாலி” கலாச்சாரம் என்ற ஒன்று பள்ளிகளில்,குறிப்பாக, இந்திய மாணவரிடையே பரவியிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
அதன்காரணமாகத்தான் 04, 24, 08, 36 குண்டர் கும்பல்களில்சேரும் போக்கு அதிகமாகிக் கொண்டிருக்கிறது.கடந்த வாரம் கிள்ளானில் ஒரு பள்ளியில் நிகழ்ந்த சம்பவம் “கபாலி” கலாச்சாரத்தின் வெளிப்பாடுதான் எனவும் ராயர் குறிப்பிட்டுள்ளார்.
கபாலி படத்தில் ரஜினி கேங்ஸ்டர் தலைவராக நடித்திருந்தார். மலேசியாவில் இதுபோன்று பல குழுக்கள் செயல்படுவதும் அதனால் பல சிக்கல்கள் அடிக்கடி நடக்கவும் செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.